பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் பாலம் மாநாடு
தீப்பொறி' ஆறுமுகத்துக்கும், பெர்க்கலி பல்கலைக் கழகத்துக்கும் என்ன சம்பந்தம்? குழப்பிக்கொள்ள வேண்டாம். இதோ விளக்கம். 2007 ஏப்ரல் 21, 22 தேதிகளில் பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பீடம் 'பாலம்' என்ற தலைப்பில் நடத்தப் போகும் மாநாட்டில் யேல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பெர்னார்ட் பேட் தற்காலத் தமிழ் மேடைச் சொற்பொழிவு களைப் பற்றிக்கட்டுரை சமர்ப்பிக்க இருக்கிறார். தற்கால அரசியல் மேடைப் பேச்சு மென்மையான தமிழை எப்படி உடைத்திருக்கிறது என்று ஆராய்ந்து, அதற்கு உதாரணமாகத் தீப்பொறி ஆறுமுகம் 1995-ல் மதுரையில் பேசிய சொற்பொழிவை எடுத்துக்காட்டாகக் காண்பிக்க இருக்கிறார்.

'சரித்திரம், இலக்கியம், மற்றும் அரசியல் தமிழுக்கும் மற்ற தென்னிந்திய மொழிகளுக் கும் எப்படி பாலமாக அமைகிறது என்று நோக்குவதுதான் இந்த மாநாட்டின் முக்கியக் குறிக்கோள்' என்று கூறுகிறார் பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் கௌசல்யா ஹார்ட். 'பழமைக்கும் புதுமைக்கும் உள்ள பாலத்தையும் சிலர் ஆய்வுக் கட்டுரையாகச் சமர்ப்பிக்க இருக்கிறார்கள்' என்கிறார்.

பெர்க்கலி பல்கலைக்கழகத்தின் தெற் காசியத் துறையின் ஒரு பகுதியான தமிழ்ப் பீடம் ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாநாடு நடத்தி வருகிறது. 2005-ல் 'கோவில்', 2006-ல் 'சோணாடு' என்ற தலைப்புகளில் மாநாடு நடந்தது. 'தமிழின் பழமை, பெருமை, இலக்கியம், கலாசாரம் பற்றிய உணர்வுகளை மேற்கத்திய சமூகத்துக்கும், அமெரிக்காவில் வளரும் தமிழர்களுக்கும், இளைஞர்களுக்கும் இடையே பரப்புவது இந்த மாநாடுகளின் குறிக்கோள்' என்று குறிப்பிடுகிறார் கௌசல்யா ஹார்ட். அமெரிக்காவில் உள்ள மற்ற பல்கலைக் கழகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் இருந்தும் பேராசிரியர்கள் இந்த மாநாடுகளில் கலந்து கொள்கிறார்கள். இந்த வருடம் யேல், மிச்சிகன், ·ப்ளோரிடா, சிகாகோ போன்ற பல்கலைக் கழகங்களில் இருந்து பேராசிரியர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க உள்ளனர். 'ஐங்குறுநூறு', 'தில்லானா மோகனாம்பாள் நாவலில் சதிரும் நாதஸ்வரமும்', 'ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் ஆமுக்தமால்யதாவும் தமிழ் பக்தியும்', 'அரையர் சேவை வழி முறைகள்', 'கம்போடிய நடனத்தில் ஹனு மானும், மணிமேகலையும்' என்று பல கோணங்களில் சுவையான ஆராய்ச்சிக் கட்டுரைகள் வழங்க இருக்கிறார்கள்.

நிகழ்ச்சி: 'பாலம்' மாநாடு
நாள்: ஏப்ரல் 21 & 22, 2007
இடம்: கலிபோர்னியா பெர்க்கலி பல்கலைக் கழகம்
மேலும் விவரங்கள் அறிய:http://tamil.berkeley.edu

சிவக்குமார் சேஷப்பன்

© TamilOnline.com