புறநானூறு எளிய உரை
வாஷிங்டன் வட்டாரத்தில் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் என்ற அமைப்பை உருவாக்கி, அங்குள்ள தமிழ் ஆர்வலர்கள், முனைவர் பிரபாகரனின் தலைமையில் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தமிழ் இலக்கியத்தைப் பயின்று வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக பிரபாகரனும் நண்பர்களும் மாதம் இருமுறை கூடிப் புறநானூறு படித்து வருகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் நான்கு அல்லது ஐந்து புறநானூற்றுப் பாடல்களை, பல உரைநூல்களை ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். படிக்கும் பாடல்களின் அருஞ்சொற் பொருள், உரை ஆகியவற்றை பிரபாகரன் எழுதிப் பகிர்ந்துகொள்வது வழக்கம். அவரது உரை எளிமையாகவும் முழுமையாகவும் உள்ளதாக நண்பர்கள் பாராட்டினர். புறநானூற்றின் முதல் 300 பாடல்களுக்கான அவரது உரை: puram400.blogspot.com என்ற வலைப்பதிவில் காணக் கிடைக்கிறது. அதை ஒரு நூல் வடிவில் வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்று பலர் கருத்துத் தெரிவிக்கவே, முதல் 200 பாடல்களுக்கான உரை 'புறநானூறு–மூலமும் எளிய உரையும்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

பிப்ரவரி 21, 2012 அன்று சென்னையில், வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக் கழக வேந்தர் முனைவர் ஜி. விஸ்வநாதன் இந்நூலை வெளியிட்டார். கான்பூர் I.I.T.யின் தலைவர் முனைவர் மு. அனந்தகிருஷ்ணன் முதற்படியைப் பெற்றுக்கொண்டார். இந்நூலை வெளியிட்ட காவ்யா பதிப்பக உரிமையாளர் சு. சண்முகசுந்தரம், பிரபாகரனின் சகோதரர் குழந்தைநலப் பேராசிரியர் டக்டர். இர. பாஸ்கரன் இருவரும் வரவேற்புரை ஆற்றினார்கள். இராணிமேரி கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் இரா. ருக்மணி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் பேராசிரியர் ப. மருதநாயகம், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், பேராசிரியர் தி. முருகரத்தனம் ஆகியோர் நூலாசிரியரின் சிறப்பியல்புகளையும், வாஷிங்டன் வாழ் தமிழ் ஆர்வலர்களை ஒன்றுபடுத்தித் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் எனும் அமைப்பை உருவாக்கி, 2005-ஆம் ஆண்டில் பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டை நடத்திய சிறப்புமிக்க அவருடைய செயல்களையும், புறநானூற்றை அயலகத் தமிழரும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமைப்படுத்தி எழுதிய உரைநூலையும் பாராட்டினார்கள். பிரபாகரனின் மைத்துனர் சொ. சீனிவாசன் நன்றி நவின்றார். S.R.M. பல்கலைக்கழகத் துணைப்பேராசிரியர் இல. சுந்தரம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

இந்நூலில், ஒவ்வொரு பாடலுக்கும், பாடியவர் வரலாறு, பாடப்பட்டவர் வரலாறு, பாடலின் பின்னணி, பாடல், அருஞ்சொற் பொருள், உரை, மற்ற நூல்களிலிருந்து பாடலின் கருத்துக்கு ஒத்த கருத்துகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. நூலின் சிறப்பு அதன் எளிமையும், முழுமையும் என்று படித்தோர் கூறுகின்றனர். “சங்க இலக்கியத்தின் முக்கியமான ஓர் உறுப்பாகிய புறநானூற்றை இனிய தமிழில் எளிய நடையில் புலமைச் சிறப்புடன் (Excellence in Scholarship) அறிமுகப்படுத்தியுள்ள முனைவர் பிரபாகரன் தமிழ் இலக்கியத்திற்குப் பங்களிக்கும் புதுயுகத்தைத் தொடங்கி இருப்பவர்களில் ஒருவர்” என்று மூதறிஞர் முனைவர் வ.செ. குழந்தைசாமி, தம் வாழ்த்துரையில் கூறியுள்ளார்.

நூல் விவரம்:

அமெரிக்காவில் வாங்க:
Dr. R. Prabhakaran, 1103 Bluebird Court East, Bel Air, MD 21015.
விலை: $12 + $3 (shipping and handling). பெற விரும்புபவர்கள் தமது முகவரியையும் $15 க்குக் காசோலையும் அனுப்பவும்.
தொலைபேசி எண்: 410.420.0111

இந்தியாவில் வாங்க:
பேரா. காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், 16, இரண்டாம் குறுக்குத் தெரு (16, 2nd Cross Street), டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை 600024. தொலைபேசி எண்: 044-2372 6882 / 98404 80232.
விலை: ரூ.400 (Shipping and handling charges extra)

உமையாள் முத்து,
டெட்ராய்ட், மிச்சிகன்

© TamilOnline.com