கிருஸ்ணலீலா தரங்கிணியில் சைவ வைணவ இணக்கம்
நாம சங்கீர்த்தனம் என்றவுடனே முதலில் நம் நினைவுக்கு வருபவர் வரகூர் நாராயண தீர்த்தர். கிருஷ்ண பரமாத்மாவிடம் தமக்குள்ள பிரேமையை 'கிருஷ்ணலீலா தரங்கிணி' பாடி உலகறியச் செய்தவர்.

கண்ணனின் அவதார லீலைகளில் மனம் நெகிழ்ந்துபோய், தாம் அனுபவித்து மகிழ்ந்தவற்றை 'கிருஷ்ணலீலா தரங்கிணி' என்ற பெயரில் பாடியிருக்கிறார். கிருஷ்ண விக்ரஹத்தின் முன் ஒரு திரையைப் போட்டு விட்டு நாராயண தீர்த்தர் ஒவ்வொரு பாடலாகப் பாடுவாராம். பாடல் முடிந்ததும் 'அப்படித்தானே?' என்று கேட்பது போல் சிறிது இடைவெளி விட்டு நிறுத்து வாராம். 'ஆமாம்' என்பதுபோல் கிருஷ்ண பகவானின் கால் சலங்கையின் ஒலி கேட்குமாம். எந்தப் பாடலுக்குப்பின் ஒலி கேட்கவில்லையோ, அந்தப் பாடலை பகவான் ஆமோதிக்கவில்லை என்று முடிவு செய்து தரங்க வரிசையில் அதைச் சேர்க்க மாட்டாராம். இப்படியாக இவரது தரங்கத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் பகவானுடைய ஆமோதிப்புடன் பாடப் பெற்றவை என்கிறார் நாராயண தீர்த்தர். இதுவே இந்நூலின் பெருமைக்குச் சான்று.

தவழும் பருவத்துக் கண்ணனின் லீலை களைப் பாடுகின்ற பிரிவில் அதிசயிக்கத்தக்க ஒரு செய்தியைச் சொல்கிறார் நாராயண தீர்த்தர். கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கர் களை ஒருவர் பின் ஒருவராகக் குழந்தைக் கண்ணன் வதம் செய்கின்றான். தன் பிஞ்சுக் காலால் உதைக்க சகடாசுரன் அழிகிறான்; வாயைத் தன் பிஞ்சுக் கைகளால் பிளக்க பகாசுரன் அழிகிறான். பாலோடு சேர்த்து உயிரையும் உறிஞ்ச பூதகி அழிகின்றாள். இவற்றை எல்லாம் பார்க்கின்றாள் யசோதை. அவளுக்குக் குழந்தையின் அதீத ஆற்றல் புரியவில்லை. அழிந்துபட்ட அரக்கர்களால் எந்த ஆபத்தும் ஏற்படாமல் தன் குழந்தை பிழைத்ததே என்று ஆறுதல் அடைகின்றாளாம்.

இது மட்டுமா! அரக்கரை அழித்த தன் குழந்தைக்கு நிறைய திருஷ்டி பட்டிருக்கும் என்று அதற்குத் திருஷ்டி கழிக்கின்றாளாம் யசோதை. எப்படி? சிறிது விபூதியை எடுத்து கண்ணனின் நெற்றியில் இட்டு, சிறிது விபூதியைக் குழந்தையின் நாக்கிலும் தடவி, உச்சந்தலையிலும் தூவுகின்றாளாம். நகர்ப்புற மக்கள் அவ்வளவாக அறிந்திராத ஒன்றாக இருந்தாலும், இன்றும் கிராமப்புற மக்களிடம் இருந்துவரும் ஒரு பழக்கம் இது. விபூதியிட்டு திருஷ்டி கழிக்கும் இவ்வழக்கம் பற்றி வரகூர் நாராயண தீர்த்தருக்குத் தெரிந்திருக்கிறது. எனவேதான், தரங்கத் தில் 'பூதி திலக கரணா-திரை-ப்யாசீர் பிர்வர்தயாமாஸ' (இரண்டாம் தரங்கம் 12வது கத்யம்) என்ற தொடர் இச் செய்தியைக் குறிப்பிடுகிறது. திருமாலின் அவதாரமான கண்ணனுக்குத் திருநீறு பூசும் அதிசயத்தை-சைவ வைணவ இணக்கத்தை-வேறு எந்த பாகவதரோ. மகானோ ஆழ்வாரோ இதுவரை குறிப்பிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமா! சிவன் சந்நிதியில் சொல்லப்படும் 'ருத்ரம்' வரகூர் பெரு மாளின் திருமஞ்சனத்தின் போது சொல்லப்படுவது வரலாறு கண்டிராத அதிசயம். சைவமும் வைணவமும் இணைந்து நடைபழகி வந்திருப்பதுதான் நம்முடைய பெருமைக்குரிய பாரம்பரியம்.

டாக்டர் அலமேலு ரிஷி

© TamilOnline.com