'ஐ-மார்ட்' அனு
நீங்கள் சன்னிவேலின் உல்ஃப்-ஓல்டு சான் ஃபிரான்சிஸ்கோ சாலைகளின் சந்திப்பில் இருந்தால் 'I-Mart' அவசியம் உங்கள் கண்ணை வசீகரிக்கும். அத்தனை அழகானது. இந்தியக் கலைப் பொருட்களின் மீது கொண்ட ஆழ்ந்த ஆர்வத்தால் 2010ல் இதைத் தொடங்கினார் அனுபமா குமரன்.

சென்னைக் கல்லூரி ஒன்றில் நுண்கலைகளில் இளங்கலைப் பட்டம் பெற்ற அனுவுக்கு ஓவியம் மற்றும் பிற கலைகள் என்றால் உயிர். 2003ல் குமரனுடன் திருமணமாகி அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்னரே அவர் லீவைஸ், ஜே.சி.பென்னி, டாய்ஸ் ஆர் அஸ் என்பது போன்ற பல பன்னாட்டு வணிக நிறுவனங்களில் பணி செய்ததில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் பரந்த அனுபவமும் பெற்றிருந்தார். இதனால் அமெரிக்காவில் வணிகம் செய்வதற்கு என்ன தேவை என்கிற ஞானம் அவருக்கு முதலிலேயே இருந்தது.

வருமானம் நிறைய என்ற போதும் அந்த நிறுவனங்களில் அதிக உடலுழைப்பு தேவைப்பட்டதாலும், கற்பனா சக்திக்கு இடமே இல்லை என்பதாலும், சென்னையிலேயே ஒரு கலைப்பொருள் விற்பனையகம் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது அவருக்கு. "இந்தியக் கலைப் பொருட்கள் ஒரு நல்ல நேர்மறையான ஆற்றலைத் தமது வண்ணம், மூலப்பொருள், கருப்பொருள், செய்நேர்த்தி ஆகியவற்றால் காண்போரைக் கவர்கின்றன” என்கிறார் அனு.

2008ல் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தனர் குமரன் தம்பதிகள். அப்போதுதான் அவரது கனவு 'I-Mart' ஆக உருப்பெற்றது. இது India4you தாய்நிறுவனத்தின் குடைக்கீழ் வருவதாகும். "இந்திய சமுதாயத்தின் மத, பாரம்பரிய, கலாசாரத் தேவைகளுக்கு ஈடு கொடுக்க ஒரு கடை வைக்க வேண்டும்" என்பது குமரனின் கருத்தாகவும் இருக்கவே இந்தக் கடை "Indian crafts enrich and inspire" என்னும் கருத்தோடு தொடங்கப்பட்டது.

"ஒவ்வொரு கலைப்பொருளும் உன்னதமான கருத்தொன்றைத் தாங்கி நிற்கிறது. அதிலும் கைவினைப் பொருட்கள் மிகத் துடிப்பானவை. எடுத்துக்காட்டாக, ஒரு களிமண் (டெரகோட்டா) குதிரை வீரத்தையும், இஷ்ட தேவதை என்பது பக்தி கலந்த நம்பிக்கையையும் குறித்து நிற்கிறது" என்கிறார் அனு.

இதற்கான ஆராய்ச்சி 2008-09ல் தொடங்கியது. எதை வாங்குவது, எங்கிருந்து என்பதைத் தீர்மானிக்க வேண்டும். இங்கே கிடைப்பவை இந்தியாவின் ஆத்மாவைப் பிரதிபலிக்க வேண்டும் அதற்காக, இந்தியாவின் எந்தப் பகுதியானாலும் சரி, அங்கே இருக்கும் கைவினையாளரை நேரடியாகச் சென்று பார்த்து ஐ-மார்ட் பணியாளர்கள் பொருட்களைத் தேர்ந்தெடுக்கிறார்களாம். காஷ்மீரத்து சால்வை, கன்யாகுமரிச் சங்கு, ஆந்திரத்து மரவேலைப்பாடு, மதுபானி ஓவியம், தமிழ் நாட்டின் பித்தளைப் பொருட்கள், கர்நாடகத்து பூஜை மண்டபம் என்று ஒரு மினி-இந்தியாவே இங்கே உள்ளது. இவை தவிர பரதநாட்டியம், குச்சிபுடி மற்றும் பிற இந்திய நாட்டியங்களுக்கான ஆடை வகைகளைத் தயாரிப்பதிலும் தற்போது ஈடுபட்டுள்ளது.

நவராத்திரி கொலு பொம்மை வகைகளும் கண்ணைக் கவர்கின்றன. வரப்போகும் கொலுவுக்கு பொம்மைகளைப் பார்க்க வேண்டுமானால் இங்கே சொடுக்கலாம்: india4you.com. நீங்கள் தேடியது கிடைக்காவிட்டால் உங்களுக்கு வேண்டியவற்றின் பட்டியலை அனுப்ப: i-martsunnyvale@india4you.com

"ஏழை இந்தியக் கைவினைக் கலைஞர்களுக்கு இதன் மூலம் உதவுகிறோம். அவர்களது கல்வி, மருத்துவத் தேவைகளுக்கு ஐ-மார்ட் உதவி செய்கிறது. நம் நாட்டின் ராமாயண, மகாபாரத காவியங்களுக்கு உயிர் வடிவம் தந்து உலவ விடும் உயர்ந்த பொறுப்பு இவர்களுக்கு இருக்கிறது. அவர்களின் கலைப் படைப்புகளை வாங்குவதன் மூலம் அத்தகையவர்களை நாம் ஆதரிக்கிறோம்" என்கிறார் அனு. "இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியக் கலைப்பொருட்கள் எங்கள் கனவுக் கலைக்கூடமான ஐ-மார்ட்டில் பார்க்கவும் வாங்கவும் கிடைக்கிறது. இவற்றை அமெரிக்காவிலுள்ள இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இங்கு நடக்கும் கலைநிகழ்ச்சிகளுக்கு நாங்கள் மேடையமைப்புப் பொருட்கள் வாடகைக்குக் கொடுத்து ஆதரிக்கிறோம்” என்பதையும் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்.

கணவர் குமரன் மற்றும் தமது இரண்டு குழந்தைகளுடன் கூபர்டினோவில் வசிக்கிறார் அனுபமா. "என் கணவர் ஆதரவும் ஊக்கமும் தொடர்ந்து தருவதால், எனக்குக் கடையையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் பார்த்துக் கொள்வது கடினமாகவே இல்லை” என்று மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் அனுபமா குமரன்.

வலையகம்: www.india4you.com

ஜனனி நாராயணன், சன்னிவேல், கலிஃபோர்னியா
தமிழ்வடிவம்: மதுரபாரதி

© TamilOnline.com