பாறைக்குள் பாசம்
"டேய் அங்க பாருடா! புதுசா ஒரு வகுப்பு உதவியாளர். இவள் எவ்வளவு நாள் தாங்கறா பாக்கலாம்" இதுதான் எனக்குக் கிடைத்த முதல் வரவேற்பு. அளித்தவன் 'கிங்காங்' எனப்பட்ட பள்ளியின் முடிசூடா மன்னன் ஜான். 13 வயது. ஆனால் 6 அடி உயரம்; நான்கடி அகலம். பெருந்தலை. பரந்த தோள்கள். இரு காதுகளிலும் ஜொலிக்கும் வெள்ளைக் கடுக்கன்கள். பெரிய கழுத்துச் சங்கிலி. கண்களில் குறும்பு. வாயில் சதா குதப்பும் சூயிங்கம்.

"பாவம், ஒரு வாரம் தாங்க மாட்டாள். கவலையே வேண்டாம்" இது அவன் வகுப்புத் தோழர்களின் கோரஸ்.

இப்படியாகத் தொடங்கியது என் கல்விப் பணி. சிலிகான் பள்ளத்தாக்கிலுள்ள பள்ளிகளிலேயே மிகக் கடினமான குழந்தைகள் உள்ள இப்பள்ளியில் நான் வேலை ஏற்றுக் கொண்டிருக்கக் காரணம், என்னைப் பிடித்திருந்த ஏழரை நாட்டான்தான்.

என்னைப் பார்த்துக் கொண்டு கேலியும் கொக்கரிப்புமாக மாணவர்கள் வகுப்பறையில் நுழைந்தனர். அவர்களின் இரைச்சலைக் கண்டுகொள்ளாமலே வகுப்பாசிரியை அன்றைய தின அட்டவணையைப் படிக்க ஆரம்பித்தார்.

"ஐயோ... இவள் என்னடா ஒரு ரோதனை? வகுப்பில் வந்து ஒரு நல்ல தூக்கம் போடலாமென்றால் ரோதனையை ஆரம்பித்து விட்டாளே. எங்களுக்கு ஒரு அட்டவணையும் தேவையில்லை. தூங்க விடு, ஆளை" இப்படி உபதேசித்தவர் திருவாளர் கிங்காங் அவர்கள்தான்.

இதைக் கேட்டு 'கொல்' என்று சிரித்தவாறே மாணவ, மாணவியர் அரட்டையில் இறங்கினர். இப்படியும் கூட அமெரிக்காவில் வகுப்பறைகள் இருக்குமா என்ற சந்தேகத்தில் என் தலை கிறுகிறுத்தது.

இப்படியாக நாள் முழுவதும் கழிந்தது. ஆசிரியை மணிக்கொருமுறை பாடங்களை மாற்றுவதும், எதையும் கவனிக்காது மாணவர்கள் பேசுவதும், கிங்காங் குறட்டை விடுவதுமாக.

தொடர்ந்து வந்த நாட்களில் கிங்காங்கின் வாழ்க்கை வரலாறு எனக்குத் தெரிய வந்தது. அப்பா ஜெயிலில். அம்மா குடி, போதை மருந்துகளுக்கு அடிமை. அவர்கள் அனைவரையும் கவனித்துக் கொள்வது அம்மாவின் அம்மா - தாய்வழிப் பாட்டி.

நான் வேலையில் சேர்ந்து சில வாரங்களாகி விட்டன. ஜானும் அவன் தோழர்களும் என்னை அவர்கள் வகுப்பின் ஒரு அம்சமாகச் சேர்த்துக் கொண்டுவிட்டனர்.

பள்ளியின் இடைவேளைகளில் மற்றக் குழந்தைகளை மிகவும் இம்சிப்பான் ஜான்.

"ஏய் மேரி, உன் சாப்பாட்டுப் பையை இங்கே தள்ளு! ஜேம்ஸ், உங்கம்மா சாப்பாடு வாங்கக் கொடுத்த ஐந்து டாலரை எனக்குக் கொடுக்கலைனா ஷூ இல்லாமல் நீ வெறும் காலால் பள்ளி முழுக்க நடக்க வேண்டியிருக்கும்" என்று தமிழ்ப் பட வேட்டி கட்டின வில்லனைப் போல் உருட்டி மிரட்டுவான்.

"ஜானை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. பலமுறை 'சஸ்பென்ட்' செய்தாச்சு. பாட்டியிடமும் சொல்லியாச்சு. கவுன்சலர்களும் சைகாலஜிஸ்டுகளும் விழி பிதுங்குகிறார்கள்" - இது ஒரு ஆசிரியை என்னிடம் சொன்னது.

இப்படியாக நாட்கள் கழிய, ஒரு நாள் நான் வகுப்பில் நுழையும் போதே, "சேதி தெரியுமா? குடித்துவிட்டு ரகளை செய்ததற்காக என் அம்மாவும் ஜெயிலுக்குப் போகப் போகிறாள். குடும்பத்தை செட்டில் செய்துவிட்டு 2 நாளில் சரணடையச் சொல்லியிருக்கிறார்கள் போலீசில். இனி, எனக்கும் என் தம்பிக்கும் ஒரு கண்ட்ரோலும் கிடையாது. பாட்டியை நன்கு ஏய்க்கலாம்" என்று சொல்லிக்கொண்டே தன் இருக்கையில் அமர்ந்தான் ஜான்.

வகுப்பில் சட்டென ஒரு நிசப்தம். என் வயிறு ஏனோ கலங்கியது. வகுப்பாசிரியை தன்னை சமாளித்துக் கொண்டு, "ஜான், எங்கள் அனைவரது வருத்தமும் உனக்கு. நாங்கள் எப்படி உனக்கு உதவலாம்?" என்றார்.

"இதென்னடா வம்பு, எல்லோரும் ஏதோ சாவு நடந்தது போல உறைந்து விட்டீர்களே? என் தினசரி வாழ்வே இதுதான். குடித்துவிட்டு ஆடும் அடுத்த வீட்டுக்காரர்கள். இரவு முழுவதும் துப்பாக்கிச் சூட்டின் சப்தம். பொழுது விடிந்ததும்தான் தெரியும் எந்த நண்பன் இறந்தான் என்று. ஜெயிலுக்குப் போவது என்னைப் பொறுத்தவரை புழக்கடைக்குப் போவது போல. இந்தச் சோக நாடகத்தை விடுங்கள்" என்றான் விறைப்பாக.

இது நடந்து முடிந்த இரண்டாம் நாள். ஜான் வகுப்பில் நுழைந்தான். அன்று அவனது தாய் சரணடைய வேண்டிய நாள். அவன் முகம் இருண்டிருந்தது போல எனக்குத் தோன்றியது.

ஆசிரியை வழக்கம்போலத் தன் அட்டவணையைத் தொடங்கினார். ஜான், என்னை நோக்கியபடி, "மிஸஸ்ஜி, நான் ஒரு 15 நிமிடம் வெளியில் உட்காரப் போகிறேன்" என்று விறைப்பாகக் கூறிக்கொண்டே வகுப்பிற்கு வெளியில் நடந்தான். நான் அவனைத் தொடர்வதாக ஆசிரியைக்குக் கண் ஜாடை காட்டிவிட்டு அவனைத் தொடர்ந்தேன்.

வகுப்பறைக் கதவுக்கு வெளிப்புறம் இரண்டு இருக்கைகள் எப்போதும் உண்டு. ஒன்றில் ஜான் அமர, நான் மற்றதில் அமர்ந்தேன் அவன் என் கைகளைப் பற்றிக் கொண்டான். "மிஸஸ்ஜி, இன்று பள்ளியிலிருந்து வீடு திரும்பினால் என் அம்மா இருக்க மாட்டாள். போலீசிடம் போயிருப்பாள். அவளில்லாது நானும் தம்பியும் இனி என்ன செய்வோம்? அவள் குடிகாரிதான். மோசமானவள்தான். ஆனாலும் அவள் எங்கள் அம்மா. அவளால் ஜெயிலின் சித்ரவதைகளைத் தாங்க இயலாது. அவள் மிகவும் பலவீனமானவள்" என்று சொல்லிவிட்டு கேவிக்கேவி அழுதான்.

நான் உறைந்து விட்டேன். பாசமே தெரியாது என்று நான் நினைத்த பாறையா இப்படிப் புலம்புகிறது? இரக்க உணர்ச்சியே இல்லாதது என நினைத்த கிங்காங்கா இப்படிக் கதறுகிறது?

அந்த நொடியில் அவன் தாயைப் பிரிந்து தவிக்கும் ஒரு மூன்று வயதுக் குழந்தையாகத்தான் என் கண்களுக்குத் தெரிந்தான். அவன் கரங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, "ஓ ஜான். உன் தாயை நீ பிரியப் போவது எனக்கு நன்கு புரிகிறது. ஆனால் நீ இப்படிக் கலங்கக்கூடாது. அவள் வரும்வரை நீ உன் பாட்டியையும், தம்பியையும் வீட்டின் தலைமகனாகக் காக்க வேண்டும். ஜெயிலில் கிடைக்கும் கவுன்சலிங், மருத்துவ உதவிகளைப் பெற்று, முற்றிலும் புதிய மனுஷியாக உன் தாய் திரும்பி வருவார். நாங்கள் அனைவரும் உனக்காகப் பிரார்த்திக்கிறோம். எந்த உதவியும் செய்வோம். கலங்காமல் கண்களைத் துடைத்துக்கொண்டு உள்ளே வா" என்று சொல்லிவிட்டு, நான் வகுப்பறைக்குள் நுழைந்து ஒன்றுமே நடவாததுபோல் இருக்கையில் அமர்ந்தேன்.

15 நிமிடத்தில் ஜான் உள்ளே வந்தான். மற்ற மாணவர்களோ, ஆசிரியையோ அவனை கவனிக்கவில்லை. என்னை அவன் பார்த்த பார்வையில் நன்றியும் பாசமும் தெரிந்தன. தன் இடத்தில் அமர்ந்தான்.

ஆசிரியை, " ஏய் ஜான்... இவ்வளவு நேரம் வெளியில் என்ன செய்தாய்? உன் பாட்டியைக் கூப்பிட்டு புகார் செய்ய வேண்டியதுதான்" என்றாள்.

ஜான் என்னைப் பொருள் பொதிந்த பார்வையோடு நோக்கினான். சில நிமிடங்களுக்கு முன் வெளியில் நடந்த சம்பவம் எனக்கும் அவனுக்கும் மட்டுமே தெரிந்தது. உலகில் ஒருவருக்கும் தெரியாது, புரியாது.

பாறையின் பாசம் ஒரு தாய்க்கு மட்டுமே புரியும். இனி, இந்தப் பாறை பொறுப்பான ஆண்மகனாக இருக்கும் - தாய் சிறையிலிருந்து வரும் வரையாயினும்!

மாலா பத்மநாபன்,
சாரடோகா, கலிஃபோர்னியா

© TamilOnline.com