மிச்சிகனில் மூன்று அரங்கேற்றங்கள்
மிச்சிகனின் 'இந்து டெம்பிள் ரிதம்ஸ்' நாட்டியப் பள்ளியின் மாணவியர் மூவரின் அரங்கேற்றங்கள் சிறப்பாக நடந்தேறின. குரு சுதா சந்திரசேகரின் மாணவிகளான நித்யா ராமமூர்த்தி, கயல் முத்துராமன், அஷோமதி முல்லின் ஆகியோர் மே 28, ஜூன் 18, ஜூலை 9 ஆகிய நாட்களில் ஆன் ஆர்பரில் உள்ள டௌன்ஸ்லி அரங்கில் மேடை ஏறினார்கள். 'நாட்டிய வேத பாரதி' திருமதி சுதா சந்திரசேகர், தஞ்சாவூர் (திருவிடைமருதூர்) பாணியின் சிறந்த குருக்களில் ஒருவர். இதுவரை 79 மாணவிகளை அரங்கேற்றியவர். மும்பை ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பரதநாட்ய கலாமந்திரின் குரு கல்யாணசுந்தரம் நிகழ்ச்சிகளுக்குத் தலைமை விருந்தினராக வந்திருந்தார்.

நித்யா ராமமூர்த்தியின் அரங்கேற்றம் கச்சிதமான ஜதிகளுடனும் ஸ்திரமான அர்தமண்டலத்துடனும் ஜொலித்தது. தஞ்சாவூர் பாடாந்தரத்தின் கணபதி, கார்த்திகேய மற்றும் நடராஜ கவுத்துவங்களில் தொடங்கி, கண்ட தாளத்தில் அலாரிப்பு, சங்கராபரணத்தில் ஜதீஸ்வரம், 'வேணுகானனை' என்னும் ராகமாலிகை சப்தம் இவற்றை நித்யா திருத்தமாக ஆடினார். முருகனைப்பற்றி 'நீ மனம் இறங்கி', ஆண்டாள் கவுத்துவத்துக்கு ஆடியபின் நித்யா மூன்று திருப்பாவைகளுக்கு அபிநயித்தார். அதற்குப் பின், 'வெள்ளைத் தாமரை' என்னும் சுப்ரமணிய பாரதியின் பீம்ப்ளாஸ் பாடலுக்கு ஆடினார். 'சபாபதிக்கு வேறு தெய்வம்', 'அசைந்தாடும் மயில் ஒன்று கண்டேன்' ஆகியவற்றுக்குப் பின் முடிவாக ஹம்சாநந்தி ராகத்தில், சதுஸ்ர ஜாதி சங்கீர்ண தாளத்தில் தில்லானா பளிச்சென்று ஜொலித்தது. தீர்மானம் சுத்தமாகவும், கண் அசைவுகள் கூர்மையாகவும் இருந்தன.

கயல் முத்துராமனின் அரங்கேற்றம் முகபாவம் நிறைந்து, அற்புதமான பாதவேலையுடன் இருந்தது. கணபதி, கார்த்திகேய, நடேச கவுத்துவங்களுடன் தொடங்கி, கண்ட ஜாதி அலாரிப்பு, கமாஸ் ராகத்தில் ஸ்வரஜதியை நன்றாக ஆடினார். 'கந்தனே, உன்னை எந்த நேரமும்' என்னும் ராகமாலிகை சப்தத்தில், "மன்மதன் உரம்தனில் மலர்ச் சரங்கள் விடுவதால் விரஹம் ஏறுதே, என் செய்வேன்" என்னும் வரியை மிகுந்த ஏக்கத்துடன் அபிநயித்தார். 'மோஹமான' என்னும் கடினமான பைரவி வர்ணம் அவரது திறமைக்குச் சவாலாக அமைந்து சோபிக்கச் செய்தது. 'வாரணம் ஆயிரம்' நாச்சியார் திருமொழி, கோபால் வெங்கடராமன் இயற்றிய காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சியைப் போற்றிய 'கல்யாணி மாலா' அழகோ அழகு. 'ஓடோடி வந்தேன் கண்ணா' என்னும் பதத்திற்குப் பிறகு, பூர்வி கல்யாணியில் 'ஆனந்த நடமாடுவார் தில்லை', நவரச கானடா ராகத்தில் மிஸ்ரசாபு தாள தில்லானா ஆகியவற்றுக்குப் பின்னர் ஒரு விறுவிறுப்பான குறத்தி ஆட்டத்தொடு நிறைவுற்றது.

அஷோமதி மொல்லினின் அரங்கேற்றத்தைத் தனிப்படுத்திக் காட்டியது அவரது வயதை மீறிய முதிர்ச்சி. மஹா விஷ்ணுவைப் புகழ்ந்து தோடய மங்களத்துடன் ஆரம்பித்து, பளிச்சென்று பைரவியில் ஜதீஸ்வரம் தொடர்ந்தது. 'மந்தர கிரிதர' என்னும் ராகமாலிகை சப்தத்தில், அஷோமதி, மேடையை நன்றாகப் பயன்படுத்தி, பொருத்தமான முகபாவங்களை உபயோகித்து, கிருஷ்ணரையும் யசோதையையும் சித்திரித்தார். அடுத்து 'அப்பன் அவதரித்த' என்னும் அரிய வர்ணத்துக்கு அபிநயித்தார். இதில் அவரது அடவுகளிலும், தீர்மானங்களிலும் இருந்த சௌக்கியம் மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அடுத்து இரண்டு நடனங்கள் அஷோமதியின் சௌராஷ்டிர பாரம்பரியம் மற்றும் சொந்த ஊரான மதுரைக்கு அஞ்சலி செலுத்தின. 'நீத வத்தன் கம்சிலி அவ்ரா சோ, அம்போ மோகோ' என்ற சௌராஷ்டிரப் பாடலில், குழந்தை கிருஷ்ணன் கோபிகைகள் தன்னை அநியாயமாகப் பழிக்கிறார்கள் என்று யசோதையிடம் புகார் செய்கிறான். இதற்குக் கிருஷ்ணனின் அப்பாவித்தனம் மற்றும் கோபம் ஆகியவற்றை அழகாகக் காட்டி அஷோமதி பார்வையாளர்களைக் கவர்ந்துவிட்டார். 'தேவி நீயே துணை' என்னும் பாபநாசம் சிவன் பாடல், 'நந்தீச பஞ்சகம்' பதம், பரஜ் ராகத்தில் 'ஆடிக்கொண்டார்' என்னும் பதம் ஆகியவற்றுக்குப் பிறகு பஹுதாரி ராகத் தில்லானாவுக்கு ஆடினார். முடிவாக மூன்று திருப்புகழ்ப் பாடல்களுக்கு ஆடினார்.

மூன்று நிகழ்ச்சிகளிலும் சியாட்டில் வித்யா சேகர் (பாட்டு), லாஸ் வேகஸ் கோபால் வெங்கடராமன் (பாட்டு), கனெட்டிகட் பிரபா தயாளன் (வீணை), மிச்சிகன் சாம் ஜயசிங்கம் (மிருதங்கம்), அக்ஷயா ராஜகுமார் (வயலின்), அனிருத் ஸ்ரீதர் (புல்லாங்குழல்), கிருத்திகா ராஜகுமார் (பின்பாட்டு), நித்யா ராமமூர்த்தி (பின்பாட்டு) என்று இவர்களோடு குரு சுதாவின் நட்டுவாங்கம் வெகு சிறப்பு. லாஸ் வேகஸின் கோபால் வெங்கடராமன் ஒவ்வொரு அரங்கேற்றத்துக்கும் இயற்றிய தில்லானாவில் மாணவியின் குடும்பத்தினர் பெயர்கள், சொந்த ஊர்பற்றிய விவரங்களை அழகாகக் கொடுத்திருந்தார். மேலும் விவரங்களுக்கு www.hindutemplerhythms.com

சித்ரா நாராயண்,
மிச்சிகன்

© TamilOnline.com