மூப்பும் மறதியும்
நடந்ததைப் புரிந்து கொள்வதும் அதை நினைவில் வைத்துக் கொள்வதும் நம்மையறியாமலே நாம் எப்போதும் செய்பவைதாம். ஆனால் வயதாக ஆக, இது நிகழ்வதில்லை. தற்காலத்தில் இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. மனிதரின் வாழ்நாள் அதிகரித்துக் கொண்டே போகும்போது, முதிய வயதில் காணப்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாகிறது. மனக்குறுக்கம் (Dementia) என்று சொல்லப்படும் இந்த நோயின் அறிகுறிகளையும், காரணங்களையும், விளைவுகளையும் பற்றி அறிந்து கொள்வோமா?

முக்கிய அறிகுறிகள்:
  • ஞாபக மறதி
  • புதிய செயல்பாடுகளை கிரகிக்கும் தன்மை குறைதல்
  • மற்றவருடன் பழகும் திறன் பாதிக்கப்படுதல்
  • ஒரு நாளின் நிகழ்ச்சிகளைத் திறம்படச் செய்யும் முறை குறைதல்
  • கை வேலைப்பாடு பாதிக்கப்படுதல்
  • தனித்தன்மை பாதிக்கப்படுதல்
  • நிகழ்வுகளை ஆராயும் தன்மை குறைதல்
  • சமூகக் கோட்பாடுகளை மீறுதல்
  • பரபரப்பு அதிகமாதல்
  • இல்லாத காட்சிகளைக் காணுதல்
  • அளவுக்கு மீறிச் சந்தேகப்படுதல்


இந்த அறிகுறிகள் அளவுக்கு அதிகமாகக் காணப்பட்டால் மருத்துவரை நாட வேண்டும்.

காரணங்கள்

அல்சைமர் நோய்
இது 55 வயதுக்கு மேற்பட்டோரைத் தாக்கலாம். அவர்களின் செயல் திறமை குறையத் தொடங்கும். ஆரம்ப வருடங்களில் நோயாளியின் வாழ்க்கை முறை முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இது குறிப்பாக மூளையின் ஒரு பாகத்தை பாதிப்பதால் சிந்திக்கும் திறனும் நினைவாற்றலும் குறைகின்றன. நரம்புகளில் புரதங்கள் உரு மாறுவதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதற்கான சாத்தியக்கூறு மரபணுக்களில் இருப்பதால் குடும்ப வரலாறு முக்கியமாகிறது.

இதைத் தவிர Lewi body dementia என்ற வகை மிக வேகமாக தாக்க வல்லது. இந்த நோயாளிகள் ஒன்றிரண்டு வருடங்களிலேயே நோயின் முற்றிய நிலை அடைவர். மேலும் அதிக ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு ரத்த நாளங்கள் அடைபட்டு அதன் மூலம் நினைவு தப்புதல் வாய்ப்பு அதிகம். இதை Vascular dementia என்று அழைப்பர். குறிப்பாகப் பக்கவாதம் (Stroke) ஏற்பட்டால் அதன் பின்விளைவாக இந்த வியாதி ஏற்படலாம்.

தற்காலிக நிலை
ஒரு சில சமயங்களில் மனநிலையும் நினைவும் தற்காலிகமாக பாதிக்கப்படலாம். கடுங்காய்ச்சல், சில மருந்துகள், புதிய சூழ்நிலை, ரத்தத்தில் இருக்கும் சில ரசாயனங்களின் அளவு குறைவதாலும், சத்துள்ள உணவு சாப்பிடாமல் வைடமின் அளவு குறைந்தாலும் ஏற்படலாம். இந்தவகைக் காரணங்களைச் சரி செய்தவுடன் குணமாவது சாத்தியம்.

தடுப்பு முறையும் தீர்வும்
வயதாவதையும் மரபணுக்களையும் நம்மால் மாற்ற முடியாது. ஆனால் மற்ற சில காரணிகளைக் தவிர்க்கலாம். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்தல், சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்தல், கொழுப்புச் சத்தை அளவோடு வைத்தல், நல்ல சத்துள்ள உணவு உண்ணுதல், குறிப்பாக வைட்டமின் B1 மற்றும் வைட்டமின் B6 உடலில் சரியாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுதல், புகை பிடித்தல் மற்றும் அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்தை நிறுத்துதல் முதலியவை தடுப்பு முறைகளாக விளங்குகின்றன.

தவிர, உடலையும் மனத்தையும் சுறுசுறுப்பாக வைப்பதன் மூலம் மூளை சுறுசுறுப்பாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளலாம். வயதான பின்னரும் புதிய மொழி கற்றுக் கொள்வது, எழுதுவது, வரைவது, படிப்பது, வாத்தியம் வாசிப்பது போன்றவை நல்லது. தினமும் நடத்தல், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் மிக நல்லது.

மருந்துகள்
அல்சைமர் வியாதிக்குச் சில மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை நோய் முற்றுவதற்கு முன்னரே எடுத்துக் கொண்டால் நல்லது. இது அரிசெப்ட் (Aricept) என்றும், நேமண்டா (Nemanda) என்றும் அழைக்கப்படும். இந்த மருந்துகள் மட்டும் முற்றிலும் குணம் தருவதில்லை. இவர்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவுதல் ஒரு சவால். பல சமயங்களில் இவர்களால் தனியாகக் காலம் தள்ள முடிவதில்லை. பாதுகாப்பு ஒரு மிகப்பெரிய பிரச்னை. இவர்கள் குறிப்பாக இரவு வேளைகளில் தனியாக இருக்க அஞ்சுவதுண்டு. இருட்டு இவர்களைக் குழப்பும். எப்போது ஒரு சிறிய விளக்கு ஏற்றியிருப்பது உதவலாம். இவர்களின் தேவைகள் மாறும் என்பதை உணர்ந்து அதற்குத் தயார்படுத்திக் கொள்வது குடும்பத்தினருக்கு ஒரு சவாலாக இருக்கலாம்.

டாக்டர் வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com