கடைசிப் புகலிடம்
எழுபது கோடி ரூபாய் போ·பர்ஸ் பணத்தை லண்டன் வங்கியிலிருந்து இரவோடு இரவாகக் குவாட்ரோச்சி எடுத்துக் கொண்டு ஓட வசதி செய்து கொடுத்த இந்திய அரசின் சாமர்த்தியத்தைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. 'பிரதம மந்திரிக்கு இது தெரியாது', 'சி.பி.ஐ.க்கு இது தெரியாது, சட்ட அமைச்சகமே இதைச் செய்தது', 'சி.பி.ஐ.தான் இதை அனுமதித்தது' என்றெல்லாம் மாற்றி மாற்றிப் பேசி மக்களை வெற்றிகரமாகக் குழப்பி வருகிறார்கள். லஞ்சம் என்பது இனியும் ஒரு பெரிய குற்றமே அல்ல என்கிற எண்ணம் பொதுவாகத் தோன்றிவிட்டது. அது அச்சம் தருவதாக இருக்கிறது.

குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடுவதுபோல, சி.பி.ஐ. இந்தப் பணத்தைப் பற்றிய தகவல்களைக் கேட்டு ஸ்விட்சர்லாந்துப் போலீசாருக்கு எழுதியிருக்கிறதாம்!

தேசபக்திக்கும் ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் தன்னை விட்டால் யாருமில்லை என்பது போலப் பேசிவந்தது பாரதிய ஜனதா கட்சி. ஆனால் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கக் கையூட்டுப் பெற்ற 11 எம்.பி.க்களில் 5 பேர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். தெஹல்காவில் இருந்த அனிருத்த பெஹல்தான் இந்தத் 'துப்பறிதலை' செய்தவர் என்று எண்ணும்போது, மாட்டிக்கொண்டவர்களில் பா.ஜ.க.வினர் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் தோன்றவில்லை. யாருக்குக் கண்ணி விரிக்கப்பட்டதோ அவர்கள் சிக்கினார்கள். அவ்வளவுதான்.

யார் சொன்னது அரசியலை அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் என்று? முதல் புகலிடமே அதுதான் போலும்.

சந்தேகமிருந்தால் அண்மையில் விரிவுபடுத்தப்பட்ட மத்திய அமைச்சரவையைப் பாருங்கள்: சிபு சோரன், ஏ.ஆர். அந்துலே... எத்தனை பேர் மேல் ஊழல் மற்றும் பிற கொடுஞ்செயல்களுக்கான வழக்குகள்.

இவர்கள் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறார்கள்.

மீண்டும் சந்திப்போம்,
ஆசிரியர் குழு
பிப்ரவரி 2006

© TamilOnline.com