கைத்துப்பாக்கி காப்பாற்றாது
காந்திஜி தென்னாப்பிரிக்காவில் வசித்த காலம். அவர் கறுப்பர்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதால் அவருக்கு அங்கே நிறைய எதிர்ப்பு இருந்தது. எனவே காந்தியின் பாதுகாவலராக காலன்பார்க் என்பவர் எப்போதும் கூடவே இருந்தார்.

ஒருநாள், காந்திஜி வெளியே போகும்பொழுது அணிவதற்காகக் கோட்டை எடுத்தார். கோட் வழக்கத்தைவிட கனமாக இருந்தது. பையைப் பார்த்தார். அதிலே துப்பாக்கி இருந்தது. உடன் காந்திஜி காலன்பார்கை அழைத்தார். "என் பையிலே ஏன் இதை வைத்தீர்கள்?" என்றார்.

"உங்கள் பாதுகாப்புக்காகத்தான்" என்று சொன்னார் காலன்பார்க் பணிவுடன்.

"ஓ. என்னை எதிர்களிடமிருந்து காக்க விரும்புகிறீர்கள் இல்லையா? சரிதான். என்னைக் காக்கவேண்டிய கடவுளின் அதிகாரத்தை நீங்களே எடுத்துக்கொண்டு விட்டீர்கள். நீங்கள் இருக்கும்வரை நான் என்னுடைய வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, அப்படித்தானே! கடவுளின் எல்லாச் செயலையும் நீங்களே செய்து விடுவீர்கள் இல்லையா?" என்றார்.

காலன்பார்க் பதில் சொல்ல முடியாமல் நின்று கொண்டிருந்தார்.

"இதோ பாருங்கள்... நீங்கள் செய்திருப்பது பகவானிடம் நான் கொண்ட பக்தியையே அவமதிப்பதாகும். என்னைப் பற்றி அக்கறை கொள்பவர் அந்த பகவான் ஒருவரே. எனவே என்னைக் காப்பாற்றுகிற கவலையை விடுங்கள். கடவுளிடம் என்னைக் காப்பாற்றும் பொறுப்பை விட்டுவிடுங்கள். இந்தக் கைத்துப்பாக்கி ஒருபோதும் என்னைக் காப்பாற்றாது" என்றார்.



© TamilOnline.com