திருநின்றவூர் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள்
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 58வது திருத்தலம் திருநின்றவூர். சென்னையிலிருந்து 34 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 'திரு' என்னும் மஹாலக்ஷ்மி தவம் செய்த இடமாதலால் திருநின்றவூர் என அழைக்கப்படுகிறது. தாயாரின் திருநாமம் சுதாவல்லி. சமுத்திரராஜன், "என்னைப் பெற்ற தாயே" என அழைத்ததால் ‘என்னைப் பெற்ற தாயார்’ என்ற திருநாமம் இங்கு பிரசித்தம். பக்தர்களை உயிராகக் கருதிப் போற்றுபவர் என்பதால் பெருமாளின் நாமம் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள். "குருமா மணிக் குன்றினை நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை" என்று திருமங்கையாழ்வார் இவ்விறைவனைப் போற்றுகிறார்.

ஒருமுறை வைகுண்டத்தில் திருமாலைப் பிரிந்த திருமகள், பூலோகத்தில் இயற்கை எழிலுடன் கூடிய துளசிவனத்துக்கு வந்து கடும் தவம் செய்தாள். திருமால், திருமகளைப் பிரிந்த தவிப்பில் அலைமகளைத் தேடிவர தன் பரிவாரங்களை அனுப்பியிருந்தார். அதேசமயம் சமுத்திரராஜன் திருமாலை நோக்கி, "நமோ நாராயணா" எனக் கை கூப்பி வந்தான். "நலம் உண்டாகும்" என ஆசி வழங்கிய திருமாலின் முகம் களை இழந்து இருப்பதையும், திருமகளும் அருகில் இல்லை என்பதையும் அவன் அறிந்து கொண்டான். தான் தேடி திருமகளை அழைத்து வருவதாகச் சொல்லி விட்டு விண்ணுலகம் எங்கும் தேடி அங்கு காணக் கிடைக்காமல் பூவுலகம் வந்தான். பல இடங்களிலும் தேடி துளசி வனத்தில் தவம் செய்யும் அன்னையைக் கண்டவன் ஆசி வேண்டி நமஸ்கரித்தான். அருட்கோலம் காட்டிய அன்னையின் அருள் வடிவைக் கண்ட ஆனந்தத்தில், "என்னைப் பெற்ற தாயே" என்று சொல்லி வணங்கித் தொழுது நின்றான். திருமாலுடன் இணைந்தாள் அன்னை. திருமகளைத் தேடியதால் தான் இழந்த அனைத்துச் செல்வங்களையும் மீண்டும் பெற்றான் சமுத்திரராஜன். திருநின்ற ஊரின் சிறப்பையும் தாயாரின் மகிமையையும் அறிந்த குபேரன் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து ஸ்ரீ அன்னையின் அருள் பெற்றதாக வரலாறு.

செல்வம் வற்றாது பெருக குபேர யந்திரம் வாங்கி, இத்தலத்தின் தாயார் சன்னிதியில் வைத்து பூஜித்துப் பின் இல்லத்தில் அதில் உள்ள 9 எண்கள் மீது 9 நாணயங்களை வைத்து மனம் உருகித் தாயாரை நினைத்து வழிபட வேண்டும். பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து 9 நாள் ஒவ்வொரு நாளும் புதிதாக 9 நாணயங்கள் வைத்து கடைசிநாள் மொத்தம் சேர்ந்த 81 நாணயங்களையும் தாயார் சன்னிதியில் உள்ள உண்டியலில் சேர்ப்பித்து அன்னையை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. 9 நாட்கள் தொடர்ந்து 9 நெய் தீபம் ஏற்றி 9 முறை தாயார் சன்னிதியை வலம் வந்தால் பிள்ளைப்பேறு, தடைப்பட்ட திருமணங்கள் யாவும் நடக்கும் என்பது ஐதீகம்.

கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இக்கோயில். சீனிவாச விமானத்தின் கீழ் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் சேவை சாதிக்கிறார். பெருமாள் சன்னிதிக்கு இடப்புறம் அழகிய தனி மண்டபத்துடன் கூடிய ஆண்டாள் சன்னிதி உள்ளது. ஆடிப்பூரம் மார்கழிக் காலங்களில் விசேஷ உற்சவங்கள் நடக்கின்றன. ஆண்டாள் சன்னிதியின் எதிரே சேனை முதலிகள், இவற்றிற்கிடையே அமர்ந்த, நின்ற கோலத்தில் ஆழ்வார்களை தரிசிக்கலாம். பெருமாள் சன்னிதிக்கு வலப்புறம் எதிரில் திருமடைப்பள்ளி நாச்சியார் சன்னிதி. பெருமாளுக்குப் படைக்கப் போகும் பிரசாதங்கள் இவரது நேரடி கண்காணிப்பில் தயாராவதாக ஐதீகம். ஸ்ரீ சக்கரத்தாழ்வார் தனிச் சன்னிதியில் 16 விதமான ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். இது 16 வித செல்வங்களைக் குறிப்பதாகக் கருத்து. பின்புறம் யோகநரசிம்மரின் காட்சி அற்புதம். இவரது திருக்கரங்களில் நான்கு சக்கரங்கள் நான்கு விதமான வேதங்களைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வேதத்துக்கும் இரண்டு லட்சுமிகள் அதிபதி எனப்படுவதால் இங்கு சுற்றி வருவதன் மூலம் அஷ்ட லக்ஷ்மிகளின் அருளையும், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஸ்ரீ ஆதிசேஷன் பஞ்சமுகமாகக் காட்சி தருகிறார். புதன்கிழமை தோறும் இவருக்கு நெய் தீபம் ஏற்றி வலம் வந்து மூன்றாவது புதன்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டு பால் பாயசம் விநியோகம் செய்தால் மாங்கல்ய பலம் பெருகும். வெள்ளிக்கிழமைகளில் 12 முறை வலம் வந்து பால் பாயசம் நிவேதனம் செய்து 12 குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுத்து வழிபட்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தனிச் சன்னிதியில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீ ஆஞ்சநேயர். இவர் சிறந்த வரப்ரசாதி.

எல்லோருக்கும் எல்லாம் தந்தருளும் நம்மைப் பெற்ற அன்னையையும், பக்தர்களைக் காக்கும் பக்தவத்சலப் பெருமாளையும் வணங்கித் துதிப்போம்.

சீதா துரைராஜ்,
சான்ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com