தைப்பூசத் திருநாளிலே!
தமிழகம், மலேசியா, சிங்கை - இந்த வரிசையில் கலிஃபோர்னியா! என்ன ஒன்றும் புரியவில்லையா? எல்லாம் முருக பக்தர்களின் தைப்பூச வழிபாடுதான். குமரன் வசிக்கும் இடமான கான்கார்டு சிவ முருகன் ஆலயத்திற்கு இரண்டாவது ஆண்டாகத் தைப்பூச பாத யாத்திரை சென்றோம்.

பிரம்மாண்டமான ஏற்பாடுகள், பெருமளவில் பக்தர்கள் கூட்டம், தன்னார்வத் தொண்டர்கள் என்று ஆரம்பமுதலே அனைத்தும் பிரமாதம். வழக்கம்போல் தடம் பார்க்க, சோலை சில நண்பர்களுடன் மிதிவண்டியில் சில மாதங்களுக்கு முன்னரே கிளம்பினார். தடத்தைச் சிறிது மாற்றி, சாலைகளை முற்றிலும் தவிர்க்கும் வகையில் பாதை வகுக்கப்பட்டது. சான் ரமோன் தொடங்கி கான்கார்டுவரை பாத யாத்திரை என்றாலும், மில்பிடாஸ் நகரிலிருந்தே யாத்திரை பயில இந்த ஆண்டு சில பக்தர்கள் திட்டமிட்டனர். ஏற்பாடுகள் மளமளவென நடந்தேறின.

சென்ற ஆண்டு போலவே, நெடுந்தூரம் நடக்க இயலாதவர்கள் தங்களுக்கு ஏற்ப சேர்ந்து கொள்ள இடங்களும், குடிநீர், உணவு மற்றும் அனைத்து வசதிகளோடு, ஆங்காங்கே யாத்திரிகர்களுக்கு வழி காட்டவும், உதவி செய்யவும் மிதிவண்டிகளும், மோட்டார் வாகனங்களும். காலை உணவுக்கும், மதிய உணவுக்கும் தனித்தனியே குழுக்கள்.

பிப்ரவரி 4, 2012, காலை 6.30 மணிக்கெல்லாம் பக்தர்கள், சான் ரமோன் மத்திய பூங்காவில் திரள ஆரம்பித்து விட்டாலும், இதற்கு முதல் நாள் அதிகாலையிலே மில்பிடாஸில் இருந்து சிலர் யாத்திரையைத் துவங்கினர், ஃப்ரீமான்ட்டில் இருந்தும் ஒரு குழு. மொத்தம் 17 பேர் Hwy 84 வழியாக அன்று மாலையே சான் ரமோன் வந்து சேர்ந்துவிட்டனர்.

பனி விலகியும் விலகாத நிலையில் ஏகக் கூட்டம். பூங்காவில். யாத்ரீகர்கள், அவர்களை வழியனுப்ப வந்தவர்கள், நடத்திச்செல்லும் தொண்டர் குழாம் என்று அனவரும் ஒன்று கூடுகையில், சோலை மற்றும் அவர்தம் சக பக்தர்கள், முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று குரலிட்டு அனைவரையும் வரவேற்றனர். பக்தர்கள் விறுவிறுவென பனியோடும், குளிரோடும் போட்டி போட்டு நடக்க ஆரம்பித்தனர். சுமார் ஒன்றரை மணிநேர நடைக்குப் பின்னர், ஓசைகே பூங்காவிற்கு வந்து சேருகையில், சூடான சிற்றுண்டி காத்துக் கொண்டிருந்தது. பசியாறி, சற்று ஓய்வெடுத்தபின் யாத்திரை தொடர்ந்தது.

மூன்று மணிநேர பயணத்திற்குப் பின்னர், வால்டன் பூங்காவை அடைந்தோம். அங்கே எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சிப்ஸ், ஊறுகாய், ஸ்வீட் என்று அருமையான மதிய உணவு. சற்று ஓய்வுக்குப் பின், சுடச்சுட காபி ஒரு மடக்கு குடித்துவிட்டு, நடை துவக்கம்.

வால்டன் பூங்காவிலிருந்து கிளம்பியவர்களின் எண்ணிக்கை 350க்கு மேல். பக்திப் பெருக்கோடு 3 மணியளவில் முதல் குழு கோவிலை அடைந்தது. கான்கார்டு நகருக்குச் சற்று முன்னர், நீளமான ஓடை ஒன்றை ஒட்டி நடந்து கொண்டிருக்கும் பொழுது, சேவல்கள் கூவி எங்களை வரவேற்கும் ஒலி. அதைக் கேட்கையில், குமரனே நான் உங்கள் அருகில்தான் இருக்கிறேன் என்று கூறுவதைப் போலத் தோன்றியது.

முருகனுக்கு அரோகரா அன்று கூவிக்கொண்டே கோவிலில் நுழைந்தது பரவசமூட்டியது. கிட்டத்தட்ட 20 மைல் தூரம் நடந்து வந்த களைப்புத் தெரியாமல், சஷ்டி கவசம், பக்தி பாடல்கள் எல்லாம் பாட ஆரம்பித்தபோது உள்ளம் நெகிழ்ந்தது உண்மை. 350 மேற்பட்ட எண்ணிக்கையில், சிறு குழந்தைகளும், முதிர்ந்த பெற்றோர்களும் அடங்கும். என்ன தான் உலகின் தொழில்நுட்பத்தின் தலைசிறந்த நகரில் இருந்தாலும், கடவுள் நம்பிக்கை எத்தனை ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதற்கு, இதுவே சாட்சி.

கோவிலின் விரிவாக்கப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்க் கடவுள் முருகனின் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்கு நிதி தேவைப்படுகிறது. உதவி செய்யத் தொலைபேசி எண்: 925-827-0127.

சிறப்பாக நடந்தேறிய இந்தப் பாத யாத்திரை முருகனின் செயல் என்று எண்ணியபடி, வருமாண்டுகளில் உலகச் சிறப்பு வாய்ந்த ஒரு தலமாக வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தபடியே நம்முடைய வாகனத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம்.

கணேஷ் பாபு,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com