காந்தியைக் கொல்
பரபரப்பும், விளம்பரமும் எனக்குத் தேவையில்லை. காந்தியை சுட்டுக் கொன்றது சரிதான் என பலர் இன்னமும் பேசுகின்றனர். எதற்காக காந்தியை சுட்டனர் என்ற உண்மை பலருக்குத் தெரியாது. அதை ஆதாரத்தோடு சொல்வதற்குத்தான் இதை எழுதினேன். கோட்சேயின் வாக்குமூலத்தில் 'காந்தியைக் கொல்' என்று தனக்குக் கட்டளையிடப்பட்டதாக சொல்லியிருக்கிறான். அதையே தலைப்பாக வைத்தேன். உடலளவில் மட்டுமல்லாமல், கொள்கை அளவிலும் காந்தியை சுட்டுக் கொன்ற பிறகு, மக்களுடைய எதிர்வினை எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே இந்தத் தலைப்பு.

துஷார் அருண் காந்தி, 'லெட்ஸ் கில் காந்தி' என்ற புத்தகத்தை எழுதிய காந்தியின் கொள்ளுப்பேரர் பேசியது...

*****


நான் எந்த வாதத்துக்கும் வரவில்லை. சேவாகை அணியில் சேர்த்தது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பும்போது எனக்கு வியப்பாக இருக்கிறது, அவர் பல ஆண்டுகளாக அணிக்காகச் சிறப்பாக ஆடியுள்ளார். பலமுறை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் சேர்த்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ராகுல் திராவிட், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், செய்தியாளர்களிடம்...

*****


தமிழகத்தில் மதுவிலக்குத்துறை தனியாக இருக்கிறது. மதுவிலக்கைச் செயல்படுத்து வதற்கு தனியாகக் காவல்துறை இருக்கிறது. ஆனாலும் மதுவிலக்கு மட்டும் இல்லை. காவல்துறைப் பொறுப்பை என்னிடம் கொடுத்துப் பாருங்கள் என்று சொல்ல மாட்டேன். என்னுடைய கருத்துக்களைக் கேட்டு செயல்படக் காவல்துறைக்கு நீங்களே ஆணையிடுங்கள். 6 மாதகாலத்தில் தமிழகத் தில் ஒரு துளிக் கள்ளச்சாராயம் கூட இல்லை என்கிற நிலைமையை உருவாக்கிக் காட்டிவிட முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அரசு நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

டாக்டர் இராமதாஸ், நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி, பேசியது...

*****


தன்னிடத்தில் பயில வரும் மாணவ, மாணவியரைச் சிறந்த மாணவராக்குவோம் என்ற உறுதிமொழியை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். அரசியல்வாதிகள் பணத்துக்காக நாட்டையே நாசம் செய்து வருகிறார்கள். பணம் ஒன்றே அவர்களுக்குக் குறிக்கோள். மாணவர்களாகிய உங்களுக்குப் பல இன்னல்கள் வரும். அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் பாடுபட வேண்டும்.

நீதியரசர் எஸ். மோகன், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, சென்னையில் உள்ள ஸ்ரீராம் கலை அறிவியல் கல்லூரியின் 9வது ஆண்டு விழாவில்...

*****


நான் இந்துக்களுக்கு எதிரான விஷயத்தைப் படமாக்குகிறேன் என சமயம் சார்ந்த ஒரு விஷமத்தனமான பிரசாரம் நடக்கிறது இங்கே. 'மக்டலீன் சிஸ்டர்ஸ்' என்ற படத்தில் கத்தோலிக்கப் பெண்களுக்கு எதிராக நடக்கிற கொடுமைகளைச் சொல்லி இருப்பர். இஸ்லாத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளைச் சொன்ன படங்களும் உண்டு. மதம், ஜாதி எல்லாவற்றிலும் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அவற்றைச் சொல்ல ஒரு படைப்பாளிக்கு உரிமை இல்லையா?

தீபா மேத்தா, இயக்குனர் பேட்டி ஒன்றில்...

*****


உணவு தானியங்கள் விலையேற்றம் என்கிறார்கள். உணவுப் பொருள்கள் விலையேறினால்தான் விவசாயிகளுக்கு உற்பத்தி விலை கூடுதலாக கிடைக்கும். நாட்டில் 65 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பித்தான் உள்ளனர். 35 சதவீதம் பேர் மற்றவர்கள். இந்த 35 சதவீதம் பேர் நகரத்தில் இருக்கிறார்கள் என்பதால் பாதிக்கப்படும் போது சத்தம் அதிகம் வருகிறது. 65 சதவீதம் இருக்கும் விவசாயிகள் பற்றி அக்கறை வேண்டாமா? விலையேற்றத்தை நான் ஆதரிக்கவில்லை. நமக்கு வருமானம் அதிகம் வரும் போது சில சங்கடம் வரும். அதை வெற்றி கொள்ள வேண்டும்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மத்திய ஜவுளித்துறை அமைச்சர், விழா ஒன்றில்...

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com