தென்றல் பேசுகிறது...
சூரிய ஒளியின்மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான செலவுகள் குறைந்து வருகின்றன என்றும், இந்திய அரசின் சரியான அணுகுமுறை காரணமாக இந்தத் துறை இந்தியாவில் விரைந்து வளர்ந்து வருகிறது என்றும் நியூ யார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்று கூறுகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். நாட்டின் பெரும்பரப்பில் ஆண்டின் பெரும்பகுதி நாட்கள் சூரிய ஒளியை அமோகமாகப் பெறுகின்ற இந்தியா சூரிய மின்சார உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக முன்னேறும் வாய்ப்புக் கொண்டதாகும். காற்று மற்றும் நீர் மின்சாரம் என்ன விலைக்குக் கிடைக்கிறதோ அதே விலையைச் சூரிய மின்சாரம் எட்டும் நாள் தொலைவில் இல்லை என்று அறிந்தோர் கூறுகின்றனர். வழக்கம்போலச் சீனாவிலிருந்து விலை குறைந்த ஆனால் தொழில்நுட்பச் சிறப்பில்லாத சூரியக் கலன்கள் இந்தியாவில் வந்து குவிகின்றன. ஆனால், மிகமெல்லிய படலங்களைப் பயன்படுத்தும் நவீனத் தொழில்நுட்பத்தை அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து பெற்றுப் பயன்படுத்துவது நாளாவட்டத்தில் நன்மை தரும். இது மின் உற்பத்தியில் தற்சார்பையும் ஏற்படுத்தும்.

*****


இந்த இடத்தில் அணு மின்சாரம் குறித்துச் சிந்திப்பதும் அவசியமாகிறது. ரஷ்யக் கூட்டுறவோடு செய்யப்படுகிற ஒரே காரணத்தாலேயே கூடங்குளம் எதிர்ப்பு தூண்டிவிடப்படுகிறது என்று ஒரு சாராரும், இல்லை, உடல்நலக் கேடு, சூழல் மாசு என்று இந்தக் காரணங்களாலேயே எதிர்க்கிறோம் என்று மறுசாராரும் போரிட்டு வருகிறார்கள். பாதுகாப்பு ஒன்றே கருத்தில் கொள்ளப்பட வேண்டியது என்றால், நாம் மீண்டும் மாட்டுவண்டி யுகத்துக்கே போக வேண்டியதுதான். சைக்கிள் தொடங்கி ஆகாய விமானம் வரை எல்லாமே உயிருக்கோ உடலுக்கோ வெவ்வேறு அளவுகளில் அபாயம் விளைவிப்பவைதான். ஆனால் சிந்திக்கத் தெரிந்த மனிதன் எவ்வளவு அபாயம் ஏற்கத் தக்கது, அதனால் விளையும் பயன் என்ன என்று எடைபோட்டுத் தேர்ந்தெடுக்கிறான். அப்படிப் பார்த்தால், அணு மின்சாரமும் தள்ளத் தக்கதல்ல என்றே கருத வேண்டியிருக்கிறது. இதில் அரசியல் புகக்கூடாது.

*****


தென்றல் சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற கதைகள் வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. இது எங்களுக்குப் பெரும் உற்சாகத்தைத் தருகிறது. இந்த இதழில் ஷைலஜா எழுதிய 'மாடு இளைத்தாலும்' என்ற மூன்றாம் பரிசுக் கதை வெளியாகியுள்ளது. நிச்சயம் உங்கள் நெஞ்சை அது தொடும். தவிர, 'நெஞ்சம் தொட்டவர்கள்' எனச் சாதனையாளர்கள் மகி, கோபி ஆகியோரைப் பற்றிய கட்டுரையும் உங்களைக் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழின் மிக முக்கிய எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் நேர்காணல் தொடர்ச்சி இந்த இதழுக்குச் சுவை கூட்டுகிறது. இந்தப் புத்தாண்டு விருந்தை உங்கள் கைகளில் பெருமையோடு சமர்ப்பிக்கிறோம்.

*****


2011ல் மக்களின் எழுச்சி உலகின் பல பகுதிகளிலும் கொடுங்கோலர்களைத் தூக்கி எறிந்தது. இந்தியாவிலும் அது ஜனநாயகத்தின் அழுகிய பகுதிகளைத் தொட்டுக்காட்ட முயற்சித்தது. இவற்றை மறுமலர்ச்சியின் ஆரம்பம் என்றுதான் கொள்ள வேண்டும். பொறுத்திருப்போம், புத்தாண்டில் நன்மை விளையும்.

தென்றல் வாசகர்களுக்குப் புத்தாண்டு எல்லா நலமும் வளமும் மகிழ்வும் சேர்க்கட்டும் என வாழ்த்துகிறோம்.


ஜனவரி 2012

© TamilOnline.com