திருத்தணி முருகன் ஆலயம்
முருகனுக்குரிய ஆறு படைவீடுகளில் திருத்தணியும் ஒன்று. இது சென்னை-காட்பாடி ரயில் பாதையில் அமைந்துள்ளது. சூரபத்மனை அழித்த முருகன், தன் சினம் தணிந்து அமர்ந்த தலம் ஆதலால் 'தணிகை மலை' என அழைக்கப்பெற்றது. இதற்கு நீலோற்பலகிரி, காவிமலை, கல்லாரகிரி, செங்கல்வகிரி, இந்திரநகரி, கந்தகிரி, நாரதப்ரியம் எனப் பல பெயர்களுண்டு. சூரனது செல்வத்தை மீட்டுத் தன்னிடம் இருக்கச் செய்தலால் ஸ்ரீ பூரணகிரி என்ற பெயரும் உண்டு. சிவபெருமான் முருகப் பெருமானைத் தனக்கு மூலமாகக் கொண்டதால் மூலாத்ரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் திருப்புகழிலும், கந்தரலங்காரத்திலும் 'அழகு திருத்தணி மலை', 'ஓரணி செருத்தணி' என்றும் பாடியுள்ளார். தணிகை புராணத்தில் கச்சியப்ப முனிவரும் திருவருட்பாவில் வள்ளலாரும் முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

மலைமீது கிழக்குப் பார்த்த சன்னதியில் முருகன் அருள் பாலிக்கிறார். வடக்குப் பகுதி மலை 'பச்சரிசி மலை' என்றும் தெற்குப் பகுதி மலை பிண்ணாக்கு மலை என்றும் வழங்கப்படுகிறது. மலையடிவாரத்தில் சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. இதனைச் சுற்றிப் பல மடங்கள் அமைந்துள்ளன. திருத்தணிகை முருகனை உளமாரத் தொழுபவர்களுக்கு தீவினைகள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை. ஐந்து நாட்கள் இத்தலத்தில் தங்கி என்னை வழிபடுவோர் நினைத்த போகங்கள் நிரம்பப் பெற்று வீடுபேறடைவர் என்று முருகப் பெருமான் வள்ளி அம்மைக்குக் கூறியதாக கந்தபுராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்குப் பிரகாரத்தில் துவஜஸ்தம்ப விநாயகரையும் ஐராவத்தையும் தரிசித்த பின்னரே உள்ளே முருகப் பெருமானை தரிசிக்க வேண்டும். இரண்டாம் பிராகாரத்தில் இருந்து உட்பிராகாரத்தை அடைய ஐந்து படிகள் உள்ளன. இவை பஞ்சாட்சரப் படிகள் என அழைக்கப்படுகின்றன. முருகப் பெருமானின் இருபுறமும் வள்ளி, தெய்வானை காட்சி தருகின்றனர். சுவாமியின் மார்பில் பள்ளம் ஒன்று உள்ளது. தாரகாசுரனால் விடப்பட்ட சக்கரம், சுவாமியின் திருமார்பில் பதக்கமாகப் பதிந்ததாம். அதைப் பெற விரும்பித் திருமால் தணிகை வேலனை பூஜித்தாராம். அவரது விருப்பத்தை நிறைவேற்ற முருகன் தன் மார்பில் இருந்து பதக்கத்தை எடுத்துக் கொடுத்தாராம். பதக்கம் பதித்த இடத்தில் அடையாளமாக மார்பில் குழி போன்ற பள்ளம் ஏற்பட்டதாகத் தணிகை புராணம் கூறுகிறது. 'தணிகை மலையைச் சாரேனோ, சாமியழகைப் பாரேனோ' என்பதிலிருந்து தணிகை நாதனின் திருவழகை உணரமுடிகிறது.

குமரக்கடவுள் தனது தந்தையை பூஜிக்க விரும்பி விநாயகரை ஸ்தாபித்து பின்னர் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து எம்பெருமானிடமிருந்து ஞானசக்தியைப் பெற்றார். அவர் பூஜித்த சிவபெருமான் 'குமாரேசுரர்' என்னும் திருநாமம் பெற்றார். முருகனுக்குச் செய்யும் அர்ச்சனைகளில் 'ஓம் ஞானசக்திதராய நம' என்ற நாமம் தினமும் சொல்லப்படுகிறது. இந்திரனது ஐராவதம், தெய்வயானைக்கு சீதனமாக கொடுத்ததால் இந்திரனுக்கு செல்வம் குறைந்தது. இந்திரன் முருகனைச் செங்கழுநீர்ப் பூவால் அர்ச்சித்து ஐராவதத்தைத் திரும்பப் பெற விழைந்தான். மீண்டும் சீதனமாகக் கொடுத்ததை திருப்பிக் கேட்பது முறையல்ல என்பதை உணர்ந்து சன்னிதியில் இருந்து கிழக்கே உள்ள இந்திரலோகத்தை யானை நோக்கினால் செல்வம் அழியாது என்று வேண்டிக் கொண்டதன் பேரில் தணிகை வேலன் யானை மீதமர்ந்து உலாவரும் நிலையில் யானை காட்சி தருகின்றது.

காதர்
என்ற நவாப் தனது துன்பத்தை நிவர்த்தி செய்ததால் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து தினமும் வாத்திய இசை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. மலையின் வடகிழக்கு மூலையில் வாத்திய மண்டபம் உள்ளது. தினமும் பூஜை காலத்தில் முகம்மதியர்கள் வாத்தியம் இசைப்பது குறிப்பிடத்தக்கது. 'பிரசன்ன காதரீசுரர்' எனும் திருநாமத்தைக் கொண்டு சிவபெருமான் காட்சி தருகிறார்.

சுவாமிக்குச் சாற்றப்படும் அபிஷேக சந்தனம் அரைப்பதற்கு அற்புதமான சந்தனக்கல் உள்ளது. இதுவும் தெய்வயானைக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டதாம். 'ஸ்ரீபாத ரேணு' என்னும் பிரசாதமாக அளிக்கப்படும் அபிஷேகச் சந்தனத்தை தினமும் மிளகு அளவு உட்கொண்டால் சகல வியாதிகளும் தீர்கின்றனவாம். அருணகிரிநாதர் இத்தலத்து முருகனைப் பற்றி 'இருமலுரோக முயலகன் வாதம்' எனத் தொடங்கும் திருப்புகழில் “நோய்கள் யாவும் பிறவிகள் தோறும் எனை நலியாதபடி உனது தாள்கள் அருள்வாயே” எனப்பாடி உள்ளார்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்திருத்தலம் பிரசித்தி பெற்றுள்ளது. மலைக்குச் செல்ல ஏறக்குறைய 365 படிகள் உள்ளன. பாதி மலை ஏறியதும் பிரம்ம லிங்க தரிசனம் பெறலாம். தற்போது மலை மீது கார், பஸ் செல்ல வசதி உள்ளது. ஜனவரி முதல் தேதி, தைப்பூசம், ஆடிக் கிருத்திகை போன்ற விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசிக்கின்றனர். முருகனைத் தொழுவோம். முன்வினைகள் களைவோம்.

சீதா துரைராஜ்

© TamilOnline.com