அரவிந்த் சுந்தரராஜன் கச்சேரி
செப்டம்பர் 18, 2011 அன்று 'ஸ்வராலயா'வின் சார்பில் அரவிந்த் சுந்தரராஜனின் கர்நாடக இசைக் கச்சேரி லேக் கவுண்டி இந்துக் கோயில் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி கல்யாணி ராகத்தில் 'வனஜாக்ஷி' என்ற பாடலுடன் தொடங்கியது. தியாகராஜரின் 'ஜகதாநந்தகாரகா' என்ற பஞ்சரத்ன கீர்த்தனையில் கச்சேரி களைகட்டத் துவங்கியது. ஊத்துக்காட்டின் காம்போதி ராகப் பாடலும், தீக்ஷிதரின் வராளி ராக 'மாமவ மீனாக்ஷி', புரந்தரதாசரின் 'நாராயண', கோபால கிருஷ்ண பாரதியின் 'திருவடி சரணம்', 'ஆறுமோ ஆவல்' என்ற மாண்டு ராகப் பாடல், பாரதியாரின் 'பாயும் ஒளி நீ எனக்கு', ஸ்வாதித் திருநாளின் 'பஜதமுரளி' ஆகியவை சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போல இருந்தன. ராகஸ்ரீயில் அமைந்த லால்குடியின் தில்லானாவுடன் கச்சேரி நிறைவுற்றது. அரவிந்தின் திறமையைக் கண்டு குரு சுகுணா வரதாச்சாரி பெருமை அடையலாம். வெங்கடேஷின் வயலினும், ரவி சுப்ரமணியனின் மிருதங்கமும் வெகு சிறப்பான பக்கபலம். பேராசிரியர்கள் Chaks சீனிவாசனும் ராஜாவும் கலைஞர்களைப் பாராட்டிப் பேசி விழாவை நிறைவு செய்தனர்.

ஜூலியட் ரகு,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com