டிசம்பர் 2011: வாசகர் கடிதம்
நவம்பர் இதழில் வெளியான 'பார்வையின் கோணங்கள்' சிறுகதை அருமை. 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்றபடி மிக அழகாக விட்டுக் கொடுத்தும், தட்டிக் கொடுத்தும் செல்வதே வாழ்க்கையில் சுவை கூட்டுவதற்கும், விரிசல் ஏற்படாமல் தடுப்பதற்கும் உதவுகிறது என்பதை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். பாராட்டுக்கள். கதையைப் படிக்கும் அநேக இளம் மனைவிமார்கள், தங்களைத் திருத்திக் கொண்டு வாழ்க்கையை நல்லவிதமாக வாழ முயற்சி செய்வாகள் என நம்புகிறேன். தற்போதைய நாகரீக நகர வாழ்க்கையில் சிறு குடும்பமாக, 'நாம் இருவர்; நமக்கு ஒருவர்' என்றபடி ஒரே குழந்தையுடன் இருப்பதனால், அக்குழந்தைக்குச் சேர்ந்து வாழவும், பகிர்ந்து வாழவும் வாய்ப்பு இல்லாமல் சுயநலமாகச் செயல்படுவதனாலும், பெரியவர்கள் ஆனாலும் அதே மனப்பான்மையுடன் இருப்பதனால், விவாகரத்து, பிரிந்து வாழ்தல், மாமனார், மாமியாருடன் வாழப் பிடிக்காமல் தனிக்குடும்பமாக இருக்க விரும்புதல் போன்ற நிகழ்வுகள் அதிகரிக்கின்றன.

கா. அப்துல்கபூர் அவர்களின் தமிழ்த்தொண்டு பிரமிக்க வைத்தது. அவரது அளப்பரிய தமிழ்ப் பற்றினைப் பற்றி அறியச் செய்த தென்றலுக்கு மிக்க நன்றி. தென்றலின் மற்ற அம்சங்களும் சிறப்பாக உள்ளன. 'சில மாற்றங்கள்' தொடர்கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. அடுத்த இதழ் எப்போது வரும் என ஏங்க வைக்கிறது.

நன்றி நவிலல் நாள் வரும் நவம்பர் மாதத்தில் செம்மையான தமிழ்த் தொண்டாற்றி வரும் தென்றலுக்குத் தமிழ்சார்ந்த இதயங்கள் சார்பாக என் நன்றிகள்.

சுபத்ரா பெருமாள், கூபர்டினோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com