ரா. கணபதி
தமிழகத்தின் சிறந்த ஆன்மீக எழுத்தாளரும், காஞ்சி மகா பெரியவர், ஸ்ரீ சத்ய சாயிபாபா போன்றோரின் வரலாற்று நூல்களை எழுதியவருமான ரா. கணபதி பிப்ரவரி 20, 2012 அன்று காலமானார். சிதம்பரத்தைச் சேர்ந்த சி.வி. ராமசந்திரன்-ஜெயலக்ஷ்மி தம்பதியினருக்கு விநாயகர் சதுர்த்தி நாளன்று பிறந்தவர் ரா. கணபதி. பி.ஏ. பட்டப் படிப்பை முடித்த பின் 'மெயில்' பத்திரிகையில் நிருபராகச் சிலகாலம் பணியாற்றினார். பின் இறைப்பணிக்கே தம்மை அர்ப்பணிக்க விரும்பித் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்க்கை நடத்தினார். காஞ்சி மகா பெரியவரின் அன்புக்குப் பாத்திரமாகி அவரது அருளுரைகளை 'தெய்வத்தின் குரல்' என்னும் நூலாகக் தொகுத்து வெளியிட்டார். பெரியவரின் ஆக்ஞைப்படி ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை 'ஹரஹர சங்கர, ஜெயஜெய சங்கர' என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். தவிர, 'ஸ்ரீ சத்ய சாயிபாபா', 'காமகோடி ராமகோடி', 'காமாக்ஷி கடாக்ஷி', 'அன்னை சாரதாதேவி வாழ்க்கை வரலாறு', 'ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாறு', 'சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு', 'அறிவுக் கனலே அருட்புனலே' போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார். “அண்ணா” என்று பலராலும் அழைக்கப்பட்டவர். சமீப காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இவர் சிறந்த சிவபக்தர். சிவராத்திரி அன்று தமது உடலை உகுத்திருக்கிறார்.



© TamilOnline.com