உணவாவின்மையும் பேருண் வேட்கையும் (Anorexia Nervosa and Bulimia Nervosa)
உடல் பருமன் கூடுதலாக இருப்பதன் பின்விளைவுகளைப் பலமுறை அலசியுள்ளோம். இந்த இதழில் உடல் எடை மிகமிகக் குறைவாக இருப்பதன் பின்விளைவுகளையும் உணவு உண்ணும் பழக்கத்தில் ஏற்படும் மன உழற்சி நோய்களையும் அலசலாம். இது குறிப்பாக இரண்டு வகைப் படும். முதல்வகை உணவா வின்மை அல்லது Anorexia Nervosa. மற்றொன்று அதிகமாக உண்டு பின்னால் வாந்தி எடுப்பதன் மூலம் எடை குறைக்கும் வகை (Bulimia Nervosa).

உணவாவின்மை (Anorexia Nervosa)
இது குறிப்பாகப் பதின்ம வயதினரிடம் காணப்படுவது. பெரும்பாலும் 15 முதல் 40 வரை உள்ளவர்களைக் குறிவைப்பது. இந்த நோய் இருப்பவர்கள் இதை ஒரு நோய் என்று உணருவதில்லை. அவர்களின் மனம் அவர்களை அப்படி நினைக்க வைக்கிறது.

காரணங்கள்
உடல், மனம், சமூகம், மரபணு என்று எல்லாமே பங்கு வகிக்கின்றன. இந்த நோய் குறிப்பாக இளம் பெண்களிடம் அதிகம் காணப்படுவது. இன்றைய உலகத்தில் சினிமா மற்றும் பிற ஊடகங்களில் மிகமிக மெலிந்தோர் பிரபலமாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு மன உளைச்சல் அல்லது தன்னம்பிக்கை குறைவாக இருப்பதாலும் இந்த நோய் ஏற்படலாம். குடும்ப வரலாறும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

அறிகுறிகள்
உடல் ரீதியான அறிகுறிகள்மனம் சார்ந்த அறிகுறிகள்
எடை மிகக் குறைவாக இருத்தல்
உடல் மிக மெலிந்து காணப்படுதல்
தூக்கமின்மை
களைப்பு
தலை மயிர் கொட்டுதல்
நகங்கள் உடைதல்
மாதவிடாய் வராமல் இருத்தல்
தோல் சுருங்குதல்
மலச்சிக்கல்
குளிர் தாங்க முடியாமை
பசியின்மை/பசியை மறுத்தல்
உணவு உண்ண மறுத்தல் அல்லது தயங்குதல்.
அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி
மன உளைச்சல்
சமூகத்தில் தனித்து இயங்குதல்
உணவைப்பற்றி அதிகமாக பேசுதல், ஆனால் உண்ண மறுத்தல்


பின்விளைவுகள்
உடல் எடை குறைவாக இருப்பின் அது சில ரசாயன மாற்றங்களை உண்டு பண்ணலாம். இவர்களுக்குத் தலைசுற்றல் அடிக்கடி ஏற்படலாம். இதயம் பாதிக்கப்படலாம். திடுமென்று இதய துடிப்பு தாறுமாறாக ஆகலாம். எலும்பு முறிவு ஏற்படலாம். பாலுணர்வு குறையலாம். சிறுநீரக பாதிப்பும் ஏற்படலாம். மிக முற்றிய போது மரணம் ஏற்படலாம். ஆகவே இது மிகவும் கொடிய நோய் என்பதை உணர்வது அவசியம். இந்த நோய் மனம் சார்ந்த நோயானதால் குடும்பத்தினரின் பங்கு முக்கியம். நோயை சீக்கிரத்தில் அறிந்து கொள்வது தீவிரத்தைக் குறைக்கவும் குணப்படுத்தவும் உதவுகிறது.

குடும்பத்திலோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ சிநேகிதிக்கோ இந்த நோயின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். இவற்றை கண்டறிய உதவும் சில சிவப்புக் கொடிகள் உள்ளன.

சிவப்புக் கொடிகள்
  • அடிக்கடி உணவைத் தவிர்த்தல்
  • அடிக்கடி உடல் எடை பார்த்துக் கொள்ளுதல்
  • கொழுப்பு குறைவான, சத்துள்ள உணவு மட்டுமே உண்ணுதல்
  • உணவைச் சிறு துண்டங்களாக நறுக்கி மெதுவாக அசை போட்டு உண்ணுதல்
  • அடிக்கடி கண்ணாடியில் பார்த்துகொண்டே இருத்தல்.
  • உடல் எடை குறைவாக இருந்தாலும் அதிகம் என்றே சொல்லிக் கொள்ளுதல்
  • மற்றவர் எதிரில் உண்ண தயங்குதல்


இந்த சிவப்புக் கொடிகள் இருந்தால் தக்க சமயத்தில் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். இதைப் பக்குவமாகக் கையாளவேண்டும்.

பேருண் வேட்கை
இது பெண்களுக்கே அதிகம் ஏற்படும். இந்த வகை நோயாளிகள் அளவுக்கு மிக அதிகமாக உண்பர். வயிறு வலிக்கும்வரை உண்டுவிட்டுப் பின்னர் தானாகவே வாந்தி எடுக்கவும், வயிற்றுப் போக்கு ஏற்படவும் முயற்சிப்பர். இவர்கள் எடை சரியாக இருக்கலாம் அல்லது குறைவாகவோ, அதிகமாகவோ இருக்கலாம். இவர்கள் இவ்வாறு அவ்வப்போது செய்வர். இது பெரும்பாலும் மன அமைதி இல்லாதபோது தலையெடுக்கும். இவர்களுக்கு மேலே சொன்ன அறிகுறிகளும் இருக்கலாம். இதைத் தவிர வயிற்றுப் போக்கினால் சில உபாதைகள் ஏற்படலாம். வாய், தொண்டைப் பகுதிகளில் புண் உண்டாகலாம். சிலசமயம் விரலை விட்டு வாந்தி உண்டு பண்ணிய முயற்சியின் தடயம் இருக்கலாம்.

தீர்வு முறைகள்
இந்த நோய்கள் இருப்பதை உணர்வதே பெரிய விடுதலை. அதற்குப் பின்னர் மனோதத்துவ முறையில் தீர்வு காணலாம். அடிக்கடி எடை பார்ப்பதை நிறுத்துவதும், பிடிக்காதபோதும், மூன்று வேளைகள் உணவை சரியான அளவில் உண்ணுவதும், சத்துள்ள உணவை உண்ணுவதும் முக்கியம். நல்ல முன்மாதிரிகளை (Role model) பார்த்து சரி செய்வது நல்லது. குடும்பத்தினரின் உதவி அவசியம். அளவுக்கு மீறிய மன அழுத்தத்தை (Stress) போக்க முயற்சிக்க வேண்டும். தன்னம்பிக்கையும் மனோதைரியமும் வளர்க்க முயற்சிக்க வேண்டும். யோகப்பயிற்சி செய்வது பலனளிக்கலாம். அளவோடு உடற் பயிற்சி செய்ய வேண்டும். நோய் தீவிரமானால் மருத்துவமனையில் சேர்த்து குழாய் மூலம் உணவு செலுத்த வேண்டி வரலாம். இந்த நோய்களை அதிகப்படுத்தும் வலை தளங்களையும், (Pro ana) உடல் எடை குறைக்க உதவும் அவசர யுக்திகளையும் அணுகாமல் இருப்பது நல்லது. நோயைப்பற்றி அறிந்து கொள்ள நல்ல தரமான வலைதளங்களை அணுகுவது நல்லது.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com