'ஹரிகதை' சுசித்ரா
ஹரிகதை உலகின் இசையரசிகளாய்த் திகழ்ந்தவர்கள் சரஸ்வதிபாய், மணிபாய், கமலாபாய். இவர்களில் கமலாபாய் எனப்படும் தஞ்சாவூர் டி.ஆர். கமலா மூர்த்தி, 80 வயதைக் கடந்தும் ஹரிகதை செய்து வருகிறார். அவரது பேத்தி சுசித்ரா, கர்நாடக சங்கீதம், ஹரிகதை, திரையிசை என மூன்று துறைகளிலும் அழுத்தமாகக் கால் பதித்து வருகிறார். 22 வயதே ஆன இவர், பால இசையரசி, திருமுறை இசைமணி, நந்தாதீபம், சங்கீத ஞானபூஷணி, யுவகலாபாரதி, யுவசக்தி உட்படப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். குடியாத்தம் காளிகாம்பாள் கோயிலின் ஆத்ஸான வித்வம்சினி. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், திரைப்படப் பின்னணிப் பாடகி, பக்திச் சொற்பொழிவாளர் என வேறுபட்ட பாத்திரங்களை அநாயாசமாகச் செய்கிறார். அவரைத் தென்றலுக்காகச் சந்தித்தோம். அதிலிருந்து....

*****


கே: இசைப் பயணம் தொடங்கியது எங்கே?
ப: என்னுடைய பாட்டி கலைமாமணி டி.ஆர். கமலா மூர்த்தி நாடறிஞ்ச ஹரிகதை வித்வான். என்னுடைய அம்மாவழிப் பாட்டி சாவித்ரி ராமநாதனுக்கும் இசைஞானம் அதிகம். நல்லாப் பாடுவாங்க. பெற்றோர்களும் இசையார்வம் உள்ளவங்க. மூன்று வயதில் சென்னைத் தொலைக்காட்சியின் கண்மணி பூங்காவில் பாடினேன். வளர வளர டி.வி.யில் ஒரு பாட்டைக் கேட்டாலே அது என்ன ராகம்னு என்னால் சொல்ல முடிஞ்சது. முதல் குரு இசைமேதை டி.என். சேஷகோபாலனின் மனைவியான ஸ்ரீமதி சுதா சேஷகோபாலன். அதற்குப் பிறகு டி.என். சேஷகோபாலனிடம் இசை கற்றுக்கொண்டேன். பின்னர் அபஸ்வரம் ராம்ஜியின் இழை மழலைகளில் நான் சேர்ந்தேன். நிறைய நிகழ்சிக்களில் பாடினேன். அவர் அறிமுகப்படுத்தி இசைவாணி திருமதி. பத்மா சாண்டிலயன் கிட்ட சிஷ்யையா சேர்ந்தேன். அவங்க கணவர் கலைமாமணி மிருதங்கமேதை ஸ்ரீமுஷ்ணம் ராஜாராம் கிட்டயும் கத்துக்கறேன். ராகம், தானம், பல்லவியை திருச்சி ஜே. வெங்கட்ராமன் சார்கிட்ட கத்துக்கறேன். இப்போ கொஞ்ச நாளா அனுராதா ஸ்ரீராம், ஸ்ரீராம் பரசுராம் கிட்ட ஹிந்துஸ்தானி, கஜல் கத்துக்கறேன்.

கே: எப்போதுமுதல் கச்சேரி செய்ய ஆரம்பித்தீர்கள்?
ப: ஏழு வயசுலேர்ந்து கச்சேரி பண்ண ஆரம்பிச்சேன். ஆனால் அது மனோதர்ம சங்கீதம் இல்லை. பக்திப் பாடல்கள், தெய்வீகத் துதிகள் இப்படித்தான் பாடினேன். மனோதர்ம சங்கீதமாப் பாட ஆரம்பிச்சது எட்டாவது படிக்கும்போதுதான். ராகம், ஆலாபனைன்னு பாட ஆரம்பிச்சு கோவில்கள், சின்னச் சின்ன சபாக்கள், கல்யாணங்கள்னு நிறையப் பாடினேன். படிப்படியா கச்சேரி பண்ண ஆரம்பிச்சேன்.

கே: ஹரிகதையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
ப: கர்நாடக இசைக் கச்சேரி நிறையச் செய்து கொண்டிருந்தேன். அபஸ்வரம் ராம்ஜியின் மனைவி ஷோபா ராம்ஜி என்னிடம் ஹரிகதை கற்றுக்கொள் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். ராம்ஜி, வருடா வருடம் 'பால பிரும்மம்' என்ற இசை நிகழ்ச்சி நடத்துவார். ஒருமுறை அதுக்கு உமையாள்புரம் சிவராமன், பரூர் அனந்தராமன் எல்லாம் வந்திருந்தாங்க. அவர்களிடம், 'கமலா மூர்த்தியின் பேத்தி' என்று சொல்லி ராம்ஜி என்னை அறிமுகப்படுத்தினார். "நீயும் உன் பாட்டி மாதிரி ஹரிகதை பண்ணுவியா?"ன்னு என்கிட்ட கேட்டாங்க. "கச்சேரி பண்ணிக் கொண்டிருக்கிறேன்" என்று மட்டும் சொன்னேன். "உங்க பாட்டி எவ்ளோ பெரிய ஹரிகதை வித்வம்ஸினி. அந்தக் கலை அவங்களோட போயிடக் கூடாது. அதை வளர்க்கற பொறுப்பு உன்கிட்ட இருக்கு. அவசியம் அதை நீ கத்துக்கணும்" அப்படின்னு சொன்னாங்க.

நான் இதைப் பாட்டியிடம் சொன்னேன். "அது ரொம்ப கஷ்டம். வேண்டாம். அதுக்கு இப்போ அவளோ வரவேற்பு இல்லை. நீ கச்சேரி பண்றதுதான் நல்லது" அப்படின்னு பாட்டி சொன்னாங்க. அப்போ விசாகா ஹரி எல்லாம் ஹரிகதைக்கு வராத சமயம். அப்புறம் அவங்க வந்து நிறைய ஹரிகதை பண்ண ஆரம்பிச்சதும் மக்களுக்கு அதுமேல ஒரு ஈர்ப்பு வந்தது. அப்பக்கூட பாட்டி எனக்குக் கத்துக்கொடுக்க ஒத்துக்கலை. அப்புறம் ராம்ஜி சார், ஷோபா ராம்ஜி, என்னோட குரு பத்மா சாண்டில்யன், ராஜாராம் சார்னு எல்லோரும் பாட்டிக்கிட்ட பேசிதான் ஒத்துக்க வச்சாங்க. ஆரம்பத்துல எனக்கு அதுல அவ்ளோ ஈடுபாடு இல்லை. ஆனா ஷோபா ராம்ஜி, குறிப்பிட்ட தேதிக்குள்ல நீ கத்துக்கிட்டு அரங்கேற்றம் பண்ணியாகனும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க. அப்புறம் தான் நான் சீரியஸா அதை கத்துக்க ஆரம்பிச்சு அரங்கேற்றம் பண்ணினேன்.

கே: முதல் ஹரிகதைக் கச்சேரி எப்போது?
ப: 'சீதா கல்யாணம்'தான் நான் முதன்முதலில் பண்ணியது. நவம்பர் 2007ல் பாரத் கலாச்சாரில் அது அரங்கேற்றம் ஆனது. திருமதி ஒய்.ஜி.பி., நல்லி தலைமையில் அது நடந்தது. அதற்கு நல்ல வரவேற்பு. கமலா மூர்த்தியோட பேத்தி கச்சேரி பண்றாங்கறது மெல்ல மெல்ல எல்லாருக்கும் தெரிய வந்து, கேக்க நிறையப் பேர் வர ஆரம்பிச்சாங்க. இதுனால நான் கச்சேரி பண்றது குறைஞ்சு போய், ஹரிகதை பண்றது ஜாஸ்தியா ஆயிடுச்சி. அப்புறம் பத்திரிகை, டி.வி. மீடியா சப்போர்ட்டால ஹரிகதைக்கு நிறைய சான்ஸ் வர ஆரம்பிச்சது. இப்போ நான் ஹரிகதை, கச்சேரி, டி.வி. இசை நிகழ்ச்சி எல்லாமே பண்றேன்.

கே: உங்கள்மீது மீடியா கவனம் எப்படித் திரும்பியது?
ப: பொதிகை 'புதுப்புனல்' நிகழ்ச்சில நான் ஹரிகதை பண்ணினேன். அப்புறம் நிறைய நிகழ்ச்சிகள். இப்போ விஜய் டிவில 'பக்தித் திருவிழா' செய்யறேன். அதுக்கு நாவண்ணன் அவங்கதான் காரணம். 'பக்தி' நிகழ்ச்சியோட தொகுப்பாளரா இருந்தேன். ஒருநாள் நாவண்ணன் சார், "பக்தித் திருவிழாவில நீ ஹரிகதை சொல்லணும்மா"ன்னு சொன்னார். பெரிய வித்வான்களெல்லாம் போன் பண்ணிப் பாராட்டினாங்க. ஜெயா டி.வி.யில் ஸ்ரீகவி ஐயா வாய்ப்பு கொடுத்தாங்க.

கே: எந்தெந்த தலைப்புகளில் 'ஹரிகதை' பண்றீங்க...?
ப: கல்யாண சரித்திரம்னு பார்த்தால் சீதா கல்யாணம், மீனாட்சி கல்யாணம், வத்சலா கல்யாணம், ஆண்டாள் கல்யாணம், ருக்மிணி கல்யாணம், பார்வதி பரிநயம், சுபத்ரா கல்யாணம், வள்ளி திருமணம், ஸ்ரீமதி கல்யாணம் இப்படி நிறைய பண்றேன். அப்புறம் பக்தர்கள் வரிசையில் நாயன்மார்களான கண்ணப்ப நாயனார், திருநீலகண்ட நாயனார், அப்பூதி அடிகள், சிறுத்தொண்டர், வள்ளலார் சரித்ரம் இந்த மாதிரி பண்றேன். வைஷ்ணவ சம்பந்தமான சரித்திரங்கள்னு பார்த்தா ராமாயணம், மஹாபாரதம், பத்ராசல ராமதாஸர் சரித்ரம், ராமகிருஷ்ண பட்டாபிஷேகம் அப்படின்னு பண்றேன். இப்படிப் பல தலைப்புகள் இருக்கு.

கே: இதுக்கெல்லாம் நிறையப் படிக்கணும் இல்லையா?
ப: ஆமா. ஸ்கூல், காலேஜ் படிக்கறப்போ ஷிட்னி ஷெல்டன், டான் ப்ரௌன், வோட்ஹவுஸ்னு இவங்களோடதான் எப்பவும் இருப்பேன். ஹரிகதைக்கு வந்த பின்னாடி ராஜாஜியோட சக்கரவர்த்தித் திருமகன், பெரிய புராணம், தேவார, திருவாசகங்கள்னு படிக்க ஆரம்பிச்சேன். அடிப்படையில் படிக்கறது எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்கறதுனால எல்லாமே எளிதாகிவிட்டது. முக்கியமா, பாட்டி எனக்கு நிறைய தகவல்களைத் தருவாங்க. சீதா கல்யாணம்னு எடுத்துண்டா அதுல தியாகராஜர், வால்மீகி, கம்ப ராமாயணம், துளஸிதாசர், சமர்த்த ராமதாஸர் பாடல்னு நிறைய சோர்ஸ் வரும். இது தவிர ஹரிகதைக்குன்னு உபமானப் பாடல்கள், சரித்திர உபமான பாடல்கள்னு நிறைய உண்டு. எல்லாம் பாட்டி சொல்லிக் கொடுத்திருக்காங்க.

புதுசா ஏதாவது தலைப்புல பேசணும்னா தஞ்சாவூர்ல இருக்கற பாட்டிக்கு போன் பண்ணிக் கேட்பேன். அவங்க எனக்குச் சொல்லுவாங்க. அவங்ககிட்ட இல்லைன்னா சரஸ்வதி மஹால் மாதிரி வேற எங்காவது இருந்தா தேடி எடுத்து வப்பாங்க. ஒரு டைரில எல்லாத்தையும் எழுதி வச்சிருப்பாங்க. சமயத்துல குரல் பதிவு செய்தும் வச்சிருப்பாங்க.

பாட்டிகிட்ட மட்டும் இல்லை. விசாகா ஹரி அவங்ககிட்டயும் கூட நான் கத்துகிட்டு இருக்கேன். பொதுவா ஒரே ஃபீல்டிலே இருக்கறவுங்களுக்கு அவ்வளவா ஒத்துப் போகாது. ஆனா விசாகா ஹரி அப்படி இல்லை. நான் மீராபாய் சரித்திரம் கத்துக்கணும்னு விசாகா ஹரி அக்காகிட்ட போனப்போ, தன்னோட பிஸி ஷெட்யூல்லயும் எனக்கு டைம் ஒதுக்கி சொல்லிக் கொடுத்தாங்க. இதை என்னால மறக்கவே முடியாது. அதுபோல கல்யாணபுரம் ஆராவமுதன் சார், அவரே போன் பண்ணி என்னைப் பாராட்டிட்டு, உனக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் என்கிட்ட தயங்காமக் கேளு. நான் சொல்லித் தரேன்னு சொன்னார்.

கே: கிராமப்புறங்களில் ஹரிகதைக்கு வரவேற்பு உள்ளதா?
ப: நிச்சயமாக. சமீபத்தில் காரைக்குடி கோட்டையூர் அருகே உள்ள வேலங்குடி என்ற ஊருக்குச் சென்றிருந்தேன். கண்ணப்ப நாயனாரின் கதை சொன்னேன். மக்கள் திரளாக வந்து ரசித்துக் கேட்டனர். இதை இடத்துக்கு ஏற்ற மாதிரி செய்ய வேண்டும். இதே ஹரிகதையை மும்பையில் செய்யும்பொழுது அபங்கிற்கும், சமர்த்த ராமதாஸர் கிருதிகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். ஆந்திராவில் தெலுங்கு கீர்த்தனைகள், கர்நாடகத்தில் தாஸர் கிருதிகள் எடுபடும். தமிழ்நாட்டில் நாயன்மார்கள், வள்ளலார், மீனாட்சி கல்யாணம் என்று செய்யலாம். கிராமப்புறம், நகர்ப்புறம் என்றில்லாமல் எல்லா இடங்களிலுமே நல்ல வரவேற்பு இருக்கிறது.

கே: வெளிநாட்டு அனுபவங்கள் குறித்து...
ப: தோஹா பேங்கின் சி.ஈ.ஓ. சீதாராமன் அழைப்பின் பேரில் தோஹா சென்றிருந்தோம். அவர், தோஹா இசைச் சங்கம் மூலமாக எங்களை அழைத்திருந்தார். அங்கே மதசம்பந்தமான சொற்பொழிவு எதுவும் வெளியரங்கில் நடத்தக் கூடாது என்பது சட்டம். அதனால் சீதாராமன் அவர்களது வீட்டிலேயே ஹரிகதைக்கு ஏற்பாடு செய்திருந்தார். நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்தாங்க. இதுமாதிரி ஒரு நிகழ்ச்சியை நாங்கள் கேட்டதே இல்லைன்னு உருகிப் போய்ட்டாங்க. 'இந்தக் கலை இப்போது மீண்டும் உயிர் பெற்று வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது'ன்னு சொன்னாங்க. தமிழ்நாட்டில் அவர்கள் வீட்டு விசேஷ நிகழ்ச்சி எது நடந்தாலும் ஹரிகதைக்கும் முக்கிய இடம் கொடுத்து என்னை அழைக்கிறார்கள். அடுத்தநாள் தோஹாவில் நடத்திய கர்நாடக இசைக் கச்சேரிக்கு மூன்று மடங்கு கூட்டம் வந்தது. அதுபோல கனடா, ஸ்விட்சர்லாந்திற்கு சன் டி.வி. சங்கீத மஹாயுத்தம் நிகழ்ச்சிக்காகப் போயிருக்கிறேன்.

கே: தொலைக்காட்சிக்கு நீங்கள் ஒன்றும் புதியவரில்லை. எப்படி உங்கள் பிரவேசம் ஆனது?
ப: சின்ன வயசுலேர்ந்து நான் நிறைய டி.வி. ப்ரோக்ராம்ல வந்திருக்கேன். முதல்ல சன்டிவி சப்தஸ்வரங்கள்ல கலந்துகொண்டு பாடி ஜெயிச்சேன். அப்புறம் ராஜகீதம் நிகழ்ச்சில ஜெயிச்சேன். சினி மியூசிக் காம்பெடிஷன்ல நான் கலந்துகொண்டதுக்கும், வின் பண்ணதுக்கும் முக்கிய காரணம் சுபஸ்ரீ தணிகாசலம் தான். அவங்க நான் தயங்கிய போதுகூட உற்சாகம் தந்து, பல நிகழ்ச்சிகளில பாட வச்சாங்க. 'அபூர்வ ராகங்கள்', 'ராகமாலிகா'ன்னு நிறைய நிகழ்ச்சிகளில் பாடி பரிசு வாங்கியிருக்கேன். 'ஏர்டெல் ஸ்டார் சிங்கர்' அப்படின்னு ஒரு நிகழ்ச்சி ராஜ் டி.வி.ல வந்தது. அதுல அனுராதா ஸ்ரீராம், ஹரிஷ் ராகவேந்திரா, சிற்பி மூணுபேரும் ஜட்ஜா இருந்தாங்க. அதுல நான் முதலாவதா வந்து, ஒரு யுண்டாய் சாண்ட்ரோ கார் பரிசா வாங்கினேன். எஸ்பிபி சாரோட என்னோடு பாட்டுப் பாடுங்கள் நிகழ்ச்சில பாடியிருக்கேன்.

எனக்குத் திருப்பு முனைன்னு சொன்னா அது 'சங்கீத மகாயுத்தம்' தான். அதுல விஜய் ஏசுதாஸ், மது பாலகிருஷ்ணன் எல்லாம் கலந்துக்கறாங்கன்னு சொல்லி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சர்ச்சில் பாண்டியன் என்னைக் கூப்பிட்டார். நான் மது பாலகிருஷ்ணன் பாடல்களின் ரசிகை என்பதால் உடன் ஒப்புக்கொண்டேன். எனக்கு அதுல முதல் பரிசு கிடைத்தது. தேவன், அனுபமா, மாதங்கின்னு பலர் நட்பும் கிடைச்சது. சிவ சிவாங்குற படத்துல ஒரு பாட்டும் பாடியிருக்கேன்.

கே: மறக்க முடியாத மேடை அனுபவங்கள் பத்தி சொல்லுங்களேன்....
ப: செம்பூர் முருகன் கோயிலில் முதன் முதலில் நான் மீனாட்சி கல்யாணம் சொல்லிக் கொண்டிருந்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு அம்மா வந்தாங்க. சுமார் 95 வயசு இருக்கும். நெற்றி நிறைய குங்குமம். 9 கஜம் மடிசார் வைத்துக் கட்டிக் கொண்டிருந்தாங்க. ஜிமிக்கி, புல்லாக்கு, மூக்குத்தி எல்லாம் போட்டுக் கொண்டிருந்தார். நல்ல பழுத்த பழமாக இருந்தார். என்னிடம் வந்தவர், "நீ மீனாட்சி கல்யாணம் பண்ணினியேம்மா. என் பேரும் மீனாட்சிதான். நானும் மதுரைலேர்ந்துதான் வரேன்" என்றார். அவர் கணவருக்கு 102 வயது. கனகாபிஷேகம் செய்து கொண்டவர். அவர்கள் இருவரும் என்னை ஆசீர்வதித்தனர். சாட்சாத் அந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரரே ஆசிர்வாதம் செய்ததைப் போல உணர்ந்தேன்.

கே: பாட்டியைத் தவிர, உங்களுக்கு ஊக்கசக்தியாக இருப்பவர்கள் யார்?
ப: என் குருநாதர்கள் ஸ்ரீமுஷ்ணம் ராஜாராம், பத்மா சாண்டில்யன் ஆகியோர் என்னை மகள் மாதிரிப் பார்த்துக் கொள்கிறார்கள். நான் என் வீட்டில் இருப்பதைவிட அவர்கள் வீட்டில் இருப்பதுதான் அதிகம். ராஜாராம் சார் மிருதங்க வித்வான் என்றாலும் எனக்கு ஹரிகதையில் நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறார். எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். ஆனால் தெலுங்கு, கன்னடம், மராத்தியிலும் ஹரிகதை உண்டு. அவர் எனக்குக் கன்னடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஹரிகதையில் ஏழடி நடை, ஐந்தடி நடை, ஊசி நடை என்று பல உண்டு. அது எப்படிப் போடுவது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதுபோல புரந்தரதாஸர் கீர்த்தனைகள் பற்றி, தாஸர் பதங்கள் பற்றி எல்லாம் எடுத்துச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். சேஷகோபாலன் சாரும் என்னை மகள் போல்தான் நடத்தினார். இப்படி பலரது அன்பும் பாராட்டும் எனக்கு ஊக்க சக்தியாக இருக்கின்றன.

கே: எதிர்காலத் திட்டங்கள் குறித்து...
ப: நான் மீனாட்சி காலேஜில் பி.காம் கோல்ட் மெடலிஸ்ட். தற்போது எம்.பி.ஏ. (பொதுநலம்) செய்து கொண்டிருக்கிறேன். எம்.ஏ. மியூசிக் படித்திருக்கிறேன். இசைத் துறையில் எம்.பில், பிஎச்.டி செய்ய விருப்பம். அதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டிருக்கிறேன். சங்கீதத்தில் நிறையச் சாதிக்க வேண்டும். அதற்குப் பெரியவர்களின் ஆசி எனக்கு வேண்டும்.

சுசித்ரா பேசுவது சங்கீத உரையாகவே இருக்கிறது. குரலில் இசை, முகத்தில் உணர்ச்சிகளின் கலவை. "ரமண மஹர்ஷி, சாயிபாபா, அரவிந்தர் போன்ற மகான்களைப் பற்றியும் ஹரிகதை செய்யுங்கள்" என்று சொல்லி வாழ்த்தி விடைபெற்றேன். ஒரு மந்திரப் புன்னகையோடு விடை தருகிறார் சுசித்ரா. இவரால் ஒரு பழமையான பாரம்பரியக் கலை துளிர்த்து வளம் பெறுகிறது என்ற நிறைவுடன் கிளம்பினேன்.

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


அம்மா செய்த அற்புதம்
என்னுடைய தோழி ஸ்ரீபுரத்துக்குப் பாடச் சென்றாள். நான் துணைக்குச் சென்றிருந்தேன். சக்தி அம்மாவை நான் எனது ஏழாவது வயதிலேயே தரிசனம் செய்திருக்கிறேன். அப்போது நான் பாடிய கேட்சடை அவரிடம் கொடுத்து ஆசி வாங்கினேன். அவர் அதில் குங்குமம் வைத்து, தன்னுடைய ரேகை அதில் படும்படியாக அழுத்தி, "எம்.எஸ். அம்மா மாதிரி பெரிய ஆளாக வருவாய்" என்று சொல்லி ஆசிர்வதித்துக் கொடுத்தார். அதை நான் இப்போது என் தோழியிடமும், அங்குள்ள பக்தர்களிடமும் சொன்னேன். அதைக் கேட்டுக் கொண்டிருந்த பக்தர்களில் ஒருவர் சக்தி அம்மாவிடம் அதைச் சொன்னார். உடனே சக்தி அம்மா என்னை விசாரித்தார். "நான் கச்சேரிகள் செய்து கொண்டிருக்கிறேன். ஹரிகதையும் செய்வேன்" என்று சொன்னேன். "ஹரிகதையிலிருந்து எனக்கு ஏதாவது சொல்" என்றார். உடனே நான் "செழியர்பிரான் திருமகளாய்க் கலைபயின்று முடிபுனைந்து" என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணத்தில் இருந்து பாடிச் சில நிமிஷங்கள் ஹரிகதை சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம்.

அன்றைக்கு பிரதோஷம். அடுத்த பிரதோஷம் அவரது ஜயந்தி. அன்று வந்து ஹரிகதை செய்ய வேண்டும் என்று சொன்னார். ஜயந்திக்குச் செல்வதற்குள் எனக்குப் பல நல்ல விஷயங்கள் நடந்தன. விகடன் பிரசுரத்தின் 'யூத் ஜுகல்பந்தி' என்ற புத்தகத்தில் என்னைப்பற்றி எழுதினார்கள். அடுத்த நாள் கல்கி அட்டைப்படத்தில் நான்! அந்தப் பூரிப்புடன் சக்தி அம்மாவின் ஜயந்தி விழாவில் ஹரிகதை செய்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் அவர் தங்கியிருந்த 'ஸ்ரீபவன்' ஆசிரமத்திற்கு நான், அம்மா, அப்பா எல்லோரும் சென்றோம். சக்தி அம்மா பூஜை செய்து கொண்டிருந்தார். பூஜை முடிந்ததும் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென என்னிடம் "கையை நீட்டு" என்றார். நான் குங்குமம் தரப் போகிறார் என எண்ணி வலக்கையை நீட்டினேன். "இரண்டு கையையும் நீட்டு" என்றார். மெல்ல மெல்ல ஒரு விக்ரகம் அவர் கையிலிருந்து தோன்றி என் கைக்கு வந்தது. அது ஒரு மகாலக்ஷ்மி விக்ரகம். உடனே சக்தி அம்மா, "இதை உனது வீட்டுப் பூஜையறையில் வைத்து மந்த்ராட்சதை போட்டு பூஜை செய்து வா. என்றும் மகாலக்ஷ்மியின் அனுக்ரகம் உனக்கு இருக்கும். எல்லா வளமும் கிடைக்கும். நல்லா எம்.எஸ். சுப்புலட்சுமி மாதிரி பெரிய ஆளா வருவே. ஹரிகதைய மட்டும் என்றைக்கும் விட்டுவிடாதே. அதுதான் அம்மாவுக்கு சந்தோஷம் தரக்கூடியது" என்று சொல்லி ஆசிர்வதித்தார். நாங்கள் அப்படியே பிரமித்துப் போய்விட்டோம். இன்றும் என் வீட்டுப் பூஜை அறையில் அந்த விக்ரகத்தை வைத்து பூஜித்து வருகிறேன்.

சுசித்ரா

© TamilOnline.com