டல்லாஸில் இசை நிகழ்ச்சி
அக்டோபர் 16, 2011 அன்று, சென்னை உதவும் கரங்கள் அமைப்புக்கு நிதியுதவி வழங்குவதற்காக, 'ஹரியுடன் நான்' புகழ் 'ஹார்மொனி அன்லிமிடெட்' குழுவினரின் இசை நிகழ்ச்சி டல்லாஸின் கிரேன்வில் ஆர்ட்ஸ் சென்டர் அரங்கத்தில் நடைபெற்றது. 750 பேர் கொள்ளும் அரங்கத்தின் சீட்டுகள் ஒரு வாரம் முன்னரே விற்றுத் தீர்ந்து விட்டன. சிறுவர் சிறுமியர் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவக்கியது.

திரையிசைக் கலைஞர்கள் மணி, நவீன், வெங்கட் இசையமைப்பில், ஹரியுடன் நான் புகழ் ரவிசங்கர், கோபாலகிருஷ்ணன், நிரஞ்சன், லக்ஷ்மி, பார்கவி, சரண்யா ஆகியோர் பாடி மகிழ்வித்தார்கள். திரட்டிய நிதியான 43,000 டாலருக்கான காசோலையை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன் சார்பில் ராமன் வேலு மற்றும் விசாலாட்சி வேலு, அமெரிக்க உதவும் கரங்கள் அமைப்பின் நிர்வாகி டாக்டர். பத்மினி அவர்களிடம் வழங்கினார்கள். முன்னதாக உதவும் கரங்கள் அமைப்பின் சேவையை விவரிக்கும் ஒலி ஒளி காட்சியும், சென்னையில் இரண்டு மாதம் தங்கியிருந்து சேவை செய்து வந்த செல்வி ரம்யா அவர்களின் உரையும் பார்வையாளர்களின் நெஞ்சைத் தொட்டது. டல்லாஸ் தமிழ் நேரம் ரேடியோவின் ஹேமா மோகன் தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாஸ்தா தமிழ் ஃபவுண்டேஷன், மெட்ரோப்லக்ஸ் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள், தமிழ்ப் பள்ளிகள் இணைந்து செய்திருந்தார்கள்

செய்தி: தினகர்
புகைப்படம்: முத்துக்குமார் ராமலிங்கம்

© TamilOnline.com