கொலு ஹாப்பிங்!
விரிகுடாவாழ் இந்தியர்களுக்கு செப்டம்பரில் இருந்தே திருவிழாக் காலம்தான். நவராத்திரியை எதிர்நோக்கி செப்டம்பரிலேயே கிறிஸ்துமஸ் கேரலை தத்து எடுத்து
"Its the Season to be JOLLY Fa La lala la lala lala.....
Deck the halls with Dolls of holy Fa-la-la-la-la, la-la-la-la."
என்று மாற்றிப் பாட துவங்கி விடுவர். அப்போதிலிருந்து தீபாவளி, ஹாலோவீன், தேங்க்ஸ்கிவிங் என்று புத்தாண்டுவரை குதூகலம்தான்.

ஆகஸ்ட் கடைசி வாரம் முதலே நண்பர்களுக்கிடையே நவராத்திரி மின்னஞ்சல் வரவேற்பிதழ் பரிமாற்றம் துவங்கி, செப்டம்பர் தொடக்கத்திலேயே Inbox நிரம்பி வழிந்தது. பல வீடுகளுக்குப் போகவேண்டும் என்பதால் பலர் எக்செல், கூகிள் டாக்ஸ் போன்றவற்றை உபயோகித்து கச்சிதமாக தங்கள் 'golu hopping' திட்டத்தை வகுத்துக் கொண்டனர்.

செப்டம்பர் 27 அன்று கொலுப்படிகளைப் பட்டுச் சேலைகளும், வேட்டிகளாலும் அலங்கரித்தன. பலவிதமான கொலுக்கள். விதவிதமான கற்பனை. டெக்ஸாஸ் முதல் ஐரோப்பா வரையிலான பல நகரங்கள் கொலு வழியாக பே ஏரியாவுக்கு மாற்றலாகி இருந்தன. மெரினா கடற்கரை, நல்லி சில்க்ஸ், கேரளாவின் கல்யாண் ஜுவெலர்ஸ், சங்கீத நாட்டிய விழாக்கள், உலகக் கோப்பை கிரிக்கெட், விவசாயப் பண்ணை, ஹாரி பாட்டர் காட்சிகள் எல்லாம் கொலு வீற்றிருந்தன. ஜெயஸ்ரீ மணிராம் (கூபெர்டினோ) படிகளைத் தொங்கவிட்டு ‘ஊஞ்சல் கொலு’ வைத்ததும், மற்றொரு வீட்டில் தேர் வடிவத்தில் சக்கரங்களுடன் அமைத்ததும் சூப்பர்.

பாரம்பரியச் சேலை, பட்டுச்சேலை, டிஸைனர் சேலை எனப் பெண்கள் சேலை கலெக்‌ஷனை அணிந்து வலம்வர மிக வசதியான விழா இது. ஆண்களும் குர்த்தாக்களிலும் பிற ஃபேஷன் ஆடைகளிலும் ஒளிர முடிந்தது. பேங்க் லாக்கரில் ஓய்வெடுத்த நகைகள் விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் சற்று அதிகமாகவே பிரகாசித்தன. ஆடை அலங்காரத்தில் தனிக்கவனம் செலுத்திய பலரில் சரடோகா பிரியா ராம், சான்டா கிளாரா ஜனனி பழனி, சான்ஹொசே அனிதா அரவிந்த் ஆகியோரைச் சொல்லலாம்.

சிறுமிகள் சளைத்தவர்களா என்ன! இரட்டைப் பின்னல், சாட்டைப் பின்னல்-குஞ்சலம், வண்ணப் பாவாடை, சிறு பொட்டு, பொருத்தமான கைவளை, தோடு, சங்கிலி, கொலுசு என்று பட்டாம் பூச்சிக் கூட்டமாகப் பறந்தனர். சிறுவர்கள் என்ன பாரம்பரிய உடை அணிந்தாலும் கையில் ஒரு கார் பொம்மையை வைத்துக் கொள்ளத் தவறவில்லை.

மழை, வெயில், போக்குவரத்துக்கு நெரிசல் இவை எதுவுமே கொண்டாட்டத்துக்குத் தடையாக இருக்கவில்லை. இந்தியாவில் இருந்து வந்த பெற்றோர் மற்றப் பெற்றோரைச் சந்தித்து பரஸ்பர நண்பர், உறவினர் யார் என்ற ஆராய்ச்சியில் மூழ்கினர். கோலாகலம் முழுதும் facebookல் படங்களாகப் பரிமாற்றம் செய்யப்பட்டன. முதல் நாளிலேயே சான்ஹோசேவைச் சேர்ந்த ஸ்வப்னா பாலன் "Lets catch up during golu hopping. Ready, steady, Start make up" என்று எழுதித் தொடங்கி வைத்தார். பலர் காதுக்கினிய பாடல்களைப் பாடினர். சான் ஹோசேயைச் சேர்ந்த ரூபா சுரேஷ் ‘தேவி நீயே துணை' என்று பாட அவரது நான்கரை வயது மகள் வாசவி சுரேஷ் அதற்கேற்ப நடனம் ஆடினாள். வாய்ப்பாட்டு, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், லலிதா சகஸ்ரநாம பாராயணம் எல்லாம் ஆங்காங்கே நடைபெற்றன.

விழா என்றால் விதவிதமான தின்பண்டம் இல்லாமலா! பாரம்பரிய நிலக்கடலை, பட்டாணி, பீன்ஸ், காராமணி இவற்றோடு எடமாமே, லீமா பீன்ஸ், பின்டோ பீன்ஸ் ஆகியவற்றில் மாங்காய், ஹலபினோ சேர்த்து புதுவிதச் சுண்டல்களை பரிமாறி அசத்தினர். மில்பிடாஸ் ராதிகா ரங்கராஜன் வழங்கிய புளியோதரைக்கு "இன்னும் கொஞ்சம்" சொல்லாதவர்களே இல்லை. அதேபோல கூபெர்டினோவில் ஹேமா வெங்கட்டின் வெண்மையான, மென்மையான இட்லிகளும் யம்மி!

நவராத்திரி கொண்டாட்டம் ஒரு சிறு கண்ணோட்டம்



ஜனனி நாராயணன்
படம்: ஆனந்தி சுப்பையா,
மிச்சிகன்

© TamilOnline.com