நியூ ஜெர்ஸி: பொங்கல் விழா
பிப்ரவரி 4, 2012 அன்று, நியூ ஜெர்ஸி தமிழ்ச் சங்கம் மான்ட்கோமேரி பள்ளி வளாகத்தில் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. பெண்களுக்கான கோலப் போட்டி, சுவையான பொங்கல் வைக்கும் போட்டி, சிறுவருக்கான ஓவியப் போட்டி என சுவாரசியமான போட்டிகளோடு விழா தொடங்கியது.

அடுத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளின் முடிவில் ஜப்பானியப் பெண்ணும், அமெரிக்க நாட்டு இளைஞர்களும் தமிழ்ப் பாட்டுப் பாடி அரங்கையே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினர். பின்னர், பட்டிமன்றம் ராஜா தலைமையில் பட்டிமன்றம் அரங்கேறியது. சங்கத் தலைவி தேவியின் அழைப்பை ஏற்று ராஜா வருகை தந்திருந்தார்கள். 'நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் சமுதாயம் வளர்கிறதா? தளர்கிறதா?' என்ற தலைப்பில் கலகலப்பான பட்டிமன்றம் நடைபெற்றது. நிறைவாக ராஜா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளைத் தந்தார்.

சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சியாக மார்ச் 17 அன்று 'சிலப்பதிகாரம் நாட்டிய விழா' நடைபெற இருக்கிறது. அதற்கும் அமோக வரவேற்பைத் தருமாறு சங்க நிர்வாகிகள் கேட்டுக் கொள்கின்றனர்.

தெய்வானை ராமசாமி,
நியூ ஜெர்ஸி

© TamilOnline.com