கவிதா திருமலையின் பரதநாட்டியம்
மார்ச் 4, 2007 அன்று பாலோ ஆல்டோ, கப்பர்லி அரங்கத்தில் கவிதா திருமலையின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நடனம் ஆடிய கவிதா, குரு வித்யா சுப்ரமண்யத்தின் மாணவி. திருப்பல்லாண்டுடன் நடனத்தைத் தொடங்கிய கவிதா, தொடர்ந்து மலயமாருத ராகத்தில் அமைந்த ஆண்டாள் திருப்பாவை யான ‘சிற்றஞ்சிறுகாலே’வுக்கு அழகாக அபிநயம் பிடித்தார். விஷ்ணுவின் மீதான பக்திப் பாவத்தைச் சித்திரித்த அந்த நடனம், பரவசம் தந்தது. தொடர்ந்து மகாகவி பாரதியின் ‘பாரத தேசம் என்று’ பாடலை மிகைபாவம் இல்லாமல் ஆடினார். அடுத்து வந்த தேசபக்திப் பாடாலான ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’ பாடலுக்கு, இன்னும் சற்று கூடுதல் கவனம் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது.

தொடர்ந்தது, அருணாசலக்கவிராயரின் பைரவி ராகக் கீர்த்தனையான ‘யாரோ இவர் யாரோ’. ராமன், சீதையை முதலில் கண்டதும், சீதையின் மனத்தில் எழுந்த அற்புத, சிருங்கார பாவங்களை அதிசயக்கத்தக்கும் வகையில் நடனத்தில் கொண்டு வந்தார். அடுத்து, காளிதாசரின் ரிது ஸம்ஹாரத்திலிருந்து, நான்கு வகைப் பருவ காலங்களின் நிகழ்வை விளக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஜதிகளைக் கொண்டு ஆடியது குறிப்பிடத் தக்கதாக விளங்கியது. நாராயணனின் மிருதங்கம் அற்புதமாக நடனத்திற்கு ஒத்துழைத்ததுடன், ஜூகல் பந்தியிலும் களைகட்டியது. ஒளி அமைப்பும் சிறப்பாக அமைந்திருந்தது. குறிப்பாக, கவிதாவின் ஒவ்வொரு பாவத்தையும் சிறப்புடன் விளக்கும் வகையிலும், பருவ கால மாறுதலைக் குறிக்கும் விதமாகவும் வண்ண விளக்குகள் மாறிமாறி ஒளிவீசி அழகூட்டின.

நிகழ்ச்சியின் சிகரம் என்று சொன்னால், அறியாமை, உறுதி, பயம் என்று பல்வேறு ரசங்களை மாறிமாறிச் சித்திரித்த கலப்பு நடனம் தான். வேறுபட்ட இருவகைப் பாத்திரங்களையும் உடனுக்குடன் மேடையில் கொண்டு வந்து அவர் ஆடிய விதம் பார்வையாளர்களின் உள்ளத்தைக் கவர் வதாய் இருந்தது. குறிப்பாக ‘கும்ம ந கரயிதிரே’ என்ற புரந்தர தாசரின் கீர்த்தனைக்கு யசோதையிடம் அஞ்சும் குழந்தைக் கண்ணனை கண்முன் கொண்டு வருவதாய் இருந்தது. மோஹன கல்யாணியில் அமைந்த தில்லானாவில் ஆனந்த ரசம் பொங்கித் ததும்பியது.

சுபப்ரியா ஸ்ரீவத்சனின் குரல், வித்யா சுப்ரமண்யனின் நட்டுவாங்கம், நாராயணனின் மிருதங்கம், சாந்திநாராயணனின் வயலின், அஷ்வின் குமாரின் புல்லாங்குழல் என அனைத்துப் பக்கவாத்தியங்களுமே நடனத் துக்கு உறுதுணையாக இருந்தன. பல்வேறு குருநாதர்களிடம் பயிற்சி பெற்ற கவிதா, அவர்களிடமிருந்து பல நுணுக்கங்களில் தேர்ந்துள்ளார். பாவம் ததும்பும் கண்களும், ஒயிலான உடல்வாகும் கொண்டிருக்கிறார். நிருத்தத்தில் ஸ்திரத்தன்மையும், மேடையி லிருந்து அகலும்போது நாட்டியப் பாங்கை மாற்றாமல் செல்வதும் ஏற்பட்டால் இவருக்கு இன்னும் மேன்மை வரும்.

ரூபா சுரேஷ்

© TamilOnline.com