சிகாகோ: முத்தமிழ் விழா
ஏப்ரல் 21, 2012 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழா, அரோரா பாலாஜி கோவில் கலையரங்கத்தில் நடைபெற்றது. உஷா மற்றும் ஸ்ரீராமன் தமிழக நகரங்களின் சிறப்பைக் கூறி வழங்கிய இணைப்புரை புதுமையாக இருந்தது. 'தமிழ் வளர்த்த அறிஞர்கள்' என்ற தலைப்பில் இடம்பெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற திவ்யா ஆனந்தன், பிரணவ் ஐயர், ரிஷப் ரங்கநாதன் ஆகியோரின் பேச்சு அடுத்த தலைமுறையினரின் தமிழார்வத்தைக் காட்டியது. கண்கவர் கிராமிய, பாரம்பரிய மற்றும் திரையிசை நடனங்கள் நிகழ்ச்சிக்கு அணி சேர்த்தன. அரோரா மீரா நடனப் பள்ளி மாணவர்கள் தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், உருமியாட்டம் ஆகியவற்றை எழுச்சியோடு ஆடினர். பெரியோரும் சிறியோருமாகப் பதினேழு பேர் சேர்ந்து ஆடிய கிராமிய நடனம் நீண்ட கரவொலி பெற்றது.

மற்றொரு நிகழ்ச்சியான திருமண நிகழ்வுகளில் அணியும் புடவைகள், அணிகலன்கள் பற்றிய மங்கையரின் அணிவகுப்பு கண்ணுக்கு விருந்து. பேராசிரியர் மு. வரதராசன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு அவரின் எழுத்துப் பணி குறித்து டாக்டர் சந்திரன் உரையாற்றினார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினரான மகாகவி பாரதியாரின் பேத்தி முனைவர் விஜயா பாரதி, பாரதியின் படைப்புகள், வாழ்க்கைச் சரித்திரம் குறித்து எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பிரசாத் ராஜாராமன், இலக்குமி ஆனந்தன், பிரேம் ஆனந்த் பாராட்டுக்கு உரியவர்களாவர்.

மணிகண்டன்,
ரோமியோவில், இல்லினாய்

© TamilOnline.com