சாருலதா மணி
கர்நாடக இசை, திரையிசை இரண்டிலுமே முத்திரை பதித்து வரும் சாருலதா மணி 'யுவகலா பாரதி', 'எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி என்டோமென்ட் விருது', 'இளம் இசைக் கலைஞர் விருது', 'சிறந்த கர்நாடக இசைப்பாடகி விருது', ஜெயா டிவியின் 'சிறந்த பின்னணிப் பாடகி விருது' உட்படப் பல கௌரவங்கள் பெற்றவர். உலகெங்கும் பயணம் செய்து கர்நாடக, திரையிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். திரையிசையின் ராகங்களை அடையாளம் காட்டும் இவரது 'இசைப்பயணம்' நிகழ்ச்சி உலகெங்கிலுமுள்ள ரசிகர்களால் வரவேற்கப்படும் ஒன்று. அபங்கம், பஜனைப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நாம சங்கீர்த்தனம், தமிழ், தெலுங்குக் கீர்த்தனைகள் என்று பல்வேறு வகைகளில் 50க்கும் மேற்பட்ட ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறார். இவரது 'இசைப்பயணம்' டிவிடி, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. சாருலதா மணியுடன் உரையாடியதிலிருந்து....

கே: உங்களது இசைப்பயணம் தொடங்கியது எப்படி, எங்கே?
ப: என்னுடைய குடும்பமே இசைக் குடும்பம்தான். அப்பா O.S. மணி மரைன் எஞ்சினியர். இசையார்வம் மிக்கவர். அம்மா ஹேமலதா மணி வீணைக் கலைஞர். சிறுவயதிலேயே எனக்குச் சங்கீதம் அறிமுகமாகி விட்டது. அந்தச் சூழலில்தான் வளர்ந்தேன். ஒன்பது வயது முதல் முறையாக இசை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். சங்கீத ஆசார்யா சந்த்யாவந்தனம் சீனிவாச ராவ், அவரது மகன் பூர்ணப்ரக்ஞ ராவ் மற்றும் கல்கத்தா கே.எஸ். கிருஷ்ணமூர்த்தி போன்றோரிடம் இசை பயின்றேன். ராகம் தானம் பல்லவியை வெங்கட்ராம ஐயர் அவர்களிடம் கற்றுக்கொண்டேன். அம்மாவிடமும் நிறைய கற்றுக் கொண்டேன்.

கே: எப்போது மேடையேறினீர்கள்?
ப: மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் 11வது வயதில் அது நடந்தது. அது ஒருமணி நேரக் கச்சேரி. நல்ல வரவேற்பு. இசையைப் பொருத்தவரை நம்முடைய வளர்ச்சி நமக்கே தெரியும். அது படிப்படியாகத்தான் இருக்கும். திடீரென்று ஒரு ஃபிலிம் ஸ்டாருக்கு வருவதுபோல் வந்துவிடாது. நடிகர் ஒரு படத்தில் நன்றாக நடித்தால் போதும். எல்லோரும் நல்ல நடிகர் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் சங்கீதம் அப்படிக் கிடையாது. ஒரு கச்சேரியை நன்றாகப் பண்ணினால் போதாது. ஒவ்வொரு கச்சேரியும் நன்றாக இருக்க வேண்டும். அதற்குக் கடின உழைப்பு வேண்டும். இதை நான் எப்போதும் கவனத்தில் கொண்டிருக்கிறேன்.

கே: அடிப்படையில் நீங்கள் ஒரு பொறியியல் பட்டதாரி. எப்படி உங்களால் படிப்பு, இசை இரண்டிற்கும் நேரம் ஒதுக்க முடிந்தது?
ப: உண்மையைச் சொல்லப் போனால் நான் படிப்புக்கு ரொம்பக் கஷ்டப்படவில்லை.எனக்கு எப்போதும் ஒருமுறை படித்தாலே போதும், அது நன்றாக நினைவிலிருக்கும். நான் படித்தது B.E. மெக்கானிகல் எஞ்சினியரிங். அதில் என்ன அட்வான்டேஜ் என்றால் கத்துக்கொள்கிற விஷயங்களை விடச் செய்கிற விஷயங்கள் ஜாஸ்தி. ஒரு சிறிய கோட்பாட்டை வைத்து பேப்பரையே முடித்து விடலாம். ஆகவே அடிப்படைக் கோட்பாடுகளை நன்றாகப் படித்துக் கொண்டு விடுவேன். அதனால் இசைப் பயிற்சிக்கு, பாடுவதற்கு எனக்கு நிறைய நேரம் இருந்தது.

கே: உங்கள் குருநாதர்கள் குறித்து...
ப: அம்மா ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன். வீட்டிலேயே பாட்டுச் சொல்லிக் கொடுப்பார். ஏதாவது பிழைகள் இருந்தால் திருத்துவார். அம்மா ஒரு perfectionist. வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; பாடல்களைப் புரிந்து கொண்டு பிழையில்லாமல் உச்சரிப்புச் சுத்தத்துடன் பாடம் வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்துவார். தமிழில் அவருக்கு அதிக ஆர்வம். தமிழ் கீர்த்தனைகளாக இருக்கட்டும், தியாகராஜ கீர்த்தனைகளாக இருக்கட்டும், அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பாடச்சொல்லுவார். நிறையப் பயிற்சி செய்து பாட வேண்டும் என்பதில் மிகக் கண்டிப்பாக இருப்பார். அதெல்லாம் இன்றும் எனக்கு உதவுகிறது. ஞானமான சூழல் அது. அதுபோல குருநாதர்களும். புதுசு புதுசாகப் பாடல்கள் சொல்லிக் கொடுப்பார்கள். பாடுவதற்கு ஊக்குவிப்பார்கள். தைரியமாகப் பாடு என்று சொல்லி உற்சாகப் படுத்துவார்கள். இவர்கள் சின்ன வயதில் கொடுத்த தைரியத்தால்தான் நான் இன்று தைரியமாகப் பல விஷயங்களைச் செய்து கொண்டிருக்கிறேன்.

கே: உங்களது 'இசைப் பயணம்' நிகழ்ச்சி பற்றி...
ப: ஜெயா டி.வி.யில் இசைப் பயணம் நிகழ்ச்சி செய்தது என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. வாரம் ஒரு கர்நாடக இசை ராகத்தை எடுத்துக் கொண்டு அந்த ராகத்தைப் பற்றி விளக்கி, அந்த ராகத்தில் உள்ள கர்நாடக இசைப் பாடல்களைப் பாடி, பின்னர் அது தமிழ்த் திரைப்படப் பாடல்களில் எங்கு, எப்படி அமைந்துள்ளது என்பதை விளக்குவேன். மக்களுக்குக் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப் பாடல்களைக் கேட்டுச் சுவைக்கும் வாய்ப்பைத் தருவது நிகழ்ச்சியின் நோக்கம். அவற்றைக் கேட்கும்போது கர்நாடக இசையின் மேன்மையை உணர முடியும். திரைப் பாடல்களையும் நுணுக்கமாக ரசிக்க முடியும். அதையே தனி நிகழ்ச்சியாகச் செய்யும் வாய்ப்பும் வந்தது. வெளிநாடுகளுக்கும் சென்று நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். இதுவரை 'இசைப்பயணம்' டி.வி.டி. பத்து தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. உலக அளவில் நல்ல வரவேற்பு. எல்லா ஊர்களிலிருந்தும் இசைப் பயணம் நடத்த வாய்ப்புகள் வருகின்றன.

கே: உங்களது முதல் திரைப்பட வாய்ப்பு பற்றி...
ப: அதற்குக் காரணம் ஜெயா டி.வி.யில் செய்த 'இசைப் பயணம்' நிகழ்ச்சிதான். ஒரு நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியைச் சந்திக்க நேர்ந்தது. அவருக்கு என்னுடைய குரல் பாணி மிகவும் பிடித்துப் போனதால் என்னைப் பாட அழைத்தார். நான் திரையிசையில் பாடிய முதல் பாடல் 'நான் அவனில்லை' படத்தில் இடம்பெற்ற "காக்க காக்க கனம் காக்க" என்ற பாடல். அது நல்ல ஹிட் ஆகவே எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தார் ஆன்டனி சார். வேட்டைக்காரனில் இடம்பெற்ற "என் உச்சி மண்டையில" பாட்டு எனக்குத் தனித்த ஒரு அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. பல வாரங்கள் அந்தப் பாடல் முதலிடத்தில் இருந்தது. அது எனக்கு ஒரு பிரேக். சமீபத்தில் வெளியான 'வேலாயுதம்' படத்தில் இடம்பெற்ற "சில்லாக்ஸ்" பாடல். அது என்னை வேறு ஒரு லெவலுக்கே கொண்டு போய்விட்டது என்று சொல்லலாம். துபாய் FM, மலேசியா, சிங்கப்பூர் FM என்று எல்லா FMகளிலும் அந்தப் பாடல்தான் நம்பர் 1. இந்த வருடத்தின் நிறைய அவார்டுகள் அந்தப் பாடலுக்காக எனக்குக் கிடைத்திருக்கிறது.

கே: கர்நாடக இசைப் பாடகர்கள் திரைப்படங்களில் பாடுவதால் குரல்வளம் பாதிக்கப்படும் என்ற கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ப: இல்லை. அது உண்மையல்ல. யாரோ சிலருக்கு அப்படி பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். குரல் என்பது தனித்துவமானது. அது கைரேகை மாதிரி. எப்படி ஒருவரது ரேகை மாதிரி இன்னொருவர் கைரேகை இருக்காதோ அப்படித்தான் குரலும். ஒரே மாதிரி தோல் இருக்கலாம், தலைமுடி இருக்கலாம், உயரம் இருக்கலாம். ஆனால் குரல் இருக்கும் என்று சொல்ல முடியாது. அது மனிதருக்கு மனிதர் மாறுபடும். அதனால்தான் பார்வையற்றோரால் குரலை வைத்தே ஆட்களை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. ஒவ்வொரு குரலுக்கும் சில தனித்தன்மைகளும், சில ப்ளஸ், மைனஸ்களும் இருக்கத்தான் செய்யும். என்னைப் பொருத்தவரை என் குரலில் என்ன ப்ளஸ் இருக்கிறது, எது நன்றாக இருக்கிறது, என்ன பிரச்சனை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு அதை பேலன்ஸ் செய்து நிகழ்ச்சிகள் செய்தால் போதும். அவங்க சொல்றாங்க, இவங்க சொல்றாங்க என்று எதையும் கேட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. நம் குரலுக்கு நாம்தான் அளவுகோல். பாடும்போது அந்த comfort நமக்கு இருக்கும்வரை பிரச்சனை இருக்காது. குரலைச் சிரமப்பட்டு எதையும் பண்ணக் கூடாது.

கே: இசையுலகில் எத்தனையோ பல ஜாம்பவான்களை, மேதைகளைச் சந்தித்திருப்பீர்கள். அவர்களுடனான அனுபவங்கள் குறித்து...
ப: என் சிறு வயதிலேயே எம்.எஸ். அம்மாவைச் சந்தித்திருக்கிறேன். அவர்முன் பாடி ஆசி பெற்றிருக்கிறேன். செம்மங்குடி சீனிவாச ஐயரைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறேன். அவர் என்னை மிகவும் பாராட்டினார். "நல்ல குரல்வளம், சாரீரம், பாடாந்தரம், உச்சரிப்புச் சுத்தம் எல்லாம் இருக்கிறது. நீ அமோகமாக வருவாய்" என்று ஆசிர்வதித்தார். இது என்னால் மறக்க முடியாதது. அதுபோல சினிமாவில் பி. சுசீலாவிடம் ஆசி பெற்றது மறக்கமுடியாது. அவருக்கும் என்மீது அளவு கடந்த பிரியம். "சாரு, நீ ரொம்ப நன்னா பாடறேம்மா" என்று பார்க்கும் போதெல்லாம் சொல்வார். அதுபோல ஸ்டேஜ் ஷோவில் எஸ்.பி.பி. சாருடன் பாடியது பரவசமான அனுபவம். "கண்ணுக்குள் நூறு நிலவா" பாடினேன். நான் பாடின சில சங்கதிகளைக் கேட்டு அவர் பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

கே: உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் யார், உங்களைக் கவர்ந்த இசைக் கலைஞர்கள் யார், யார்?
ப: நிறைய பேரைச் சொல்லலாம். கர்நாடக இசையைப் பொருத்தவரை எம்.எஸ். அம்மாதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ஆனால் எனக்கு ரோல் மாடல் என்று நான் யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அது நம்மைக் கட்டிப் போட்டுவிடும். அவரவர்கள் தனக்கு எது சரியாக இருக்கிறதோ அதைச் செய்தார்கள். அதையே மற்றொருவரும் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த மாதிரி காப்பி பண்ணவும் கூடாது. எனக்கு அருணா சாயிராமிலிருந்து சீனியர் இசைக் கலைஞர்கள் எல்லோருமே இன்ஸ்பிரேஷன்தான். ஒவ்வொருவரிடமிருந்தும் ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்ளத்தான் செய்கிறோம். I have lot away inspirations. But no role model. என்னை மிகவும் கவர்ந்த இசைக் கலைஞர்கள் அருணா சாயிராம், பண்டிட் பீம்சேன் ஜோஷி போன்றோர். சினிமா இசையில் ஏ.ஆர். ரஹ்மான், விஜய் ஆன்டனி, ஷங்கர் மகாதேவன், ஹரிஹரன் எல்லோருமே என்னைக் கவர்ந்தவர்கள்தான்.

கே: உங்களது வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிச் சொல்லுங்கள்...
ப: லண்டன், கனடா, சிட்னி, மலேசியா, சிங்கப்பூர், அபுதாபி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். கர்நாடக இசை, திரையிசை என்று இரண்டுமே பாடியிருக்கிறேன். இரண்டுக்குமே நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த ஆடியன்ஸை அங்கே பார்க்கலாம். அந்த ஆடியன்ஸை இங்கே பார்க்கலாம். என்னுடைய 'இசைப் பயணம்' நிகழ்ச்சியின் ரசிகர்கள் அங்கே அதிகம். அவர்கள் என்னைப் பார்க்கும்போது, "உங்களுடைய நிகழ்ச்சிகள், வீடியோக்கள் எல்லாம் பார்த்த பிறகுதான் திரையிசையில் இவ்வளவு அழகு இருப்பது தெரிய வருகிறது. ஒரு பாடலை எப்படி ரசிக்க வேண்டும் என்பது புரிகிறது" என்று சொன்னதுண்டு. அங்கே முன்தீர்மானம் இல்லாமல் மக்கள் ரசிக்கிறார்கள்.

கே: மறக்க முடியாத கச்சேரி அனுபவம் என்று எதைச் சொல்வீர்கள்?
ப: கச்சேரிகள் எல்லாமே மறக்க முடியாத இனிமையான அனுபவங்கள் கொண்டவைதான். குறிப்பாக சிட்னியில் நான் பாடிய கச்சேரி மறக்க முடியாது. ஆயிரக்கணக்கான மக்கள் முன்னால் மிக கிராண்ட் ஆக அந்த நிகழ்ச்சி நடந்தது. ரசிகர்களும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர். அதுபோல 'பாரதி கலா மன்றம்' மூலம் கனடாவில் செய்த நிகழ்ச்சியையும் மறக்க முடியாது. Wonderful audience.

கே: TNF நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருக்கிறீர்கள் அல்லவா?
ப: 2003ல் TNF நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அது ஒரு நல்ல அனுபவம். ஆனால் நான் ஒரு சிறிய நிகழ்ச்சிதான் கொடுத்தேன். அப்போது நான் ஒரு வளரும் கலைஞராகத்தான் இருந்தேன். எனக்கு 'சிறந்த குரலிசைக் கலைஞர்' (Outstanding Young Classical Singer) என்ற விருது கொடுத்து கௌரவித்தார்கள். இப்போது அவர்களுக்காக முழுநீள நிகழ்ச்சி நடத்த ஆசைப்படுகிறேன். TNFக்காகவே வடிவமைத்துச் செய்ய ஆவல்.

கே: உங்கள் வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பவர்கள் என்று யாரைச் சொல்வீர்கள்?
ப: என் கணவர் கார்த்திக். மிகவும் திறமைசாலி. ஒரு விஷயம் சரியாக முடியும், முடியாது என்று ஆரம்பத்திலேயே கணித்துச் சொல்லிவிடுவார். அவர்தான் எனது முயற்சிகளுக்கு முழு ஆதரவு தந்து ஊக்கப்படுத்தி வருகிறார். 'இசைப்பயணம்' நிகழ்ச்சியைக் கச்சேரிகளாகச் செய்யலாம் என்று ஆலோசனை சொல்லி அதை ஆரம்பித்ததே அவர்தான்.

கே: சினிமா பாடல், கிளாஸிகல் பாடல் என்று மாறி மாறிப் பாட வேண்டியிருக்கும்போது குரல் வளத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். நீங்கள் அதற்கு என்ன பயிற்சி மேற்கொள்கிறீர்கள்?
ப: உண்மைதான். இரண்டுமே வேறு வேறு தளங்கள். குரல் வளத்தை வெவ்வேறு மாதிரிப் பயன்படுத்த வேண்டிய இடங்கள்தாம். நான் கத்திப் பேச மாட்டேன். ஒருவர் மீது கோபமே வந்தால் கூட அதைக் குரலுயர்த்தி வெளிப்படுத்தாமல் சாந்தமாய்த்தான் சொல்ல வேண்டும். எப்பவும் பணிவாக, அமைதியாகத்தான் பேச வேண்டும். அதற்கு மனதைப் பண்படுத்தி வைக்க வேண்டும். நான் நிறைய தியானம் செய்வேன். டென்ஷனாகாமல் அமைதியாக இருப்பேன்.

கே: உங்கள் பொழுது போக்குகள்...
ப: டிரெக்கிங், பயணம், அட்வென்ச்சர் எனது பொழுதுபோக்குகள். நிறைய ஊர்களுக்குச் செல்வோம். ஓடுதல், ஜாகிங், விளையாட்டுகள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள்.

கே: எதிர்காலத் திட்டங்கள்?
ப: யூ டியூபில் 'இசைப்பயணம்' என்று எனக்கான சானலே இருக்கிறது. இப்போதுள்ள இளைய தலைமுறை கற்றுக் கொள்வதற்கேற்ற மாதிரி இன்டர்நெட்டில் என்னுடைய பாடல்கள், கச்சேரிகள், ராகங்கள் பற்றிய விவரங்கள் எளிதாகப் பார்க்கக் கிடைக்கின்றன. தியாகராஜ கீர்த்தனைகளையும் அதற்கான விளக்கங்களையும் கொண்ட வீடியோ தொகுப்பு இசை கற்கும் மாணவர்களுக்கு மிகவும் பயனளிக்கக் கூடிய ஒன்று.



அதுபோல ஐட்யூன்ஸில் இருக்கிறது. ராகா, ஹம்மா எனப் பல தளங்களில் இலவசமாகவே எனது கச்சேரிகளை/பாடல்களை கேட்கலாம். இணையத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இசையையும், அதன் நுணுக்கங்களையும் பலருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இசை முழுவதும் பரவ வேண்டும் என்பதுதான் என் ஆவல்.

ரெகார்டிங் ஒன்றிற்குச் செல்ல வேண்டிய அவசரத்திலும் நமது கேள்விகளை எதிர்கொண்டார் சாருலதா மணி. அவர் பேசுவதே பாடுவது மாதிரிதான் இருக்கிறது. "தென்றலை நான் நன்கு அறிவேன். அந்த ஊரில் இருந்து கொண்டு இசை எல்லாம் ஈடுபாட்டோடு கற்றுக் கொள்வது மிகப்பெரிய விஷயம். இசை மாணவர்கள் அதைத் தொடர்ந்து செய்யுங்கள். ஆர்வத்தைக் கைவிடாதீர்கள். படிப்போடு இசையையும் தொடர்ந்து பயின்று வாருங்கள். எது எப்போது கைகொடுக்கும் என்பது நமக்குத் தெரியாது. கூடிய விரைவில் நான் வட அமெரிக்காவில் இருக்கும் இசை ரசிகர்களைச் சந்திப்பேன்" என்று சொன்னவரை வாழ்த்தி விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


இசைப் பயணம் அறக்கட்டளை
இசை வளர்ச்சிக்காகவே 'இசைப் பயணம் அறக்கட்டளை' என்றதொரு அமைப்பை நிறுவிச் சேவைகள் செய்து வருகிறோம். அதன் மூலம் நல்ல தரமான பல நிகழ்ச்சிகளைத் தந்து கொண்டிருக்கிறோம். சமூக சேவையும் செய்து வருகிறோம். நிகழ்ச்சிகள் நடத்தி, Downs syndrome பாதித்த குழந்தைகளுக்கும், பார்வையற்ற குழந்தைகளுக்கும் நிதி உதவி செய்திருக்கிறோம். இவை இலவச நிகழ்ச்சிகள் தான். பொதுமக்கள், ஸ்பான்ஸர்ஸ் தரும் நிதியைக் கொண்டுமே உதவிகள் செய்து வருகிறோம். அதற்கு 80G வரிவிலக்கு உண்டு. இந்த நிகழ்ச்சிகளின் மூலமாக, எதிர்காலத்தில் எல்லோருக்கும் பயன்படக் கூடும் என்பதற்காகவும், வருங்காலங்களில் யாரும் மறந்து போய்விடக் கூடாது என்பதற்காகவும் இதுவரை மக்கள் அரங்கிற்கு அதிகம் வராத அபூர்வமான கிருதிகளைப் பாடி, யு-ட்யூபில் பதிவு செய்திருக்கிறோம்.

சாருலதா மணி

*****


சாரு டிப்ஸ்
  • சாருலதா ஆல் இந்தியா ரேடியோவின் B Grade இசைக் கலைஞர்.
  • சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. மியூசிக் முடித்திருக்கிறார்.
  • 'யுத்தம் செய்' படத்தில் டான்ஸ் டீச்சர் வேடத்தில் நடித்திருக்கிறார்.
  • மிகவும் பிடித்த ராகம் காபி.
  • இணையதளம்: charulathamani.com
  • வலைப்பதிவு: charulathamani.blogspot.in
  • நாரதகான சபா, கிருஷ்ண கான சபா, பார்த்தசாரதி சபா உட்பட பல சபாக்களின் விருதுகளை இரண்டு முறை பெற்றவர்.
  • இசைக்குயில் விருது, சாதனைப் பெண் விருது உட்பட சுமார் இருபதுக்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
  • உலகெங்கிலும் சுமார் 600 இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.
  • பிரபல பின்னணிப் பாடகி மதுமிதா சாருலதா மணியின் இளைய சகோதரி.
  • 'ஒய் திஸ் கொலவெறி டீ' பாடலுக்கு எதிராகச் சகோதரிகள் இருவரும் இணைந்து தர்பாரி கனடா ராகத்தில் 'ஓவர் ஸீனு ஒடம்புக்கு ஆகாதுடா!' என்ற பாடலைப் பாடியுள்ளனர்.



© TamilOnline.com