'வம்சதாரா' வரலாற்றுப் புதினத்திலிருந்து
அத்தியாயம்: 4 - காதலும் வெறுப்பும்

வெளி உலகத்தின் பரபரப்பான சூழ்நிலைகளுக்கு எதிர்மறையாக, பறவைகளின் இனிய கானங்கள் தவிர, மிக அமைதியோடு காணப்பட்ட புத்தமடத்தின் தோட்டத்தில் அந்தப் பெரிய மரத்தின் உச்சியில் இருந்து அண்ணாந்து பார்த்த மல்லையும் மணிவாணனும் ஆச்சரியம் பொங்க அர்த்த புஷ்டியுடன் கண்களால் பேசிக்கொண்டனர்.

யாரைக் கொண்டுவருமாறு இவர்களுக்குப் பணிக்கப்பட்டதோ, யார் விடுவிக்கப்பட்டால் சோழர்களுக்குத்தான் அபாயம் என இவர்கள் நினைத்தார்களோ அந்தச் சக்திவர்மன் தன் கைகளைக் கட்டிக் கொண்டும், கால்களைத் தரையில் உதைத்துக் கொண்டும் நிதானமற்றவனாய் நின்றிருந்ததை இவர்கள் கண்டனர். அவன் நின்ற இடம் அரசினர் விருந்தினர் மாளிகையின் காவல் கொட்டடி என்பதை காதோடு ஓதிய மல்லையைக் கண்களால் அடக்கிய மணிவாணன், வேறு ஒருவர் தன் குதிரையை நடத்திக் கொண்டு சக்திவர்மனை நெருங்குவதையும் கவனித்தான். அருகே வந்ததும் தன் தலைப்பாகையை எடுத்து குதிரையின் மீது வைத்துவிட்டு குதிரையைத் தள்ளி விட்டதும் வந்தது வம்சதாரா என்று புரிந்துகொண்ட மணிவாணன், ஆள் நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் வம்சதாரா இவனை ஏன் சந்திக்க வேண்டும்? ஒருவேளை காதலர்களோ என்று கூடச் சந்தேகித்தான். வந்த வம்சதாராவை ஆவல் பொங்கப் பார்த்த சக்திவர்மன், சடாரென அவள் கையைப் பற்றியதும் ஆனால் அடுத்த வினாடி பற்றிய கையை சுற்றி முறுக்கி, மின்னல் வேகத்தில் அவள் சக்திவர்மனைக் குப்புறத் தள்ளியதையும் ஆச்சரியத்துடன் பார்த்த மணிவாணன், ஏதோ நினைத்தவனாக மரத்தில் இருந்து இறங்கி, மல்லையையும் இறங்கச் செய்துவிட்டு மிக மெதுவாக அடர்த்தியான எல்லை வேலியருகே அவர்கள் பேச்சு செவியில் படும் அளவு தூரத்தில் மறைந்து நின்று கொண்டான். மல்லையும் அவன் அருகே மறைந்து கொண்டான்.

அதேசமயத்தில் குப்புற விழுந்த சக்திவர்மன், தனக்கு எதுவுமே நடவாதது போல வம்சதாரா அருகே வந்தான். அவள் எதிரே மண்டியிட்டு அமர்ந்து கொண்டான்.

"வம்சி! இதுதான் உங்கள் விருந்தோம்பலா? இது என்ன நியாயம்? ஆறுமாத காலமாக உன் நினைவிலே பித்தனாகிப் போய் உருக்குலைந்து நிற்கிறேனே... ஏன் என்னைப் பார்க்க வரவே இல்லை? வந்ததுதான் வந்தாய்... ஏன் கோபத்துடன் என்னைத் தள்ளுகிறாய்? நான் ஏதாவது தவறு செய்து விட்டேனா?"

"ஐயா! வேங்கி இளவரசரே! உங்கள் ரத்தத்தில் வீரர்களான சாளுக்கிய ரத்தம் ஓடுவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அப்படித் தோன்றவில்லை எனக்கு..."

இளக்காரமாக வந்த வம்சதாராவின் பதில் சக்திவர்மனை எள்ளளவும் பாதிக்கவில்லை.

"ஏன் அப்படிச் சொல்கிறாய் வம்சி!"

"உங்களுக்குத் தேவை வீரமும் பொறுமையும். இந்த இரண்டும் இருந்தால்தான் உங்கள் எண்ணமான வேங்கி பட்டாபிஷேகம் நிறைவேறும்! ஆனால் உங்களுக்கு இந்த இரண்டு குணங்களும் இன்னமும் வந்த பாடில்லை!"

"எதற்கு வெறுத்துக் கொள்கிறாய் வம்சி! நீ சொல்லும் குணமெல்லாம் வேண்டாம். நான் உன்மீது வைத்திருக்கும் காதலைப் பற்றி உனக்கென்ன தெரியும்? எனக்கு வேங்கியும் வேண்டாம். இளவரசுப் பட்டமும் வேண்டாம். வம்சியின் காதலன் என்ற ஒரே ஒரு பெயர் இருந்தால் போதும். அந்தக் கருணையை எனக்குக் காண்பித்து விடு. காலம் முழுவதும் இப்படி மண்டியிட வேண்டுமானால் சொல்லு! அப்படியே செய்கிறேன்!"

வம்சதாராவின் அழகிய வதனத்தில் வெறுப்பின் சாயை பரிபூர்ணமாகப் படர்ந்தது. ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் சக்திவர்மன் இல்லை.

"வம்சி... என் காதலை மட்டும் நிராகரித்து விடாதே... வேண்டுமானால் என்னை அடியாளாக வைத்துக் கொள். ஆனால் காதலன் பட்டத்தை மட்டும் பறித்து விடாதே!"

வம்சதாராவின் குரலிலும் வெறுப்பு ஒலித்தது.

"சக்திவர்மரே! காதல் என்ற ஒரு நினைப்பு மட்டும் காரியங்களைச் சாதிக்க முடியாது. நான் ஆறுமாத காலமாக இங்கு வரவில்லையென்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அப்படி வராதவள் இப்போது மட்டும் ஏன் வந்தேன் என்று கேட்கிறீர்களா? உங்களை விடுவிக்க ஒரு சோழ வேவுப் படையே ஸ்ரீகுளத்துள் புகுந்து விட்டதாகச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. என் தந்தை உங்களை ஒரு சிறந்த வீரனாக்கத் திட்டமிட்டுள்ளார். அந்தக் கடமையையும் என்னிடம் ஒப்படைத்துள்ளார். இன்று மாலையே நாம் வடகலிங்கம் பயணமாகிறோம்!"

"வடகலிங்கமா? வேண்டாம் வம்சி! நாம் இங்கேயே இருப்போமே... நீ பக்கத்தில் இருந்தால் எனக்குப் போதும்!"

"ஐயா! நீங்கள் இத்தனை பலஹீனமானவர் என்று இதுவரை எனக்குத் தெரியாது. உள்ள நிலையைப் புரிந்து கொள்ளாத மூடர்களின் புத்தியை உங்களுக்கு ஆண்டவன் படைத்துள்ளான். எங்கே ஜகன்மோஹனத்தில் சந்தித்து அழைத்துச் சென்றால் விபரீதமாகி விடுமோ என்ற எண்ணத்தில்தான் உங்களை இங்கு சந்திக்கிறேன். என்னுடைய நாட்டிலேயே நான் இரவோடு இரவாக உள்ளே நுழையும் நிலையை நீங்கள் எனக்கு அளித்துள்ளீர்கள்!"

"நீ எது வேண்டுமானாலும் பேசு வம்சி! நீ பேசிக்கொண்டே இருக்க வேண்டும்! நான் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்! இதைவிட வேறு வேலை எனக்கு எதற்கு?"

வெறுப்பின் உச்சக்கட்டத்திற்குப் போய்விட்டாள் வம்சதாரா.

"ச்சே... நீயெல்லாம் ஒரு வீரன்..." என்று கோபமாய் கத்திவிட்டு, தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். ஆனால் அதுவரை வைத்திருந்த மரியாதையைக் கைவிட்டு விட்டாள்.

"இதோ பார்... நீ இன்று மாலையே பயணப்படுகிறாய். இன்னும் சிறிது நேரத்தில் வீரர்கள் உன்னை அழைத்துப் போக வருவார்கள். அவர்களுடன் செல்!"

சக்திவர்மனை உதாசீனமாகப் பேசிவிட்டு வெறுப்புடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அந்த உணர்ச்சியுடனேயே தலைப்பாகையை எடுத்து நன்றாக சுற்றிக் கட்டி தன் அழகிய கூந்தலையும் மறைத்தாள். பிறகு சக்திவர்மனிடம் மறுபடி வந்தாள்.

"இதோ பார் சக்திவர்மா! இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன்! இனியொருமுறை என்னிடம் காதல் என்றெல்லாம் பேசி என்னுடைய பொறுமையைச் சோதிக்காதே! இன்னொன்று... நான் இன்று மதியம் நகருக்குள் வரப்போவதாக அறிவிக்க இருக்கிறார்கள். அதனால் நான் உன்னோடு இப்போது பேசிக்கொண்டு இருந்ததை யாரிடமும் உளறிவிடாதே... மீறி உளறினால் உன் நாக்கை அறுத்துவிடும்படி ஆணையிட்டுள்ளேன்!"

கீழைப் பிராந்தியத்திலேயே சிறந்த அந்த அழகியின் அழகிய வாயிலிருந்து கொடூரமாக வந்தன அந்த வார்த்தைகள். கொடூரத்தை உமிழ்ந்தவள் குதிரையையும் நகர்த்திக் கொண்டு ஒய்யாரமாய் நடந்து சென்று மாளிகையின் முன்பக்கம் வந்ததும் குதிரையின்மேல் ஏறிப் பறந்துவிட்டாள்.

வம்சதாரா சென்றுவிட்டதை மறைவிலிருந்து கவனித்த மணிவாணன் மளமளவென செயல்படத் துவங்கினான். மல்லையின் செவியிலே ஏதோ கூற, மல்லையும் தலையசைத்து புத்தமடம் நோக்கி நடந்து சென்றான். விவரமறியாத குழந்தை தனியிடத்தே விடப்பட்டால் எப்படி விழிக்குமோ அப்படி விழித்துக் கொண்டிருந்த சக்திவர்மன் அருகே மணிவாணன் குரல் கனைத்துக்கொண்டே சென்றான்.

திவாகர்

© TamilOnline.com