சித்தார்த்தின் இசைக் கச்சேரி
பிப்ரவரி 10, 2007 அன்று சான்டா கிளாரா Convention Center-ல், சித்தார்த் ஸ்ரீராமின் கர்நாடக இசைக் கச்சேரி நடந்தது. பந்துவராளி வர்ணத்துடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில், ஆரபி ராகத்தில் அமைந்த விநாயகர் மீதான தீட்சிதர் கிருதி சிறப்பாக இருந்தது. ஆனந்தபைரவியில் சியாமா சாஸ்திரிகளின் சவுக்க காலத்தில் அமைந்த 'ஓ ஜகதம்ப'வைக் காலப்ரமாணம் தவறாமல் அருமையாகப் பாடினார் ஸ்ரீராம். காவேரி ராகத்தில் அமைந்த சியாமா சாஸ்திரிகளின் 'சங்கரி'க்கு விரிவான ராக ஆலாபனை செய்த நிரவலும், கல்பனா ஸ்வரமும் அருமை. தியாகராஜரின் அடாணாவில் அமைந்த 'செடேபுத்தி' என்ற பாடலும், தேனுகா ராகத்தில் அமைந்த 'தெலிய§து ராம' பாடலும் சிறப்பாக இருந்தன. கல்யாணி ராகத்தில் அமைந்த 'பங்கஜலோசனா' பாடலின் நிரவலும் கல்பனா ஸ்வரமும் ஸ்ரீராமின் இசை ஞானத்தை வெளிப்படுத்தியது.

மிச்ரசாபு தாளத்தில் தனி ஆவர்த்தனம் செய்த நாரயணனின் மிருதங்கமும், மகாதேவனின் மோர்சிங்கும் சிறப்பு. வயலின் வாசித்த குமாரி திவ்யாவின் கல்யாணி ராக ஆலாபனை மிக இனிமையாக இருந்தது. ஸ்ரீராம் எடுத்துக் கொண்ட ராகங்கள் அனைத்துமே கன ராகங்களாக இருந்தன. தற்பொழுது பிரபல இசைக்கலைஞர்கள் சிலரைத் தவிர, மற்றவர்கள் ராகம், தாளம், பல்லவி பாடுவதே இல்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, ஸ்ரீராம் கரகர ப்ரியாவில் ராகம் தாளம் பல்லவி பாடி இசை ஞானத்தையும், சங்கீத ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினார்.

இறுதியில் திரு லால்குடி ஜெயராமனின் மோகன கல்யாணி தில்லானா, திருப்புகழுடன் கச்சேரி நிறைவடைந்தது. மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் சங்கீத மழையில் நனைய வந்திருந்தனர்.

சங்கீத ப்ரியை

© TamilOnline.com