தென்றல் பேசுகிறது...
ஆங் சன் சு சீ (Aung San Suu Kyi) மியன்மார் (பர்மா) பாராளுமன்றத்தின் கீழவை உறுப்பினராக மே 2, 2012 அன்று பொறுப்பேற்றார். அமைதிக்கான நொபெல் பரிசு (1991) தொடங்கி, பன்னாட்டுப் புரிதலுக்கான ஜவஹர்லால் நேரு விருதுவரை உலகெங்கிலுமிருந்து பல விருதுகளைப் பெற்றுள்ள 66 வயதான இந்த வீராங்கனை ஏறக்குறைய 15 ஆண்டுகளைச் சிறையில் கழித்துள்ளார். சு சீயைத் தலைவராகக் கொண்ட ஜனநாயக தேசிய லீக் கட்சி உறுப்பினர்கள் கீழவையில் காலியாக இருந்த 45 இடங்களில் 43ஐக் கைப்பற்றியதும் குறிப்பிடத் தக்கதாகும். இவரது தந்தை ஆங் சன் நவீன பர்மாவின் தந்தையாகக் கருதப்படுகிறார். வெள்ளை ரோஜாக்களைத் தமது கூந்தலில் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்ட ஆங் சன் சு சீக்கு இந்தியாவுடன் விசேடத் தொடர்பு உண்டு. அவர் டெல்லியின் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் பட்டம் பெற்றவர். 1969 தொடங்கி மூன்றாண்டுகள் நியூ யார்க்கில் தங்கி ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் பணி செய்திருக்கிறார். 2010 நவம்பரில் அவர் விடுதலை பெற்றதும், தற்போது தேர்தலில் வெற்றி பெற்றுப் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றிருப்பதும் மியன்மாரில் ஜனநாயகத்தைக் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் முக்கியமான மைல்கல்கள் என்ற போதும், அங்கே ராணுவத்தின் பின்பலத்தோடு நடந்துவரும் ஆட்சியை அசைத்துப் பார்க்குமா என்பதைக் காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

*****


தமிழ் நாட்டின் பெரு நகரங்களில் இரண்டு மணி நேரமும் பிற பகுதிகளில் ஏறக்குறைய பத்து மணி நேரமும் மின்வெட்டில் மக்கள் தவிக்கும் அவலத்தைக் குறித்துச் சென்ற இதழில் இதே பகுதியில் பேசியிருந்தோம். இந்தியாவின் டெட்ராயிட்டாகவும், இன்னொரு பங்களூராகவும் சென்னை மாறிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இத்தகைய பகீர் மின்வெட்டு பல வெளிநாட்டுக் கம்பெனிகளை வெளிமாநிலங்களுக்குத் துரத்தும் வல்லமை கொண்டது. ஆனால், மே மாதத் துவக்கத்தில் மின்வாரியம் தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அறிவித்ததற்கும் மிகக் குறைவான மின்வெட்டு! இதற்குக் காரணம் தமிழகத்தில் இருக்கும் ஏராளமான காற்றாலைகள் (windmills) திடீரென்று சுறுசுறுப்பாக வேலை செய்து நிறைய மின் உற்பத்தியைச் செய்ததுதான். தமிழ் நாட்டுக்குத் தேவையானது 11,500 மெகாவாட் மின்சாரம், ஆனால் கிடைப்பதோ 7,500தான். இந்த நிலையில் திடீரென்று வீசிய காற்றில் ஐந்து நாட்களில் காற்றாலைகள் 2,500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடவே மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். "தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் 7,000 மெகாவாட் உற்பத்தி செய்ய வல்லவை. இந்த ஆண்டில் குறைந்தது 3,500 மெகாவாட் மின்சாரத்தைக் காற்றாலைகள் தரும்" என்று இந்தியக் காற்றாலைச் சங்கத் தலைவர் திரு. கஸ்தூரி ரங்கையன் கூறியுள்ளது நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. விலைவாசி, பணவீக்கம், வேலைவாய்ப்பு, உற்பத்தி என்று பல பொருளாதாரக் குறியீடுகளும் கவலை தருவதாக இருக்கும் இந்த நேரத்தில் மின் பற்றாக்குறையும் சேர்ந்து கொள்வது விரும்பத் தக்கதல்ல.

மின்னாற்றல் உற்பத்திக்கு மரபு சாரா கடல் அலை, சூரிய ஒளி, காற்று, அணுத்திறன் போன்றவற்றை அதிகத் திறம்படப் பயன்படுத்துவது எப்படி என்கிற ஆராய்ச்சிகளை அரசுகள் ஊக்குவிக்க வேண்டும். அவற்றில் கூர்த்த அறிவினர் ஈடுபட வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் ஆராய்ச்சித் துறை வரி ஏய்ப்புக்கான வழியாகவே இருப்பது மாறி, புத்தாக்கங்களுக்கான பட்டறையாக மாறவேண்டும். தொழில்முனைவோருக்கு இந்த விழிப்பு ஏற்பட வேண்டும்.

*****


வரவிருக்கும் 'புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு' குறித்து கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் வெற்றிச்செல்வி இராசமாணிக்கம் தமது நேர்காணலில் பல தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார். தமிழ் இணைய நூல் விற்பனையின் முன்னோடியான ‘காந்தளகம்' மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் நேர்காணல் அரிய பல விடயங்களை வாசகர்களின் பார்வைக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் சிறுகதைப் போட்டியில் பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளை மீள்பார்வை செய்யும் போதும் "இந்தக் கதை ஏன் பரிசு பெறவில்லை!" என்ற வியப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது என்றால், போட்டிக்கு வந்த கதைகளின் தரம் எப்படி என்பதற்கான சான்றாகவே இருக்கிறது. ஹரி கிருஷ்ணன் குயில் பாட்டின் மர்ம முடிச்சை அவிழ்க்கிறார் இந்த இதழில். இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். ஆனால், எழுத்தின் சுவை படித்து ரசிப்பதில் அல்லவா இருக்கிறது? நுழையுங்கள், சுவையுங்கள்!

இந்த மாதம் 25 முதல் 28 வரை ஹூஸ்டனில் தமிழ் நாடு அறக்கட்டளை தனது 37வது தேசிய மாநாட்டை நடத்துகிறது. அதன் வெற்றிக்குத் தென்றலின் வாழ்த்துகள். வாசகர்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்!


மே 2012

© TamilOnline.com