கலி·போர்னியாவின் கல்வி நிலை
கலி·போர்னியாவில் கல்விக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது, அந்த நிதிக்கு மூலதனம் எது மற்றும் தற்போதைய சூழ்நிலையில் கல்விப்பணியில் அரசாங்கமும், மக்களும் எதிர்கொண்டிருக்கும் சோதனை கள் என்ன என்பதைப்பற்றி அறிய தேசிய அமெரிக்க ஊடக (New America Media) அமைப்பு, கலிபோர்னியாவின் தலைநகரான சாக்ரமென்டோவில் பிப்ரவரி 27, 28 தேதிகளில் ஒரு கருத்தாய்வகம் நடத்தியது. இதில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகக் கல்வி இலாகாவின் முதன்மை அதிகாரி, திரு. ஜேக் ஓகோன்னல் (Superintendent of Public Instruction), கல்வித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், வரவு செலவுத்திட்ட அமைப்பு அறிஞர்கள், கலாசார பத்திரிக்கை அமைப்பின் (Ethinic Media) பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

கலி·போர்னியாவில் கல்வி வளர்ச்சிக்காக செலவிடப்படும் நிதியின் அளவை நிர்ணயிக்க 1998ஆம் ஆண்டு ஒரு சட்ட முன்வரைவு (Proposition 98) மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு, பெரும்பான்மை மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. 1998ல் இருந்து அமுலில் உள்ள, கலி·போர்னியா மாநிலச் சட்டமைப்பில் சேர்க்கப்பட்ட இந்த சட்ட வழிமுறை மறுபடியும் Prop. 111 மூலம் திருத்தியமைக்கப்பட்டது.

கல்விக்கான செலவைக் கணிப்பது அவ்வளவு எளிதல்ல. அதைக்கணிக்க இந்த Prop. 98 பயன்படுத்தும் சூத்திரமும் கொஞ்சம் கடினமானதே. இது பாலர் கல்வி முதல், 12-ஆம் வகுப்பு வரை (K-12) பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கும், சமுதாயக் கல்லூரிகளுக்கும் (Community Colleges) மற்றும் அதன் மாணவ, மாணவியர்களுக்கும் வருடத்திற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பதைக் கணித்து, அரசாங்கத்தின் திட்டவழிபாடுகளுக்கு உறுதுணை புரியும். சூத்திரம் கடினமாக இருப்பினும், Prop.98-ன் குறிக்கோள் எளிதானதே. இதை மதிப்பிடுவதில் கீழேயுள்ள 5 பகுதிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன:

பொது நிதி (General Fund), மாநிலத்தின் மக்கள் தொகை, தனிநபர் வருமானம், நில/சொத்து வரி, K-12 மாணவர்களின் சராசரி தினசரி வருகை (ADA - Average Daily Attendance).

மாநிலப் பொது நிதியின் வருமானத்தில் தொய்வு ஏற்பட்டதாலும், நில/சொத்து வரி மூலம் வரும் வருமானத்தை அதிகமாக கணித்திருந்ததாலும், கல்விக்காக ஒதுக்கப் படும் குறைந்தபட்சத் தொகையில் மாறுபாடு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. Prop. 98 சூத்திரம் வருமான மதிப்பீட்டை அதிகரித்துக் காண்பித் திருக்கிறது. ஆனால் உண்மைநிலை மே மாதத்தில் தான் தெரியும் என்கிறார்கள் வரவு செலவுத் திட்டக் கணிப்பீட்டாளர்கள்.

இது ஒருபுறம் இருக்க, கலிபோர்னியாவின் கல்விநிலையை பாதிக்கும் சில காரணிகள்: தரமான பள்ளி ஆசிரியர்களின் பற்றாக்குறை, மாணவர்களின் கல்விநிலை இடைவெளி (Achievement Gap), எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வியளிக்கும் முயற்சியின் (No Child Left Behind Act) தற்போதைய நிலை.

பள்ளிக்குத் தேவையான நிதியுதவிப் பிரச்சினைகளைத் தவிர்த்தாலும், ஆசிரியர் களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே போகும் நிலமையை எப்படிச் சமாளிக்கப் போகிறோமோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறது அரசாங்கம். முக்கியமான இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என்ன?

தற்போது பணியில் இருக்கும் ஆசிரியர் களில் ஒரு பெரிய சதவிகிதத்தினர் இன்னும் சில வருடங்களில் ஓய்வுபெறப் போகிறார்கள். இப்போதைய சமுதாயச் சூழ்நிலையில் அதிக வருமானம் கொடுக்கும் எத்தனையோ வேலைவாய்ப்புகள் இருப்பதால், மக்கள் அவற்றில் ஈர்க்கப்பட்டுள்ளார்கள். மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே போகிறது. வகுப்புகள் அதிகமா கிறது, ஆசிரியர் தட்டுப்பாடு அதிகமாகிறது. இந்தப் பற்றாக்குறை நிலை அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்தாலும், கலிபோர்னியாவில் இதன் பாதிப்பு அஞ்சத்தக்கதே.

இதனால் முக்கியமாக பாதிக்கப்படுவது மாநிலத்தில் உள்ள கல்வித்தரக் குறியீட் டெண்ணில் (API-Academic Performance Index) பின்தங்கிய பள்ளிகளே. வசதி குறைவான, வாழ்க்கைத்தரம் குறைவாக உள்ள பகுதி களில் இருக்கும் பள்ளிகள் தற்போது பின் தங்கியிருப்பதற்குக் காரணமே, நல்ல, தரமான ஆசிரியர்கள் இல்லாதது தான். இந்தச் சூழ்நிலையில் படித்து வரும் குழந்தைகளுக்கு நல்ல முறையில் கல்வி பயிற்றுவிக்க மிகவும் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் தேவைப்படும் நேரத்தில், இப்படி ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலை ஏற்படுவது எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போலத்தான். இந்தப் பள்ளிகளில் பெரும்பாலும் வசதியற்ற, ஆங்கிலம் முதன்மொழியல்லாத, சிறுபான்மை யினர் (Minority) பகுதியைச் சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கையே மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

1996-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைப்பு' (Class size reduction) சட்ட வழிமுறை, தற்போதைய நிலைக்கு வித்திட்டது என்கிறார் ஒரு கல்வி அதிகாரி. 'ஒரு நல்ல திட்டத்தினால் இன்னொரு பிரச்சினை பிறப்பது சில சமயம் தவிர்க்க முடியாததே. ஆனால் அரசாங்கத்தின் முயற்சியோடு, மக்களின் பங்கேற்பும் இருந்தால் இதைத் தவிர்க்கலாம்' என்றும் அவர் தெரிவித்தார்.

தரமான பள்ளி ஆசிரியர்கள் கிடைப்பது அரிதாகும் நிலையிருப்பதால், நன்கு படிக்கும் மாணவர்களுக்கும், குறைந்த மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்குமான இடைவெளி பெரிதாகிக்கொண்டே போகிறது. இந்த இடைவெளியைக் குறைக்கும் வாய்ப்பும் நழுவிக்கொண்டே போகிறது. இதனால், எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வியளிக்கும் முயற்சியின் தற்போதைய நிலையை நிர்ணயிப்பது கடினமாக உள்ளது. இது ஒரு சங்கிலித்தொடர் ஆகிவிட்டது கவனிக்கத் தக்கது.

இந்த விஷச் சுழலைப் பற்றி ஒவ்வொரு பெற்றோரும், சமுதாய அக்கறை உள்ளவரும் அறிவதும் சிந்திப்பதும் அவசியம்.

கோபால் குமரப்பன்

© TamilOnline.com