ஸ்ரீலலித கான வித்யாலயாவின் 15ஆவது ஆண்டு விழா
மார்ச் 10, 2007 அன்று ஸ்ரீலலித கான வித்யாலயாவின் 15ஆவது ஆண்டு விழா, ·ப்ரிமாண்ட் நகரில் நடைபெற்றது. 'குரு வந்தனம்' என்கிற தலைப்பில் திருமதி. லதா ஸ்ரீராமின் மாணவர்கள் வழங்கிய இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது. இந்த வித்யாலயாவை நடத்தி வரும் லதா ஸ்ரீராமும் அவருடைய தந்தை திரு ஆர். ராஜ கோபாலனும் சிறந்த இசை விற்பன்னர்கள்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த தொகையை கிளீவ்லாண்ட் தியாகராஜர் ஆராதனை விழாவிற்கு லதா ஸ்ரீராம் அளிப்பது குறிப்பிடத்தக்கது. திரு. வி.வி. சுந்தரம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் பாடிய பாடல்கள் யாவும் லதா ஸ்ரீராமின் தந்தை திரு ராஜகோபாலன் மற்றும் மாமா திரு. என்.எஸ். ராமசந்திரன் ஆகியோரால் எழுதபட்டதாகும்.

குரு ஸ்லோகம் ராகமாலிகையில் ஆரம்பித்து, பிறகு வர்ணம், சுபபந்துவராளி ராகத்தில் குழந்தைகள் குழுக்களாகச் சேர்ந்து வழங்கியது மிக நேர்த்தியாக இருந்தது. ஜதிஸ்வரம் மோகனராகத்தில் அமைந்த பாடலும், தொடர்ந்த சரவணபவ என்கிற ஆபோகி ராகக் கீர்த்தனையும் அவையோரை மெய்மறக்கச் செய்தது. பாடிய அனைத்து மாணவ மாணவியர்களும் சுருதி சுத்தத்துடன் தாளம் தப்பாமல் ராக, பாவத்துடன் பாடினர்.

'தியாகராஜ குருநாத' என்கிற பூர்வகல்யாணி மற்றும் 'குஹனே இனி உனதருள்', 'பூம்பொழில் பாடல்கள்' மிகச் சிறப்பு. 'ஸ்ரீ சந்திரசேகர' என்கிற சங்கராபரண சாகியத்யம் அருமை. முக்கியமாக சித்தார்த் ஸ்ரீராம் பாடிய பாடல் மிக உருக்கமாக இருந்தது.

குழந்தைகளுக்கு ஏற்றாற் போல் திரு. நடராஜன் ஸ்ரீனிவாசன் மிருதங்கத்தையும் கஞ்சிராவையும் மாற்றி மாற்றி வாசித்தது சிறப்பு. சங்கராபரணம், ஷண்முகப்பிரயா என ஆலாபனை செய்த திவ்யாவின் வயலின், அஷ்வின் கிருஷ்ணகுமாரின் புல்லாங்குழல், அகிலேஷின் பாவனை என அனைத்தும் மிக இனிமை. கடைசியில் பாடிய தில்லானாவும் திருப்புகழும் அற்புதம். மொத்தத்தில் 150 குழந்தைகள் பங்குகொண்ட இந்த நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்தது.

பாபநாசம் அசோக் ரமணி

© TamilOnline.com