சிவ முருகன் கோவில்: அஞ்சலி நாட்யா
ஏப்ரல் 15, 2012 அன்று கான்கார்ட் சிவ முருகன் கோவிலுக்கு நிதி திரட்டு முகமாக 'அஞ்சலி நாட்யா' நடனப் பள்ளி ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியது. ராதிகா கிரி அவர்களின் தலைமையில் 2006ல் இருந்து இயங்கிவரும் இந்தப் பள்ளியின் மூன்றாவது நிதி திரட்டும் நிகழ்ச்சியாகும் இது. 'சிவ சிவாய' என்ற தலைப்பில் அமைந்த இந்நிகழ்ச்சி 'அங்கீகம் புவனம்' என்ற புஷ்பாஞ்சலியுடன் தொடங்கியது. தொடர்ந்து சதுஸ்ர ஏகதாள அலாரிப்பு இடம்பெற்றது. விறுவிறுப்பான நடேச கௌத்துவத்தைத் தொடர்ந்து ராகமாலிகையில் அமைந்த ஜதிஸ்வரம் வழங்கப்பட்டது.

பின்னர் குரு ராதிகா கிரி, டாக்டர் பாலமுரளிக்ருஷ்ணாவின் 'அம்மா ஆனந்ததாயினி' என்ற வர்ணத்திற்கு நடனமாடினார். அடுத்து வந்தது மதுரை முரளிதரன் இயற்றிய 'ஆனந்தம் பொங்கும் தாண்டவம்' என்ற பாடலுக்கான நடனம். 'யாருக்கும் அடங்காத நீலி' என்ற ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் ஆபோகி ராகக் கீர்த்தனை தாண்டவம், லாஸ்யம் ஆகியவை மூலம் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை வெளிக்கொணர்ந்தது. 'தெருவில் வாரானோ' (கமாஸ்) சிவனின் வரவுக்காக காத்திருக்கும் நாயகியின் ஏக்கத்தைச் சொல்வதாக அமைந்திருந்தது. இதற்கு ராதிகா கிரியின் மாணவி அழகாக அபிநயித்தார். அழகான கோர்வைகளுடன் அமைந்திருந்த மதுரை N. கிருஷ்ண அய்யங்காரின் ரேவதி ராகத் தில்லானாவுக்கு 17 குழந்தைகள் ஒன்றாக நடனமாடியது அற்புதக் காட்சி. பின்னணியில் காயத்ரி மந்திரம் மென்மையாக ஒலிக்க மாணவர்கள் அனைவரும் திரண்டு மங்களத்தோடு நிறைவு செய்தனர்.

சபிதா பாலச்சந்திரன்,
சாரடோகா, கலிஃபோர்னியா

© TamilOnline.com