சாருவும் ஹனுமார் வடையும்
எத்தனை தலைமுறைகளுக்குத்தான் பாட்டி வடை சுட்ட கதையையே படித்துக் கொண்டிருப்போம்? ஒரு மாறுதலுக்கு ஒரு பேத்தி, நம்ம சாருதான், வடை சுட்ட சமர்த்தையும் கொஞ்சம் அறிந்துகொள்வோமே!

*****

எங்கள் சாருவை வைத்து எழுத வேண்டுமென்றால் கதைக்குப் பஞ்சமே இருக்காது. ரொம்பவும் சுவாரஸ்யமான கதாபாத்திரம். சதீஷ் எங்களுக்கு நெருங்கிய நண்பன். என் வீட்டுக்காரருடன் டார்மைப் பகிர்ந்து கொண்ட காலத்திலிருந்தே பழக்கம், எங்கள் திருமணத்துக்குப் பிறகும் தொடர்கிறது. என் பெண் மோனுவுக்கு எங்களைவிட சதீஷ் அங்கிளிடம் தான் ஒட்டுதல் அதிகம். அண்ணி அண்ணி என்று எனக்கும் பல உதவிகள் செய்வான். சாரு ஒரே சந்தேகப் பிராணி. (என்னென்னவோ எண்ணிக் கற்பனையை ரொம்பவே ஓட்ட வேண்டாம். கதை சுத்த 'சைவம்'தான்!)

சாரு அப்படியே ஆதர்ச கல்லூரிக் குமரிக்கே உரிய வாழ்க்கையை, சினேகிதிகள் சகிதம் திரைப்பட விஜயம், கூட்டமாக உணவகங்கள், காஃபி ஷாப் முற்றுகை என அனுபவித்துக் கொண்டிருந்தவள். பெற்றவர்களுக்குச் செல்லமகள். படிப்பை முடித்துவிட்டுச் சிலகால உத்தியோக வாழ்க்கையையும் ருசித்துக் கொண்டிருந்தவளுக்குக் காலாகாலத்தில் கல்யாணம் முடிக்க அவள் பெற்றோர் அலசி, ஆராய்ந்து, தேடிப் பிடித்த மாப்பிள்ளைதான் சதீஷ். பையனுக்கு மேல்நாட்டில் நல்ல வேலை, நல்ல குடும்பம், பிள்ளையாண்டான் பார்க்க மோர்க்குழம்பில் போட்ட சேப்பங்கிழங்குத் தான் போல நல்ல அழகன். கேட்க வேண்டுமா? ஒருமாத விடுப்பில் வந்திருந்தவனுக்கு சீரும் சிறப்புமாக மணம் செய்து கொடுத்து அனுப்பிவிட்டார்கள். புதுக் குடித்தனம்; அவர்களுக்கு உதவியாக இருக்குமென்றும் நட்பைத் தொடர எண்ணியும் நாங்கள் இருக்கும் சன்னிவேலிலேயே அருகில் ஒரு இடம் பார்த்துக் குடி அமர்த்திவிட்டோம்.

சாருவுக்கு ஆரம்பமானது சோதனை. வீட்டில் அடுப்படி என ஒன்று இருப்பதையே அங்கிருந்து மேஜைக்கு வரும் உணவு வகைகளைக் காணும் போதுதான் தெரிந்து கொண்டிருந்தவளுக்கு, காலை காப்பி முதல் சாப்பாடு, டிபன் என்று நித்திய நைவேத்தியம் பூராவும் சமாளித்தாக வேண்டும் என்பதை நினைக்கவே மலைப்பாக இருந்தது. சதீஷ் தனது 'டார்ம் ஆஸ்ரம' காலத்தில் சமைத்திருந்த சில அயிட்டங்களைக் கற்றுக் கொடுக்க, புரிந்தவரை அவள் சமைத்ததை நாக்கு என்று ஒன்று இருப்பதையே மறந்து விழுங்கி வைப்பான். அவ்வப்பொழுது எங்கள் வீட்டிலிருந்து செல்லும் ஸ்பெஷல் பதார்த்தங்களும், நண்பர்கள் வீடுகளில் நடைபெறும் விருந்துகளுமே சற்று ஆறுதல் அளித்து வந்தன. மேலே சந்தேகப் பிராணி என்றேனே, இதோ வருகிறது. தண்ணீர் விடாமல் குக்கரில் அரிசியைச் சேர்த்து, நறுக்கரிசியாக்கி வைத்துவிட்டு "அண்ணீ, சாதம் ஏனோ பிரைட் ரைஸ் மாதிரி வந்திருக்கே? என்ன பண்ணட்டும்?" என்று வந்து நிற்பாள்.

ஒருநாள் குழம்பு பச்சடிக்குப் பங்காளி போலவும் மறுநாள் ரசத்தின் ஒன்றுவிட்ட அக்கா போலும் அமையும். எந்தக் கூட்டணி தர்மத்துக்கும் இணங்காத ஒரு கூட்டு; திடீரென்று "அண்ணீ, இட்லி ஏன் மஞ்சளா வந்துதோ தெரியலையே" என்று வந்து நிற்பாள் ஒருநாள். (ஒன்றுமில்லை, உளுத்தம் பருப்புக்குப் பதிலாகப் பயத்தம் பருப்பைப் போட்டு அரைத்திருக்கிறாள், அத்தனை சமையல் ஞானம்!) இனிமேல்தான் வருகிறது சுவாரஸ்யமான கட்டம். (நமக்குத்தான்; பாவம், சாருவுக்குக் கஷ்டம்).

எங்கள் மங்கையர் குழுவிலேயே பக்திப் பழம் என்று பெயரெடுத்தவள் சுதாமணி. அடிக்கடி வீட்டில் பத்துப் பேரைக் கூட்டி பஜன், சஹஸ்ரநாம பாராயணம் என்று ஏதாவது ஏற்பாடு செய்தவண்ணம் இருப்பாள். எங்களைப் போல 'மனை காக்கும் மகளிர்' குழாம் சென்று அவ்வப்பொழுது புண்ணியக் கணக்கை ஏற்றிக்கொள்வது வழக்கம். இம்முறை இந்தியாவிலிருந்து புதூர் பெரியவர் என்று பிரபலமான பாலசந்திர சாஸ்திரிகள் வந்திருந்தார். சுதாமணிக்குத் தலைகால் புரியாத சந்தோஷம். தன் வீட்டிலேயே தங்கவைத்து உபசாரம் செய்ததுடன் ராமாயணம் படிக்கவும் ஏற்பாடு செய்துவிட்டாள். நாங்களும் தினமும் சென்று செவிமடுத்து வந்தோம். வெள்ளிக்கிழமை விமரிசையாகப் பட்டாபிஷேகம் செய்துவிட எண்ணி அவரவர் பங்களிப்பாகப் பிரசாதம் ஏதாவது செய்து வரவேண்டுமென்று தீர்மானித்தோம். என் பங்குக்குச் சர்க்கரைப் பொங்கலும் சுண்டலும் செய்வதாக ஒப்புக்கொண்டேன்.

திடீரென்று கலகப்ரியாவின் (நிஜப் பெயர் கனகப்ரியா!) குரல் எழும்பியது. "ராமாயணம் முடிக்கும்போது ஹனுமாருக்கு நிவேதனம் செய்யாமல் இருக்கலாமா? நம்ம சாருவையே வடை செய்து கொண்டுவரச் சொல்லலாமே," என்று கிளப்பிவிட்டாள். அருமையான, கரகரப்பான வடை - அனுமார் பெயரைச்சொல்லித் தின்ன யாருக்குத்தான் ஆசை இராது? அவளை வழிமொழிந்தன பத்துப் பதினைந்து குரல்கள். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. சாருவா? வடையா? பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரை, கடலைப் பருப்புகளுக்கிடையே (ஆறு) வித்தியாசங்களையே இன்னும் முழுசாகத் தெரிந்துகொண்ட பாடில்லை, இதென்ன சோதனை? நடந்தது எதையும் அறியாமல் சாரு கண்மூடிக் கும்பிட்டபடி இருந்தாள். விஷயம் தெரிந்ததும் பேய்முழி முழித்துக் கொண்டு நின்றாள். கண்ணாலேயே அவளுக்கு ஆறுதல் கூறினேன்.

வெள்ளிக்கிழமை விடிந்தது. என் பங்குக்கான பிரசாதங்களை செய்து முடித்துவிட்டு சாரு வீட்டுக்குச் சென்று பருப்பை ஊறவைக்கச் சொல்லிக் கொண்டிருந்தேன். செல்பேசியில் என் நாத்தனார் விலாஸினி, மில்பிடாஸிலிருந்து; அவள் வேலை வேட்டையில் இருப்பவள். அன்று ஒரு 'உத்தியோகச் சந்தை' இருப்பதாகவும், தன் குழந்தையைப் பள்ளியிலிருந்து அழைத்து வந்து, தான் வரும்வரை பார்த்துக்கொள்ள வேண்டுமெனவும் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டாள். நாத்தனார் ஆச்சே; ஆணையைத் தட்ட முடியுமா? சாருவுக்கு மாவு அரைக்க வேண்டிய பதம், வடை சைஸ் சொல்லி ஒரு ஐம்பது வடைகள் செய்து கோத்து எடுத்து வரும்படி கூறிவிட்டு, நான் செய்திருந்தவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். மாலை நேராகச் சுதாமணி வீட்டுக்குப் போய்விட்டேன்.

உபன்யாசம் ஆரம்பமாகும் நேரம் வந்துவிட்டது. சாரு வந்தபாடில்லை. நான் இருப்புக் கொள்ளாமல் வாசலுக்கும் உள்ளுக்கும் நடந்து ஓய்ந்து விட்டேன். என் மனம் நினைக்காததை எல்லாம் நினைக்க ஆரம்பித்து விட்டது. ஒருபக்கம் இந்தக் கலகப்ரியாமேல் கோபமும் எரிச்சலுமாக வந்தது. வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் அந்த அப்பாவிப் பெண்ணை இப்படி மாட்டி விட்டாளே. பாவம், சாரு, என்ன சிரமப்படுகிறாளோ, காயும் எண்ணெயில் சுட்டு எடுக்கும்போது ஏதாவது...? மனம் அலை பாய்ந்துகொண்டிருந்தது.

சாஸ்திரிகளும் ஸ்லோகங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார். சரியாக வாசலில் வந்து நின்றது சதீஷின் கார். தம்பதி சகிதமாக வந்து, நைவேத்தியப் பிரசாதங்களுடன் தங்கத்தகடு போல் மின்னும் வடைகளைக் கோர்த்த மாலையை வைத்தனர். எனக்கு பிரமிப்பு, சபாஷ், சாரு சமயத்தில் தன்னை நன்றாக நிரூபித்துவிட்டாளே! அவளது பிரசாதத்துக்கு ஒரே பாராட்டு மழை!

வீடு வந்து சேர்ந்ததும், இவ்வளவு அருமையான வேலையைக் கையில் வைத்துக்கொண்டு இத்தனை நாள் அப்பாவி போலிருந்த சாருவை என் பங்குக்கு மீண்டும் ஒரு முறை பாராட்டியே ஆக வேண்டும் என எண்ணி அவர்கள் அபார்ட்மென்ட் சென்றடைந்தேன்.

"சாரு! என்னமோன்னு நினைச்சேன் உன்னை, ஜமாய்ச்சுட்டியே" என்று மனமாரப் புகழ்ந்தேன். சதீஷ் "அண்ணி, ரொம்பப் புகழாதீங்க அவளை, கொஞ்சம் உள்ளே வாங்க" என்று சமையல்கட்டுக்கு அழைத்துச் சென்றான். மேடைமீது இருந்த வடிதட்டில் அரையும் காலுமாக உடைந்து இருபது முப்பது வடைகள்! புதிர்ப் பார்வையை இருவர் மீதும் வீசினேன்.

"அண்ணி, ஒரு இரண்டு மணி இருக்கும்; இவளிடமிருந்து அழுகையும் பதற்றமுமாக ஒரு அழைப்பு. எனக்கும் முக்கிய வேலை ஒன்றுமில்லாததால் பறந்து வந்தேன். இங்கே வந்து பார்த்தால் இந்தக் கோலம்." என்றவனைத் தொடர்ந்தாள் சாரு. "வடையை எண்ணெயில் போட்டு எடுத்தேனா? தடிமனா ஊசி ஒண்ணை எடுத்து சரட்டில் கோர்த்து வடையிலே சொருகினேனா, ஒவ்வொண்ணும் அப்படியே உடைஞ்சு உடைஞ்சு போச்சு. எனக்கானா ஒரே கலவரமாய்டுத்து. மணியானா பறக்கறது. உடனே இவரை போன் பண்ணி வரவழைச்சேன் , அப்புறம் வடை செய்து கொண்டு வரத்தான் நேரமாய்டுத்து" என்று விவரித்தாள். "பின்னே எப்படி இந்தக் குறுகிய நேரத்தில் வடையைச் செய்து கொண்டு வர முடிஞ்சது?" என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.

"இவளானா இந்தக் கூத்துப் பண்ணி வைச்சிருக்கா. என்ன செய்வது? சுவாமி காரியமாச்சே, செய்யாமல் விடமுடியுமா? மளமளன்னு பருப்பையும், சேர்மானங்களையும் பொடித்துக் கொண்டு வெந்நீரில் சற்று ஊறவைத்தேன். பிறகு பிசைந்து வடையைத் தட்டி (ஒரு கிண்டல் பார்வை!) மாவிலேயே துளை போட்டு எண்ணெயில் சுட்டு எடுத்தேன். மாரத்தான் முயற்சிதான் போங்க அண்ணி. எப்படி நம்ம அவசர வடை?" என்றான். இந்த வரலாற்றைத் தக்க அபிநயங்களுடன் அவன் கூறுகையில் என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. ("வடைமாலையைத்தான் பார்த்திருக்கேன், இப்படித் துளை பண்ணிப் பிறகு சுடணும்னு கண்டேனா?" இது சாருவின் முணுமுணுப்பு!)

"எப்படியோ அவளைக் காட்டிக்கொடுக்காமல் சபையில் நிறக்கச் செய்து விட்டாயே. இதைத்தான் என் பாட்டி 'அப்பளத்துக் கோணலை எண்ணெய் நிமிர்த்திடும்'னு சொல்வாங்க" என்று அவனைப் பாராட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com