வரேண்யா ரஞ்சனி பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 20, 2011 அன்று ஹுஸ்டனில் உள்ள கப்ளான் தியேட்டர், ஜூயிஷ் கம்யூனிடி சென்டரில் குரு பத்மினி சாரி அவர்களின் நிருத்யா ஸ்கூல் ஆஃப் டான்ஸ் பள்ளியின் மாணவி வரேண்யா ரஞ்சனி ஹரிஹரனின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. மீனாக்ஷி கோயிலின் மாணிக்க பட்டர் அர்ச்சனை செய்து சலங்கையை குருவிடம் கொடுத்தார். கணேச துதி, திருப்புகழுடன் நிகழ்ச்சி துவங்கியது. அடையாறு லக்ஷ்மணின் ஆபோகி ராக ஜதிஸ்வரத்துக்கு ஏற்ப ரஞ்சனி ஆடியது அருமை. பாபநாசம் சிவனின் 'ஸ்வாமி நான் உந்தன் அடிமை' என்ற நாட்டைக்குறிஞ்சி வர்ணத்துக்கு அயராமல் ஆடிப் பாராட்டுப் பெற்றார் ரஞ்சனி.

சூடிக்கொடுத்த சுடர்க் கொடி ஆண்டாளாகத் தோன்றி, 'தூமணி மாடத்து', 'ஒருத்தி மகனாய்ப் பிறந்து', மாலே மணிவண்ணா' என்ற மூன்று பாசுரங்களுக்கும் அடுத்தடுத்து ஆடியது சிறப்பு. நிகழ்ச்சியின் சிகரமாக அமைந்தது தஞ்சாவூர் சங்கர ஐயர் இயற்றிய, ரஞ்சனி, ஸ்ரீ ரஞ்சனி என 4 ராகங்களில் அமைந்த பாடலுக்கு சாந்த லலிதையாகவும், கர்ஜிக்கும் காளியாகவும் மாறிமாறி ரஞ்சனி அபிநயித்ததுதான். இறுதியில் வந்த பாலமுரளி கிருஷ்ணாவின் கதனகுதூகலத் தில்லானா நல்ல விறுவிறுப்பு.

பெங்களூருவிலிருந்து வந்திருந்த சங்கீதக் குழுவில், வாய்ப்பாட்டு பாடிய புஸ்தகம் ரமா, தீப்தி, புல்லாங்குழல் வாசித்த கே.எஸ். ஜய்ராம், மிருதங்க வாசித்த ஜனார்த்தன ராவ், 'ரிதம் பாட்' வாசித்த ஜி.எஸ். பிரத்யும்னா யாவரும் சிறப்பாகச் செய்தனர். வரேண்யா தன் சாதனைக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்க, பெற்றோர் ராதிகா, ரமேஷ் யாவருக்கும் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது.

15 வயதே நிரம்பிய வரேண்யா 9 ஆண்டுகளுக்கும் மேலாக பரத நாட்டியம் கற்று வருகிறார். தவிர ஜாஸ், பாலே போன்ற நடனங்களையும் முறைப்படிக் கற்றவர். டுஷேன் அகாடமியில் 11ம் வகுப்பு பயில்கிறார். பியானோவில் தேர்ச்சி மிக்கவர். மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார்.

மாலதி ஹரிஹரன்,
ஹூஸ்டன், டெக்ஸாஸ்

© TamilOnline.com