லட்சுமி தமிழ் பயிலும் மைய ஆண்டு விழா
ஏப்ரல் 1, 2012 அன்று, இலட்சுமி தமிழ் பயிலும் மையத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அட்லாண்டாவில் இலட்சுமி சங்கர் அவர்களால் இம்மையம் நடத்தப்பட்டு வருகிறது. இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றுடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாணவர்கள் சுரேஷ், சிந்து ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆசிரியர் சுஜாதா நாதன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி முதல்வர் இலட்சுமி சங்கர் பள்ளியின் பணிகளை விளக்கிப் பேசினார். ஜெயா மாறன் விழாவிற்குத் தலைமை தாங்கிப் பேச்சு மொழியின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

அடுத்து வந்த கலைநிகழ்ச்சியில் முதலாவதாக மாடு மேய்க்கும் கண்ணனாக சித்தார்த்தும் அவனுக்குக் கல்கண்டும் சீனியும் கொடுத்துத் தடுக்கும் யசோதையாக ஸ்ரீநிதியும் பாடிய பாடல் அழகு. மதுரை மீனாட்சி அம்மனின் வாழ்க்கை வரலாற்றைக் கூறி உள்ளத்தைக் கொள்ளை கொண்டாள் சௌமியா. ஸ்ருதியும் ஷோபனாவும் திருப்புகழைப் பாடினர். பிரியா இராமச்சதிரன், லலிதா சந்திரசேகரின் வகுப்பு மாணவர்கள் முறையே உலகநீதியையும் திருக்குறளையும் ஓதினார்கள்.

'அறிவு கெட்ட அப்பு', 'நட்பு', 'தெனாலி ஒரு திறமைசாலி' ஆகிய நாடகங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. சமிக்ஷா, ஆதர்ஷ், சித்தார்த் ஆகியோர் தமிழின் செம்மை, மேன்மை மற்றும் தமிழ் பேசுவதன் அவசியம் ஆகியவற்றைப் பற்றிச் சிறப்பாகப் பேசினர். சஞ்சய், கிருஷ்ணா ஆகியோர் இனிமையாகப் பாடினர். பின்னர் பிள்ளைகள் பாடிய 'வெள்ளைப் பூக்கள்', 'முகுந்தா முகுந்தா' முதலிய பாடல்களுக்கு மாணவர்கள் ஆடியது ரசிக்கும்படி இருந்தன.

பின்னர், திருக்குறள், ஆத்திச்சூடி, வார்த்தை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன. தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம், உணவு, விளையாட்டுக்கள், தற்காப்புக் கலைகள், கோயில்கள் போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் திறமிக்க காட்டியங்களைச் செய்திருந்தனர். பார்வையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 5 காட்டியங்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி ஆசிரியர்கள் ராஜி ராமச்சதிரன், பெரியண்ணன் சந்திரசேகரன், ஹேமா மோகன், பிரியா ராமச்சந்திரன், லலிதா சந்திரசேகரன், வள்ளிக்கண்ணு முத்தையா, பிரியா விஜய், வந்தனா இராமன், ரேணுகா சந்திரன், சுஜாதா நாதன், அகிலா சுரேஷ் ஆகியோருக்குச் செல்வி அவ்வை கூறிய நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

ஜெயா மாறன்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com