SPICMACAY: லாவண்யா நாட்டிய நிகழ்ச்சி
ஏப்ரல் 22, 2012 அன்று, இர்வைனில் இயங்கும் SPICMACAY, லாவண்யா அனந்தின் பரதநாட்டியக் கச்சேரியை வழங்கியது. தலைசிறந்த பல இந்திய சாஸ்திரீயக் கலைஞர்களின் கச்சேரிகளை இந்த அமைப்பு நடத்தி உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 ரசிகர்கள் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். நிருத்யாஞ்சலியில் தொடங்கிய லாவண்யா, தொடர்ந்து சிவதாண்டவத்தைக் கண்முன்னே நிறுத்தினார். லாவண்யாவின் நடனத்தில் மிக முக்கியமான வர்ணமாக தண்டாயுதபாணிப் பிள்ளை அவர்களின் 'எந்தன் சாமியை அழைத்தோடி வா சகியே' அமைந்தது. 'ஊரறிய மணம் புரிவேன் என்றானடி', 'சதா நினைவு கொண்டு மையல் மீறுதே' போன்ற வரிகளுக்கு அவரது அபிநயம் வெகு சிறப்பு. அடுத்து வந்தது புரந்தரதாசர் இயற்றிய 'சிக்குவனே இவனு'. M.S. சூகி அவர்களின் மிருதங்க ஆளுமை பல பாடல்களில் வெளிப்பட்டாலும் ஜுகல்பந்தியில் மிக எடுப்பாக இருந்தது. ஆதி சங்கரரின் அர்தநாரீஸ்வர ஸ்துதியுடன் கச்சேரி நிறைவு பெற்றது. மிருதங்கம், வயலின், நட்டுவாங்கம் என குழுவில் அனைவருமே சிறப்பாகச் செயல்பட்டனர்.



© TamilOnline.com