பென்சில்வேனியா: சிருங்கேரி அறக்கட்டளை விழா
2012 ஏப்ரல் 14, 15 தேதிகளில் ஸ்ட்ரௌட்ஸ்பர்கில் (பென்சில்வேனியா) ஜகத்குரு தட்சிணாம்னாய சாரதா பீடத்தின் 34வது பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர மகாசுவாமிகளின் பீடாரோகண நூற்றாண்டு விழாவும், சத்குரு தியாகராஜ சுவாமிகள் தினமும் சிருங்கேரி வித்யாபாரதி அறக்கட்டளையில் கொண்டாடப்பட்டன. 14ம் தேதியன்று நடந்த நூற்றாண்டு விழாவில் அமெரிக்காவின் பல பகுதிகளிலும் இருந்து வந்திருந்த 130 வேதபண்டிதர்கள் கௌரவிக்கப்பட்டனர். தலைவர் S.S. அய்யர் வர்வேற்றார். அறக்கட்டளையின் தலைவர் யக்ஞ சுப்ரமணியம் அறிமுகவுரையில் வேதங்களின் சம்ஹிதை, ஜடை, கன பாடங்களைப்பற்றி விளக்கினார். பின் பீடத்தின் தலைமை நிர்வாகி Dr. V.R. கௌரிசங்கர் வேதகலாசாரத்தை இந்தியாவிற்கு வெளியே கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிப் பேசினார். இறுதியாக மகாசுவாமிகள் உரையின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது.

ஏப்ரல் 15 அன்று சத்குரு தியாகராஜர் தினம் கொண்டாடப்பட்டது. காலையில் R.K. ஸ்ரீராம்குமார் தலைமையில் பஞ்சரத்ன கிருதிகள் பாடப்பட்டன. தொடர்ந்து ஸ்ரீராம்குமார் அவர்களின் கச்சேரி நடைபெற்றது. மதியம் இசையாசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து திருவொற்றியூர், லால்குடி, கோவூர் பஞ்சரத்னங்களைப் பாடினர். குழந்தைகள் இந்நிகழ்ச்சிக்காக நன்கு பயிற்சி செய்து ஒரு சேர இணைந்து அழகாகப் பாடினர். பின்னர் குரு பத்மா ஸ்ரீனிவாசன் பயிற்றுவித்த 10 பெரியவர்கள் 'மஹித ப்ரவ்ருத்த ஸ்ரீமதி' என்ற கிருதியைப் பாடினர்.

வட அமெரிக்க 'Carnatic Idol' போட்டியில் பங்குபெற்ற சியாமளா ராமக்ருஷ்ணா 'இளம் பாடகர்' என கௌரவிக்கப்பட்டார். அவரது கச்சேரியும் நடைபெற்றது. இனி ஒவ்வோராண்டும் தியாகராஜர் தினம் 'அமெரிக்காவில் திருவையாறு' என இங்கே கொண்டாடப்படும். இதில் ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கு கொள்ள வரவேற்கப்ப்டுகிறார்கள். அடுத்த ஆண்டிலிருந்து சிருங்கேரி வித்யாபாரதி, இளம் பாடகர்களுக்குப் பரிசும், பட்டயமும் வழங்க உள்ளது.

தொடர்புக்கு: சாரதா சிட்யாலா (சிருங்கேரி வித்யா பாரதி அறக்கட்டளை): sharadac@aol.com

© TamilOnline.com