பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளித் திருநாள்
நவம்பர் 19, 2011 அன்று, சான் ஃபிரான்சிஸ்கோ பகுதியில் இயங்கி வரும் பாரதி தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருநாளை மில்பிடாஸ் ஜெயின் கோவில் கலையரங்கில் கோலாகலமாகக் கொண்டாடியது. இந்தியாவின் கலாசாரப் பன்முகத் தன்மைக்கு எப்படி ராமாயணம் ஒரு உதாரணமாக விளங்குகிறது என்பது போன்ற சுவையான கட்டுரைகள் கொண்ட தீபாவளி மலர் ஒன்று வந்திருந்தோருக்கு வழங்கப்பட்டது.

சுந்தரின் வயலின் இசையுடன் பிரவீண் விநாயகரைத் துதித்துப் பாடிய கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியைச் சங்கச் செயலர் திருமுடி, பொருளாளர் வாசு ஆகியோர் தொகுத்தளித்தனர். தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மீண்டும் சித்திரை முதல் தேதிக்கு மாற்றிய தமிழக அரசின் ஆணையை பாரதி தமிழ்ச் சங்கம் வரவேற்று, நன்றி தெரிவித்தது. தெய்வீக இசை, மெல்லிசைப் பாடல், கிராமியப் பாடல், கர்நாடக இசை, பரதநாட்டியம் எனப் பல ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் வளரும் மற்றும் பிரபல கலைஞர்களால் வழங்கப் பட்டன. அகிலா ஐயர், பாரதி சிவராமகிருஷ்ணன், தீபா மஹாதேவன், காயத்ரி சுகவனம், கீதா ஷங்கர், கோபி லக்ஷ்மிநாராயணன், ஹரி தேவநாத், கௌரி சேஷாத்ரி, ஹரிப்ரியா சுந்தரேஷ், லதா ஸ்ரீநிவாசன், லலிதா குணசேகரன், மணி பெரியாழ்வார், வாணி ராம், நித்யவதி சுந்தரேஷ், ரேணுகா, சுகந்தா ஐயர், சுகி சிவம், ஸ்ரீகாந்த் சாரி, ஷங்கர், உஷா ராஜேஷ், சுகி பரன், சுந்தர், சஃபாரி கிட்ஸ் பள்ளிக் குழுவினர் ஆகியோரின் இயக்கத்தில் ஏராளமான சிறுவர்களும் இளைஞர்களும் குழுவாகவும் தனியாகவும் பரதநாட்டியம், கரகாட்டம், நாட்டுப்புற நடனங்கள், வயலின், மிருதங்கம், வீணை இசை, பிற நடனங்கள், சிறு நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நிகழ்த்தினார்கள். சிறுவர்கள் அளித்த சீதா கல்யாணம் நாட்டிய நாடகமும், கம்பரும் ஒட்டக் கூத்தரும் நாடகமும் பலத்த வரவேற்பைப் பெற்றன.

தவிர, சுருதி அரவிந்தன், விஸ்வா மணிராம், விஷான் ஷங்கர், காயத்ரி, மணிராம், ரெங்கா, வெங்கட், கீர்த்தனா ஸ்ரீகாந்த் ஆகியோர் கர்நாடக மற்றும் திரையிசைப் பாடல்களைப் பாடினார்கள். வரும் மாதங்களில் பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களுக்கும், நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவும், சங்கத்தின் துணையுடன் புதிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் கீழ்க்கண்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொள்ளவும்:

ராகவேந்திரன் - 785.979.5497
திருமுடி - 510.604.9019
வாசுதேவன் - 650.868.0510
மின்னஞ்சல்: batsvolunteers@gmail.com; bharatitamilsangam@yahoo.com

திருமலைராஜன்,
ஃப்ரீமாண்ட், கலி.

© TamilOnline.com