தெரியுமா?: மெட்ராஸ் கஃபேக்கு வயது 10!
மௌன்டன் வியூவில் எல் கமீனோ ரியால்-பெர்னாடோ அவென்யூ சந்திப்பில் இருக்கும் மெட்ராஸ் கஃபேக்குள் நுழையாமல் தாண்டிப் போவது கடினம். சுடச்சுட மல்லிகைப் பூ இட்லி, மொறுமொறு வடை, தோசை வகைகள், எல்லாவற்றுக்கும் மேல் அந்த மணக்கும் பொங்கல்! ம்ம்ம்.... நாவில் எச்சில் ஊறவைக்கும் தென்னிந்திய உணவுகள்! ஆர்டர் கொடுத்துவிட்டு, "காப்பிக் கொட்டை வாங்க கொலம்பியாவுக்கு ஆள் போயிருக்கு போல" என்று ஜோக் அடிக்க முடியாது, அத்தனை விரைவான சேவை.

பிப்ரவரி 5, 2012 அன்று பத்தாண்டு நிறைவு காணும் மெட்ராஸ் கஃபேயைத் தொடங்கிய திரு. ராமமூர்த்தி ராமசாமி சிலிகான் வேல்லியில் சமீபகாலம் வரை பணிசெய்த தொழில்நுட்பவியலாளர் என்பது சுவையான செய்தி. சரியான விலையில் இங்கே கிடைக்கும் தரமான உணவின் ரசிகர்களாகட்டும், உணவகப் பணியாளர்கள் ஆகட்டும் மெட்ராஸ் கஃபேயுடன் நீண்ட காலத் தொடர்பு உடையவர்களாகவே இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கவனிப்பு ராமமூர்த்தியின் சிறப்பு அம்சம்.

'மெட்ராஸ் குரோசரிஸ்' என்ற பல்பொருள் அங்காடியையும் வாங்கி இவர் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவருடைய துணைவியார் ஒரு மருத்துவர்.

உதவும் கரங்கள், கேன்சர் இன்ஸ்டிட்யூட் என்று பல சமூகசேவை அமைப்புகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருபவர் ராமமூர்த்தி. "சமுதாயத்துக்கு ஏதேனும் திருப்பித் தருவது என் கடமையல்லவா?" என்கிறார் புன்னகையோடு. மெட்ராஸ் கஃபே தொடங்கிய நாள் முதலாகவே விடாமல் தென்றலை ஆதரித்து வரும் அவர் சொல்வது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகிறது என்பது நமக்குப் புரிகிறது.

ஜனனி நாராயணன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com