அரோரா பாலாஜி கோவில்: அடையாறு லக்ஷ்மண் பரத நாட்டியம்
மார்ச் 3, 2012 அன்று, அரோரா, இல்லினாயில் உள்ள ஸ்ரீ பாலாஜி கோவிலின் வேலுச்சாமி அரங்கில் சென்னையைச் சேர்ந்த ஏ. லக்ஷ்மணஸ்வாமி அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. கலைமாமணி K.J.சரஸா அவர்களின் மாணவரான இவர், அபிநய வல்லுனர் பத்மபூஷண் கலாநிதி நாராயணனிடம் அபிநயம் பயின்றுள்ளார்.

இந்நிகழ்ச்சி 'நாட்யா டான்ஸ் தியேட்டர்', 'நிருத்யாஞ்சலி நடனப்பள்ளி', 'பரதம் அகாடமி', “நிருத்யஸங்கீத்', 'ஸம்ஸ்கிருதி' ஆகிய அமைப்புக்களின் ஒத்துழைப்போடு, வெங்கடேஸ்வர சுவாமி கோவில் ஏற்பாடு செய்திருந்தது. கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியின் முதல் நடனமான மலையமாருத ராகப் புஷ்பாஞ்சலியில் லஷ்மண் தனது நிருத்யத்தால் பார்வையாளர்களைக் கவர்ந்தார். புஷ்பாஞ்சலியின் முடிவில் 'கஸ்தூரி திலகம்' ஸ்லோகம் இடம்பெற்றது. இந்நடனம் திஸ்ர திரிபுடையில் அமைந்த அலாரிப்பில் முடிவடைந்தது.

அடுத்ததாக 'வாரணமுக' எனத் தொடங்கும் நாட்டைக்குறிஞ்சி ராக வர்ணம், யானைமுகத்தோனின் பெருமையைப் பேசியது. அடுத்துக் கேதார கௌளையில் 'நடனம் ஆடும் பாதனார்' என்ற கிருதிக்கு ஆடியது சிறப்பு. அடுத்து வந்த 'துமக்கு சலக்கு' என்ற துளசிதாசர் பஜனையில், ஸ்ரீராமனிடம் அன்பைப் பொழியும் கௌசல்யாவாகவே மாறிவிட்டார். பின் ஆடிய ராகமாலிகையில் அமைந்த 'எந்த மாத்ரமுன' என்ற கிருதியில் எல்லாக் கடவுளர்களைப் பற்றிய வர்ணனை இருந்தது. பின்னர் வந்த நாகஸ்வராளி ராகத் தில்லானாவிற்கு விறுவிறுப்பாகவும், உற்சாகமாகவும் நடனமாடினார். நிகழ்ச்சியை நிறைவு செய்த 'ஸ்ரீ ஜகதீஸ்வரி துர்கே' என்ற ஆகிர்பைரவி ராக சுலோகம் நிறைவளித்தது.

நிகழ்ச்சிக்கு பிரதீப் (குரலிசை), சுபஸ்ரீ ரவி (நட்டுவாங்கம்), சிகாமணி (வயலின்), சக்திவேல் முருகானந்தம் (மிருதங்கம்), ஆகியோர் பக்க பலமாக அமைந்தனர்.

தகவல்: அனு சாம்ராட்
தமிழில்: மீனா கணபதி
படம்: டாக்டர் நாகராவ், வினோத் மேனன்

© TamilOnline.com