அபிநயா பரத நாட்டிய அரங்கேற்றம்
ஜனவரி 28, 2012 அன்று, குரு இந்துமதி அவர்களின் (நிருத்யோல்லாசா டான்ஸ் அகாடமி) சிஷ்யை அபிநயாவின் பரத நாட்டிய அரங்கேற்றம் கேம்பல் ஹெரிடேஜ் அரங்கில் (Campbell Heritage Theater) நடைபெற்றது.

அபிநயா ஹம்சத்வனி ராக புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சியைத் துவக்கினார். அடுத்து ஆடிய ஜதிஸ்வரத்தின் அடவுகள் செம்மையாக அமைந்திருந்தன. சாருகேசி ராக வர்ணத்தில் கண்ணன் மீது காதல்கொண்டு அவனை நினைத்து உருகும் பெண்ணாக ஆடிப் பாராட்டைப் பெற்றார் அபி. அடுத்து பாபநாசம் சிவனின் 'மயில் வாகனா' என்கிற பாடலுக்கு முருகனின் அழகையும், நான்மறை அவன் புகழ் பாடுதலையும் அபிநயித்தது மிகச் சிறப்பு. அடுத்து, கண்ணன் பாலகனாய் வெண்ணை கேட்டு அடம் பிடிப்பதும் வெண்ணை தர மறுத்த யசோதையிடம் கோபம் கொண்டு அழுவதும், காளிங்க நர்த்தனமும் அழகாக ஆடினார். இறுதியில் சிந்துபைரவியில் அமைந்த தில்லானவுடன் அரங்கேற்றத்தை இனிதே முடித்தார்.

பதினோரு ஆண்டுகளாக பரதம் கற்று வரும் அபிநயா மற்ற வகை நடனங்களிலும், நீச்சலிலும் தேர்ச்சி பெற்றவர். Speech therapy clinic for children என்ற தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் அவ்வப்போது தன்னார்வத் தொண்டராக இருக்கும் அபிநயா அதே துறையில் படித்துப் பணிபுரிய விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.

குரு இந்துமதியின் நேர்த்தியான நடன அமைப்பும், நட்டுவாங்கமும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தன. ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்) ஆகியோர் மிகச்சிறந்த பக்கபலமாய் அமைந்தனர்.

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட்

© TamilOnline.com