பேராசிரியர் நினைவுகள்: காளை எருதர்; காட்டில் உயர் வீரர்
நாம் குயில் பாட்டில் பார்க்கும் இளைஞன்--பாரதியைப் போன்ற செழுமையான, முழுமையான கவிஞன். இத்தொடரில் முன்னரே விவாதிக்கப்பட்ட வகையைச் சேர்ந்தவன். ஆன்ம அனுபவம், உணர்வுகள், அறிவு ஆகிய மூன்று புலனங்களும் சம அளவில் இயங்கப் பெறும் வரம் பெற்ற அரிய கவிஞர்கள் இவர்கள்.

ஆனால், கவிஞர் கூட்டத்துள் எப்போதுமே (நாம் முன்பே குறிப்பிட்டதுபோல) மூன்று பிரிவினர் இயங்கி வந்திருக்கின்றனர்; இயங்கிக் கொண்டிருக்கின்றனர்; இயங்குவர். இவர்களில் இரண்டாம், மூன்றாம் பிரிவினரும் கவிதையின் பேரில் பெருங்காதல் கொண்டவர்கள்தாம். இவர்களுடைய படைப்புகளில் உள்ள கவிமோகம் உண்மையானதுதான். இதில் ஐயத்துக்கிடமில்லை. ஆனால், இவர்கள் கவிதையை அணுகும் விதத்தால் மாறுபடுகிறார்கள். இரண்டாம் பிரிவினருக்கு மரபும் வடிவமும் மட்டுமே இலக்கு. அந்தாதி பார்த்து ஒரு அந்தாதியும்; கோவை பார்த்து ஒரு கோவையும், கலம்பகம் பார்த்து ஒரு கலம்பகமும் செய்யும் பிரிவினர். இன்றைக்கு ஓர் அந்தாதியைப் படிக்க நேர்ந்தால், 'இதைப் போலவே நாமும் செய்யவேண்டும்' என்று உத்வேகம் பெற்று, படித்தது சரஸ்வதி அந்தாதி என்றால் படைத்தது சண்முகன் அந்தாதியாக வடிவம் பெறும். அங்கே சொல்லப்பட்டுள்ள ஒவ்வொன்றும் இங்கே கவனமாகப் பிரதிபலிக்கப்படும்; படியெடுக்கப்படும்; இலக்கண வரைமுறைகள் சரியான வகையில் அமைந்திருக்கின்றனவா, சொல்லாட்சி சரியாக இருக்கிறதா, இந்தச் சொல்லின் இந்த வடிவத்தை, இதற்கு முற்பட்ட கவிஞர்கள் பயன்படுத்தியிருக்கிறார்களா, இந்த இடத்தில் விளாச்சீர் வருமா வராதா என்பன போன்ற பெருங்கவலைகளால் பீடிக்கப்பட்டிருப்பார்கள். செய்திறன், நேர்த்தி என்ற அம்சங்கள் மட்டுமே இவர்களுடைய கவனத்தில் முதலிடம் பெறுவதால், இவர்களுடைய படைப்புகள் வடிவத்திலும் இலக்கண அமைப்பிலும், சொல்லும் விதத்திலும் கச்சிதமாக அமையும். ஆனால்,

கண் மறைவாக எங்கோ
கதிரவன் தேர்க்கால் சிக்கி
உருள்கிற சப்தம் கேட்டுத்
தவளைகள் போலி செய்யும்

என்று கவிஞர் ஞானக்கூத்தன் சொல்வது போல, இவர்கள் போலிதான் செய்கிறார்கள். போலச் செய்வது போலி. இந்த இடத்தில், கவிதையின் அடிநாதமான சுயானுபவத்தைக் காண்பது வெகு அரிது. சொல்லால் செதுக்கப்பட்ட சட்டகத்தை இவர்கள் செய்நேர்த்தியால் திறம்படச் செய்துவிடுவார்கள். உயிர்த் தொடர்பு என்ற அடிநாதத்தை இந்த வகையினரின் படைப்புகளில் பார்ப்பது ஏறத்தாழ இயலாத ஒன்று என்றே சொல்லிவிடலாம். நடந்த வழித்தடத்தில் திரும்பத் திரும்ப, சலிக்காமலும் சளைக்காமலும் சுற்றிவரும் செக்குமாட்டு இனம். இவர்களைத்தான் குயில் பாட்டில் இடம்பெறும் மாடு அடையாளப்படுத்துகிறது. மாடு, வேடர் தலைவன் முருகன் மகளான சின்னக் குயிலிக்கு முறைமாமன். பிறப்புவழி மண உரிமை படைத்தவன். நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் இரண்டாவது வகையினரோ, யாப்பிலக்கணத்தைச் செம்மையாகக் கற்று, சற்றும் பிசிறில்லாமல் வெண்பா, கட்டளைக் கலித்துறை, வண்ண விருத்தம் என்று வகைவகையாகப் பார்த்துப் பார்த்துப் போலி செய்யும் வித்தை படித்ததனால், (கவிதை எனப்படும்) குயிலை மணப்பது இவர்களது பிறப்புரிமை. இவர்கள் சொல்வதுதான் கவிதையில் கடைசிச் சொல். இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற தீர்மானம் இவர்கள் படித்த இலக்கணப் புத்தகங்களில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. 'உன் இயல்பின்படி நீ இயங்கு' என்பதைக் காட்டிலும் 'நான் கற்ற புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளின்படிதான் நீ இயங்கவேண்டும்' என்று 'சின்னக் குயிலி'யை திட்டம் செய்து, வழிநடத்தும் மூக்கணாங்கயிற்றை மாட்டிக் கொண்டவர்கள்.

மாட்டைப் பற்றி, குயில் வர்ணித்துப் பாடும் ஒவ்வொரு அம்சத்தையும் இந்த வகையைச் சேர்ந்த கவிக்கோமான்களிடம் காணலாம். மாடு பெரும்பாரத்தைச் சுமக்கும். இவர்கள், செய்வதை நிதானமாகவும் நீளமாகவும், விஸ்தாரமாகவும் செய்யும் திறனுடையவர்கள். நான்கு கால்களையும் பூமியில் அழுந்த ஊன்றிக்கொண்டு மாடு நிற்கும். இவர்கள் தம் கால்களை மரபிலே ஊன்றி நிற்பார்கள். மாடு, எப்போதும் குனிந்தபடி, நிலத்தையே பார்த்தபடி செல்லும்; ஒரு நாளும் ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தறியாது. சுவை என்ற உணர்வில் பேதபுத்தியே கிடையாது மாட்டுக்கு! பருத்திக் கொட்டையும் புண்ணாக்கும் கலந்து தொட்டியை நிறைத்தாலும், பாதாங்கீராலேயே தொட்டியை நிறைத்தாலும், சுவையளவில் அதன் 'சம-திருஷ்டி'(!) ஒருநாளும் மாறிவிடாது. ஒன்றேபோல் ஒரே உறிஞ்சாக உறிஞ்சித் தீர்த்துவிடும். மாட்டைப் பற்றிக் குயில் பாடுவதாக வரும் இடம் முழுமையுமே வார்த்தைக்கு வார்த்தை பொருந்தும் என்றாலும், குறிப்பாகச் சில அடிகளை இங்கே சொல்ல விரும்புகிறேன்:

மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும்
கூனர்தமை யூர்களிலே கொண்டு விடுவதற்கும்
தெய்வமென நீருதவி செய்தபின்னர் மேனிவிடாய்
எய்தி யிருக்கு மிடையினிலே பாவியேன்
வந்துமது காதிலே மதுரவிசை பாடுவேன்.
வந்து முதுகில் ஒதுங்கிப் படுத்திருப்பேன்.
வாலிலடி பட்டு மனமகிழ்வேன். மாவென்றே
ஓலிடுநும் பேரொலியோ டொன்றுபடக் கத்துவேன்.
மேனியிலே யுண்ணிகளை மேவாது கொன்றிடுவேன்.
கானிடையே சுற்றிக் கழனியெலா மேய்ந்துநீர்
மிக்கவுண வுண்டுவாய் மென்றசைதான் போடுகையில்
பக்கத் திருந்து பலகதைகள் சொல்லிடுவேன்.

இந்தச் 'செக்குமாட்டு' திருக்கூட்டத்தார், மனித சமுதாயத்துக்காக ஓயாது எழுதித் தள்ளுவதாக ஒரு கற்பனை செய்து கொள்கிறார்களல்லவா, அது 'மானுடராம் பேய்கள் வயிற்றுக்குச் சோறிடவும்.... ஊர்களில் கொண்டு விடுவதற்கும்' மாடு படும் பாடாக வெளிப்படுகிறது. இப்படி உலக உஜ்ஜீவனத்துக்காக இவர்கள் எழுதிக் களைத்த நேரங்களில், கவிதையாகிய சின்னக் குயிலி தங்கள் காதுகளில் வந்து மதுரவிசை பாடவேண்டும்; இவர்கள் முதுகில் ஒதுங்கிப் படுத்திருக்க வேண்டும். இவர்களுடைய 'வாலில் அடிபட்டாலும்' குயிலி மனம் மகிழ்ந்தே ஆகவேண்டும்! கிண்டலைப் பாருங்கள்! கான் இடையே சுற்றிக் கழனியெலா மேய்ந்து நீர், மிக்க உணவுண்டு, வாய் மென்று அசைதான் போடுகையில் (மற்றவர்களுடைய படைப்புகளுக்குள் சுற்றிச் சுழன்று, அவசர அவசரமான மேய்ந்து முடித்தபின், ஆரஅமர இவர்கள் அசைபோட்டுக் கொண்டிருக்கும்போது), பக்கத்தில் இருந்து பலகதைகள் சொல்வது இவர்களுடைய பிறவி மணவுரிமைக்கு ஆளான குயிலி செய்யவேண்டிய கடமைகள்.

விரிக்க விரிக்க மாட்டின் கதை விரியும். இந்தவகைக் கவிஞர் குழாம் இந்தக் குறியீட்டில் கச்சிதமாய்ப் பொருந்திவரும். கவனிக்க வேண்டும். இவர்களுடைய அணுகுமுறைப் பிழையைத்தான் கவி சுட்டுகிறானே ஒழிய, இவர்களுடைய காதலையோ, ஆர்வத்தையோ, மோகத்தையோ சற்றும் குறைத்து மதிப்பிடவில்லை. கவிதா தேவியை அன்றாடம் பக்தியோடு அணுகி, பூஜை புனஸ்காரங்கள் செய்து, கடுமையான பயிற்ச்சிகளை மேற்கொண்டு இவர்கள் காட்டும் நேசத்தில் எள்முனையும் பொய்யில்லை. மாட்டைப் பற்றி முனிவர் சொல்லும் பகுதியில், அறிமுகமாகச் சொல்வதைப் பாருங்கள்:

மாமன் மகனொருவன், மாடனெனும் பேர்கொண்டான்
காமன் கணைக்கிரையாய் நின்னழகைக் கண்டுருகி
நின்னை மணக்க நெடுநாள் விரும்பியவன்
பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு
நித்தங் கொடுத்து நினைவெல்லா நீயாகச்
சித்தம் வருந்துகையில், தேமொழியே நீயவனை
மாலையிட வாக்களித்தாய்; மையலினா லில்லையவன்
சால வருந்துதல் சகிக்காமற் சொல்லிவிட்டாய்

உள்ளம் நெக்குருகி நிற்கிறான்; காதல் பரவசத்தில் பித்தேறிப் பிதற்றுகிறான். 'அடேயப்பா! உனக்கு இது வராதுப்பா... வேண்டாம். இது வெறும் பயிற்சியினால் வருகின்ற விஷயமில்லை. பயிற்சி மிகமிக அவசியந்தான் என்றாலும் அதற்கும் அப்பாற்பட்ட இன்னொரு அம்சம் இருக்கிறது. அது உன்னிடத்தில் இல்லையே! அதையல்லவா நீ அடைய முயலவேண்டும்! பயிற்சி ஒன்றே முழு முயற்சியும் என்றல்லவா முடிவெடுத்துவிட்டு என்னிடத்தில் வந்து நிற்கிறாய்!'என்றெல்லாம் கவிதாதேவி இவர்களைப் பார்த்து உள்ளத்துக்குள் நொந்துகொண்டாலும், இவர்களுடைய காதலை மதிக்கத்தான் செய்கிறாள். 'மையலினால் இல்லை. அவன் சால வருந்துதல் சகிக்காமல் சொல்லிவிட்டாய்' என்றும் 'காதலினால் இல்லை, கருணையினால் இஃதுரைத்தாய்' என்றும் குயில், மாட்டுக்கு வசமாகச் சம்மதித்த வர்ணனை பொருந்தி வருகிறதா?

பிறப்புரிமையால் கவிதாதேவி தனக்கே உரியவள் என்று கருதிக்கொண்டு உள்நாட்டு மாப்பிள்ளை மாடப்பனைப் பார்த்தோம். வெளியூரிலிருந்து வந்து, சின்னக் குயிலியின் கருத்தைக் கேட்காமல், நிச்சயதார்த்தம் செய்துகொண்ட ஒரே காரணத்தால் தனக்கே அவள் முற்ற முழுக்கச் சொந்தம் என்று கருதிக் கொள்ளும் குரங்கினக் கவிக்கூட்டத்தை(!) அடுத்து அடையாளம் காணுவோம்.

(ஆசிரியருடைய சொற்பொழிவுகளின் சுருக்கத்தை இங்கே சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவர் ஆற்றிய உரைகளின் ஒலிப்பதிவுகளில் எஞ்சியிருப்பவை முழுமையும் தமிழ் மரபு அறக்கட்டளை அமைத்துள்ள நாகநந்தி மணிமண்டபத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. குயில் பாட்டைப் பற்றி நாம் தற்போது பேசிக்கொண்டிருப்பது 'சுபமங்களா சொற்பொழிவுகள்' என்ற பிரிவின்கீழ் தொகுக்கப்பட்டுள்ளன. www.tamilheritage.org வலைப் பக்கத்தில் எட்டுச் சொற்பொழிவுகள் உள்ளன. முழுமையையும் கேட்கலாம். நாம் தற்சமயம் பேசிக்கொண்டிருக்கும் பகுதி, இறுதி இரண்டு சொற்பொழிவுகளில் வருகிறது. நேரடியாகக் கேட்டு, ஆசிரியருடைய சொல் நேர்த்தியை நேரடியாக அனுபவித்துப் பாருங்களேன்.)

தொடரும்...

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com