காரசார நேரம்!
ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா காலையில் எழுந்தவுடன் "மல்லிப்பூ இட்லியும், காரசாரமா மிளகாய்ச் சட்னியும் எங்கம்மா கையால சாப்பிட்டா நல்லா இருக்குமே"ன்னு சொல்லிட்டே மசக்கையோட எழுந்திருக்கிற வீட்டுக்காரரை, வசியம் பண்ண வேண்டிய இக்கட்டில் மாட்டியிருக்கீங்களா? இந்தக் குளிரில் அரிசி பருப்பை ஊறவச்சு, மணி நேரம் அரைச்சு அவனில் லைட்டைப் போட்டு எடுத்து வச்சு காலையில் பாத்தா பொங்குவேனான்னு அசடாட்டம் உக்காந்திருக்கும் மாவைப் பார்த்தால் கோவம் கோவமாய் வரும். இந்தத் தொல்லையெல்லாம் எதுக்குங்க? செத்த நாக்க தட்டி எழுப்ப உப்பும் உறைப்புமா, புளிப்பும் கொஞ்சம் இனிப்புமா எல்லா மசக்கையும் தீர்க்க நிவாரணமா சுலபமாய் செய்யக் கூடிய ஹாலபீனோ (மிளகாய்) தொக்கும், பூண்டு மிளகுக் குழம்பும் செய்வது எப்படீன்னு சொல்லியிருக்காங்க. செய்து அவருக்குக் கொடுத்துப் பாருங்களேன்; அப்புறம் சும்மாவாவது அம்மா அம்மான்னு பொலம்பறாங்களான்னு!

ஹாலபீனோ தொக்கு

தேவையான சாமான்கள்:
ஹாலபீனோ மிளகாய் - 300 கிராம்
நல்லெண்ணெய் - 200 மி.லி.
கடுகு - 2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு - 2 தேக்கரண்டி
புளி - 100 கிராம்
பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
வெல்லம் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
ஹாலபீனோ மிளகாயை நன்றாக அலம்பி, ஈரமில்லாமல் பேப்பர் டவலில் துடைத்துக் கொள்ளவும். அவற்றைச் சின்னத் துண்டங்களாக நறுக்கி, வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, மிளகாய் மிருதுவாகும்வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளி ஊறுகிற அளவுக்கு வெந்நீர் விட்டு, புளியை ஊறவைக்கவும். அதிகம் தண்ணீர் வேண்டாம். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் இவற்றைத் தாளித்துக் கொள்ளவும்.

வதக்கிய மிளகாய் நன்றாக ஆறிய பின், தாளிதம் செய்த பொருட்கள், மிளகாய், புளி, உப்பு, வெல்லம் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்றாக உருத்தெரியாமல் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 100-150 மி.லி. நல்லெண்ணெய் ஊற்றி, அது காய்ந்தபின் மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி போட்டு, அரைத்த விழுதை வதக்கவும். நன்றாக வதங்கி, எண்ணெய் தனியாகப் பிரிந்து வந்தவுடன் இறக்கி வைக்கவும். நன்றாக ஆறிய பின் ஈரப்பசையில்லாத பாட்டிலில் போட்டு கெட்டியாக மூடிவைக்கவும். ஹாலபீனோ தொக்கு தயார்.

பானு,
அட்லாண்டா

© TamilOnline.com