தெரியுமா?: பார்சிலோனா போட்டியில் ஸ்ரீக்ருபா பரிசுக் குவிப்பு!
உலக அளவிலான 'பார்ஸிலோனா டான்ஸ் கிராம்ப்ரீ' நடனப் போட்டியில் கூபர்டினோவின் 'ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனி' பல முதல் பரிசுகளை வென்றுள்ளது. 2012 ஏப்ரல் 4ம் தேதி முதல் 8ம் தேதிவரை ஸ்பெயின் நாட்டின் லொரெடீமார் நகரில் நடைபெற்ற இப்போட்டிகளில், ஸ்ரீக்ருபா 'சிறந்த செவ்வியல் கலவை நடன அமைப்பு', 'சிறந்த நாட்டுப்புற வழமை' ஆகியவற்றில் முதல் இடம் பிடித்ததோடு சிறந்த நடனக் குழுவுக்கான காடலுன்யா வட்டார மேயர் விருதையும் தட்டிச் சென்றது.

21 நாடுகளிலிருந்து 35 குழுக்கள் கலந்து கொண்ட இப்போட்டியில், பாரம்பரியம், தற்காலம், ஜாஸ், ஹிப் ஹாப், ஃப்ன்கி, கிராமியம், இசை நாடகம், நாட்டிய நாடகம், கலவை நடனம் எனப் பல்வேறு பிரிவுகளில் 10 வெவ்வேறு மொழிகளில் 180 நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

ஸ்ரீக்ருபா பள்ளியின் 13 மாணவியர் ஆடிய உற்சாகமான விறுவிறுப்பான நடனங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன. அவர்களது பாத வேலையும், அங்க அசைவுகளும் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தன. "உலகின் தலைசிறந்த நடனக்கலைஞர்கள் பங்கு கொண்ட இப்போட்டியில் பரிசு பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது" என்கிறார் ஸ்ரீக்ருபாவின் கலை இயக்குனரும், நடன ஒருங்கிணைப்பாளருமான விஷால் ரமணி.

இவர்களது வண்ணமயமான ஆடை அணிமணிகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தன. கிருஷ்ண பகவானின் லீலைகளை வர்ணிக்கும் 'கிருஷ்ண லீலா தரங்கிணி' நாட்டியத்தால் பெரிதும் கவரப்பட்ட காடலுன்யா மேயர், ஒரு சிறப்புப் பரிசை ஸ்ரீக்ருபா குழுவுக்கு இந்த ஆண்டு அறிவித்தார்.

ஸ்ரீக்ருபாவின் தீக்ஷா வெங்கடேஷ், இஷானா நாராயணன், லக்ஷ்யா பாலகிருஷ்ணன், லேகா சிராலா, மேக்னா சக்கரபர்த்தி, மேகலா சிங், மௌனிகா நாராயணன், பூஜா சிராலா, பிரீதி பாலகனி, சம்ஹிதா டாரா, சந்தியா பகாலா, தேஜஸ்வி பைரவபோட்லா, வருணிகா ராஜா ஆகியோர் குரு விஷால் ரமணியுடன் இணைந்து 3 நடன உருப்படிகளை வழங்கினர்.

மேலும் விவரங்களுக்கு:
விஷால் ரமணி - vishart@gmail.com
ராஜா ரங்கனாதன் - rajaxmi@gmail.com

இணையதளம்: www.shrikrupa.org

© TamilOnline.com