சிறுநீரகக் கோளாறுகளைத் தடுக்க
"நல்லாத்தான் இருந்தாரு எங்க மாமா, திடீர்னு கிட்னி வேலை செய்யலைன்னு சொல்லி டயாலிசிஸ் தேவைன்னுட்டாரு டாக்டர்! ஒரே வருசத்துலே ஆளே பாதி ஆயிட்டாரு; கையிலே இருக்கற காசெல்லாம் கரைஞ்சு போச்சு!" முப்பது வருடங்களுக்கு முன்னே இப்படி ஒரு உரையாடலைக் கேட்பது அரிது. இந்நாளில் அரிதல்ல. சிறுநீரகக் கோளாறு என்பது தற்காலத்தில் அதிகமாகிக் கொண்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் தீ போலப் பரவிவரும் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை.

தெற்காசிய மக்களுக்கு மரபியல் ரீதியில் நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம்; அதற்கு மேல் நம்முடைய உணவுப் பழக்கங்கள் இந்த வாய்ப்பை அதிகரிக்கின்றன. அளவுக்கு அதிகமாக அரிசி, மாவுச்சத்து ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுவதால் இன்சுலின் தட்டுப்பாடு ஏற்ப்பட்டு விடுகிறது; போதாதென்று, உடற்பயிற்சியே கிடையாது இந்த வாகன யுகத்தில்.

நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் பெரும்பாலானோர் அதில் கவனம் செலுத்தத் தவறி விடுகிறார்கள். இதனால் உடம்பில் முக்கிய உறுப்புக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு ஏற்படுகிறது. நீரிழிவு நோய் உடையவர்கள் மருத்துவரிடம் போனால் முன்று மாதத்துக்கு ஒரு முறை A1C என்கிற இரத்தப் பரிசோதனை செய்வார்கள். இதன் விழுக்காடு 7 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால், சர்க்கரையின் அளவு அதிகம் என்பதை உணர்த்துகிறது. நீரிழிவு நோய்க்கான மருந்து மாத்திரை, இன்சுலின் ஊசி ஆகியவை பரிந்துரைத்த அளவில் எடுத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவைச் சீராக வைக்க முடியும். கட்டுப்பாட்டில் இல்லாதபோது சர்க்கரை, முக்கியமாகக் கண்களையும் சிறுநீரகங்களையும் பாதிக்கிறது. வெகு நாட்களுக்கு இப்படியே தொடர்ந்தால் சிறுநீரகம் புரதத்தை வெளியேற்ற ஆரம்பிக்கிறது. புரதம் வெளிப்பட்டால் நீரிழிவுச் சிறுநீரக இடர் (Diabetic nephropathy) என்பதை உணர்த்துகிறது (வேறு எதுவும் பிரச்சினை இல்லாதபோது).

சிலருக்கு நீரிழிவு இருக்கிறது என்பது தெரிய வரும்போதே இந்த பாதிப்பு உண்டாயிருக்க வாய்ப்பிருக்கிறது; அவர்கள் சரியான இடைவெளியில் மருத்துவரிடம் போவதைத் தவிர்த்து ஏதும் பிரச்சனை என்றால் மட்டுமே பரிசோதனை செய்துகொள்வர். ஒவ்வோர் ஆண்டும் முதன்மை மருத்துவரிடம் சென்றால் நீரிழிவு நோய்க்கான சோதனைகள் செய்து சீக்கிரமே அறிந்து கொள்ளலாம். நீரிழிவு உள்ளவர்கள், சிறுநீரில் நுண்புரதம் (Microalbumin) உள்ளதா இல்லையா என்று ஆண்டுக்கு ஒரு முறையாவது பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இது ஆரம்பநிலை சிறுநீரக நோயைக் குறிக்கும்.

அடுத்த பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் (BP அல்லது பிரஷர்) என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. நடுவயதைத் தொட்டவுடன் பலருக்கு இந்த பிரச்சனை தொடங்குகிறது. முக்கியக் காரணம் மன உளைச்சல், வேலைப் பளு, குடும்ப பாரம் என்று பரவலாகப் பேசப்பட்டாலும் உடம்பிலுள்ள ரத்தக் குழாய்கள் வயது ஆக ஆகக் கெட்டியாகி விடுகின்றன. மேற்சொன்ன காரணங்கள் இதை அதிகரிக்கும்.

எல்லாவற்றையும் விட, உணவில் உப்பு அதிகம் ஆக ஆக இரத்த அழுத்தம் அதிகமாகிறது. "நான் உப்பே சேர்த்துக் கொள்வதில்லை" என்று ஏறக்குறைய எல்லா நோயாளிகளும் என்னிடம் சொல்வார்கள். ஆனால் மேலும் குடைந்தால் விஷயம் வெளியே வரும்: நொறுக்குத்தீனிகள், ஊறுகாய்கள், சிலவகை இறைச்சிகள், துரித உணவு வகைகள் எல்லாமே எக்கச்சக்க உப்புச் சேர்ந்தவை. ருசியாக எது உண்டாலும் அதில் உப்பு, சர்க்கரை மற்றும்/அல்லது கொழுப்புச் சத்து அதிகம். அதற்காக வைக்கோலை தினமும் தின்ன முடியாது. மிதமாக உப்புச் சேர்த்து, மருந்துகளை முறையே எடுத்துக் கொண்டால் இதைச் சீர் செய்து விடலாம். வீட்டிலேயே சோதனை செய்யும் கருவிகள் எளிதாகக் கிடைக்கின்றன.

நீரிழிவு நோய் உடையவர்கள் ரத்த அழுத்தத்தை 130/80க்குள் வைத்திருப்பது முக்கியம். புரதம் வெளியேறும் அளவிற்குச் சிறுநீரக இடர் ஏற்ப்பட்டு விட்டால், நோய் முற்றுவதைத் தடுக்க ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பது அவசியம். இதற்கு இரண்டு அல்லது மூன்று மாத்திரைகள் தேவைப்படலாம். ACE inhibitors அல்லது ARB என்ற வகை மாத்திரைகள் ரத்த அழுத்தத்தைக் குறைத்துச் சிறுநீரகங்களையும் பாதுகாக்கின்றன.

வலி நிவாரண மாத்திரைகள் பல சிறுநீரகத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. NSAIDs என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் மாத்திரைகள் (Ibuprofen, Motrin, Advil, Alleve, Naprosyn போன்றவை அமெரிக்காவில் மற்றும் Brufen, Voveran போன்றவை இந்தியாவில்) சிறுநீரகத்தைப் பல வகைகளில் பாதிக்கும்; குறிப்பாக நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்குச் சிகிச்சை எடுத்துக் கொள்வோர் இந்த மாத்திரைகளைத் தவிர்ப்பது உசிதம். அதுவும், சரியாக உணவு உட்கொள்ளாத போதும், வாந்தி, பேதி இருக்கும் போதும் இவற்றைத் தவிர்த்தல் அவசியம். ஜலதோஷ நிவாரணத்துக்காக எடுத்துக்கொள்ளும் Sudafed போன்றவை இவை சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்காவிட்டாலும் ரத்த அழுத்தத்தை உயர்த்திவிடும். Claritin, Zyrtec போன்றவை ரத்த அழுத்தத்தை பாதிக்காது. Tylenol வகை மாத்திரைகள் இத்தருணங்களில் தீங்கு தராதவை.

சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அடிக்கடி நோய்த்தொற்று வந்தால் அது சிறுநீரகத்தின் வேலைத்திறனை பாதிக்கும். அதேபோல், சிறுநீரகப் பாதைக் கற்கள் இருந்தால் அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்வதுடன், கல் உருவாகாமல் தடுக்கும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கற்கள் அடிக்கடி ஏற்பட்டாலோ, பெரிதானாலோ அது சிறுநீர்ப் போக்கை அடைத்துக் கொண்டு, மேலும் சிறுநீரகப் பணியை பாதிக்கும்.

சிறுநீரகம் பழுதடைந்து விட்டால் dialysis அல்லது சிறுநீரக மாற்று (transplant) ஆகியவை தேவைப்படுகிறது; இதனால் பல குடும்பங்கள் ஆண்டியாகும் நிலைக்குத் தள்ளப் படுகின்றன. இதையெல்லாம் பார்க்கும்போது, 'சிகிச்சையை விட தவிர்த்தலே மேல்' என்பது உறுதியாகிறது.

மேலும் விவரங்களுக்கு www.kidney.org, www.aakp.org என்கிற வலைத்தளத்தை பார்க்கவும்.

மரு. நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com