சென்னையில் மார்கழி
மார்கழி மாதம். சபாக்களில் சங்கீதம் களை கட்டிய நேரம். என் இரண்டு வார சென்னைப் பயணத்தில் இசையும் நாட்டியமும் இரு கண்களாக மாறின. பிரசித்தி பெற்ற சபாக்கள் முதல் புதியதாய் முளைத்த சபாக்கள்வரை மூத்த கலைஞர்கள், ஜனரஞ்சகக் கலைஞர்கள், இளைய கலைஞர்கள், வெளிநாட்டுக் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் காலம். சாலையோர சலசலப்புக்களுக்கு இடையே உயிரைக் கையில் பிடித்தபடி மியூசிக் அகாடமியில் கால் வைத்தாகிவிட்டது.

நாலு மணி கச்சேரிக்கு ஒரு மணி நேரம் முன்னதாக வந்துவிட்டோம். காபி வாங்க டோக்கனுடன் வரிசையில் நின்றபடி அமெரிக்காவும் லண்டனும் போக முடிந்தது. வந்திருக்கும் மாமாக்களும், மாமிகளும் தங்கள் மகன், மகள் பிரதாபத்தை வர்ணிக்க, பட்டுப் புடவைகளும் தங்க நகைகளும் ஜொலிக்க கூட்டம் சேரத் துவங்கியது. வரிசை நீண்டாலும் நேரம் தவறுவதில்லை. 3:30 மணி ஆகும்வரை காபிக்கடை திறக்கவில்லை. இந்தக் கூட்டம் எப்போது காபி குடித்து பஜ்ஜி தின்று கச்சேரி ஆரம்பிக்கும் என்று நான் நினைத்தபோது, IST (Indian Stretchable Time) என்ற கிண்டல் பொய்க்கும்படிச் சரியாக நான்கு மணிக்கு கன்யாகுமரி வயலின் இசை ஆரம்பம்!

மெல்ல வீசும் தென்றலில் இசை கலந்து சுவாசம் மகிழ்ந்தது. ஆலாபனையில் அசைந்து, அடுக்கு ஸ்வரத்தில் அதிர்ந்து பேசும் விரல்களின் வந்தனத்தில் வரவல்லபன் துரிதமாய் வந்தார். ஏழு ஸ்வரங்களின் கோர்வையில் கேளாத ராகமாய் ஜங்காரத்வனியில் தியாகரஜரின் கணபதி சாயை வாசித்து, அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பரிச்சயமான ஜகதானந்தகாரகா வாசித்தார். ஹரிகாம்போதியில் தினமணி வம்சவும், நடுநாயகமாய் ரங்கநாயகியும் கொஞ்ச, நடபைரவியில் ராகமும் தானமும் இணைய, சிந்துபைரவித் தில்லானாவுடன் தேவகானம் அரங்கத்தை ஆக்கிரமித்தது.

இந்த இசை மழையைத் தொடர்ந்து, தனக்கே உரிய அதிகாரத்தோரணையில் தோடி வர்ணத்தை தேடிப் பிடித்து கச்சேரியை ஆரம்பித்தார் சாகேதராமன். இந்தச் சின்ன உருவத்தில் இப்படி ஒரு சாகித்யம் இருக்குமோ என்று எண்ணும்படி உரிமையுடன் அந்த சிவன் நாமம் சொல்லிப் பழகு என்று நம்மை ஹிந்தோளத்தில் அழகாய் அதட்டினார். வெற்றி நமதே என்று ஜெய ஜெய ஜெய என்று நாட்டையில் கம்பீரமாகப் பாடினார். திருமயிலையில் கோயில் கொண்ட கபாலியைக் காணக் கண்கோடி வேண்டும் என்று விலாவாரியாகப் பாடி ஒரு முத்திரை பதித்தார். இதன் தாக்கத்தில் நான் அடுத்த நாள் கபாலியையும் கற்பகாம்பாளையும் தரிசிக்க ஓடியது உண்மை.

காத்திருந்த காலம் வீணாகாமல் உமையின் கடைக்கண் தரிசனம் தொடர்ந்து மைலாப்பூர் சபாவில் சிக்கில் குருசரணின் தேன் சொட்டும் சங்கீத மழையில் கிடைத்தது. வனஜாக்ஷ நின்னே என்று பேஹாகில் தொடங்கி மாருபல்க மனோரமணா என்று ஸ்ரீரஞ்சனியைத் தொட்டு, நளினகாந்தியின் நிஷாதமும் பஞ்சமமும் கெஞ்ச 'நீ பா த மே கதி' என்று கொஞ்சினார். தெருவில் வாராயோ என்று நாட்டுப்புற மெட்டில் பாடி, 'கற்ற கல்வி எல்லாம் கட்டுக்குள் அடங்கும்; கலை பெரிது காலம் சிறிது' என்று தண்டபாணி தேசிகரின் வரிகளை ஆணித்தரமாய் நெஞ்சில் பதிய வைத்தார். கங்கையை முடிமேல் அணிந்ததனால் சிந்துபைரவி மைலாப்பூரில் பாய்ந்தாளோ; சுருட்டிய கேசத்து கங்கை சுனாமியாய் பொழிந்தாளோ. அந்தரங்க ரகசியம் அம்பலம் ஆனதினால் ஆடும் பாதம் நில்லாமல் தூக்கியதோ...

அடுத்த நாள் அரங்கத்தை அதிர வைக்கும் ஐம்பது சிஷ்ய பரம்பரையுடன் அமர்ந்து, ராஜ கம்பீரத்துடன் T.M.கிருஷ்ணா பாட ஆரம்பித்தார். 38 நிமிடம் ஸ்ரீ விஸ்வநாதம் ராகமாலிகையில் பாட மோகனம், கௌளை, பைரவி, லலிதா, சங்கராபரணம், சாராங்கா, காம்போதி, பூபாளம், தேவக்ரியா என்று அத்தனை ராகங்களிலும் கற்பனை ஸ்வரங்கள் பாடி மனதைக் கொள்ளை கொண்டார். அடுத்துப் பாடியது வராளி என்று அனைவரும் யூகிக்க அது காலாநிதி ராகம் என்று எடுத்துச் சொல்லி நாடே நா என்று தியாகராஜா கிருதியைப் பாடினார். பின்னர் காம்போதியை விஸ்தாரமாகப் பாடி அரங்கத்தை அடக்கினார்.

கிழக்கும் மேற்கும் சங்கமிக்க, பாஸ்டன் நகரத்து கிடார் பிரசன்னாவின் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி. சக்தி மசாலாவின் சைவ உணவுத் திருவிழாவும், இசை மழையும் விஜய் டிவி உபயத்தில் அனைவருக்கும் கிடைத்தது. அரங்கத்துக்கு அரங்கம் வேறுபட, இசைவல்லுனர்கள் தங்கள் திறமைக்குச் சவாலாய் கொண்டனர். சரணம் பவ கருணாமய என்று ஹம்ச விநோதினியில் தொடங்கி எந்தரோ மகானுபாவருவில் தொடர்ந்து, வாசஸ்பதியில் இழைத்து, ராகமாலிகையில் ராகம்-தானம்-பல்லவியைச் சுவைக்க வைத்தார். ஏறி இறங்கும் வாழ்க்கையாய் ரேவதியும், எழிலாய் நடக்கும் மங்கையாய் மோகனமும், முதலும் முடிவுமாய் ஹம்சத்வனியும், மறைந்திருந்து பார்த்த மர்மமாய் ஹிந்தோளமும் சில நெளிவு சுளிவுகளுடன் 4 on 5 என்ற பெயரில் புரியாத புதிரைப் புரிய வைக்கும் வண்ணம் வாசித்தார். இறுதியில் அன்பைப் பொழியும் அமைதி என்று ஒரு சேர்ந்திசை வழங்கினார். திரையுலகில் கால் வைக்கும் இவரது கைவரிசை நிச்சயம் கொடிகட்டும்.

டிசம்பர் 25. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மியூசிக் அகாடமியில் என்று தீர்மானம் செய்துவிட்டோம். காலை ஒன்பது மணிக்கு T.N.கிருஷ்ணன் அவர்களது குடும்பத்து மூவர் இணைந்து வழங்கும் வயலின் இசை. அந்த இரண்டு மணி நேரத்தில் 'நானென்னும் அகந்தை விலகியது; எல்லாம் நீயே என்பது புரிந்தது. தேடினாலும் கிடைக்காத அந்த தெய்வத்தை இந்த எண்பது வயது கையசைவில் கொண்டு வந்து நிறுத்தியது அற்புதமே. அதைத் தொடர்ந்து அமெரிக்க மண்ணில் பிறந்து, வளர்ந்து இன்று கர்நாடக சங்கீத உலகில் முன்னணியில் நின்று நமக்கெல்லாம் நம்பிக்கை ஊட்டும் சந்தீப் நாராயணனின் கச்சேரி. முதல் வரிசையில் அமர்ந்து T.N.கிருஷ்ணன் முழு கச்சேரி கேட்டதே அதன் நேர்த்தியைச் சொல்லும்.

மாலை ரஞ்சனி காயத்ரியின் இசை. கூட்டம் அலை மோதியது. நாட்டை வர்ணத்தில் ஆரம்பித்து, நந்தகோபனின் தர்பாரில் திருப்பாவை பாடி அடுக்கு சங்கதியில் அமைந்த சாவேரியில் பலமு குலமு ஏல ராமா என்று கொஞ்ச, கேட்பவர் நெஞ்சம் இளகியது. தேவகாந்தாரியில் சாரதே வீணா பாடி, சண்முகப்ரியாவில் மாமவ கருணைய பாடி அதைத் தொடர்ந்து ஜனரஞ்சனியில் ஸ்மரணே சுகமு ராமா நாம என்று பாடியபோது எந்த ராகத்தில் பாடினாலும் உன் பாடல் சுகம், பாடாது நான் கேட்டால் கேள்வி ஞானமே சுகம் என்று கவிபாடத் தோன்றியது. ரஞ்சனி காயத்ரி கச்சேரியில் விருத்தம் கேட்பது சுகத்திலும் சுகம். ஆதியாய் நடுவுமாகி அளவில்லா அளவுமாகி என்று தில்லை பொதுநடம் போற்றியபோது கண்கள் நீர் மல்கின.

டிசம்பர் 31. இன்னும் இரண்டு மணி நேரத்தில் புது வருடம் பிறக்கப் போகிறது. மீண்டும் மியூசிக் அகாடமி. 'கர்நாடிகா'வின் மூலம் சிறப்பு நிகழ்ச்சி. பன்னிரண்டு ராசி பலன்களுக்கும், கிரகங்கங்களின் சுழற்சிகளுக்கும், ஏழு ஸ்வரங்களுக்கும், இசைக்கும் உள்ள ஒற்றுமையை விவரித்த நிகழ்ச்சி. பல கைதேர்ந்த பாடகர்கள், கலைஞர்களின் இசை. திருச்சூர் சகோதரர்கள் பாடிய ராமா நாமம் கலியுகத்திற்கு விமோசனம் தரும்படி இருந்தது குறிப்பிடத்தக்கது. சரியாக பன்னிரண்டு மணி. அரங்கம் அமைதியில் ஆழ, அனைத்துக் கலைஞர்களும் இணைந்து எந்தரோ மகானுபாவரு என்று பாட நம் மனம் சாந்தி அடைந்தது. எப்போதும் அமெரிக்கத் தொலைகாட்சியில் நியூ யார்க் நகரக் கொண்டாட்டத்தை கண்டு ரசிக்கும் அடுத்த தலைமுறையும், கண் கொட்டாது, காது மூடாது ரசித்துக் கேட்டது வரப்பிரசாதம். தொடர்ந்து சாந்தி நிலவ வேண்டும் பாடியது மிகவும் அருமை.

டாக்டர் வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com