துப்புரவுத் தொழிலாளி காந்தி
ஜுலை 1947ல் காந்திஜி கொல்கத்தாவிற்கு வந்தார், காரணம் இந்து முஸ்லிம் பிரச்சனை. அவர்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்த காந்திஜி தீவிரமாக உழைத்தார். ஒரு முஸ்லிம் பெண் வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் சதீஷ் சந்திரதாஸ் குப்தா என்பவரின் ஆசிரமத்தில் சிலநாள் தங்கினார். வங்காளப் பிரதமராக இருந்த சோராவதி என்பவரை அழைத்து தன்னோடு சேர்ந்து ஒற்றுமைக்கு வழிவகுக்க உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். தனித்தனியாக வந்து தம்மைச் சந்தித்த இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் காந்தி ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஓய்வே இல்லாமல் மூன்று நாட்களாக இது தொடர்ந்தது.

ஒருநாள் மதியம் காந்திஜி கழிவறைக்குச் சென்றிருந்தார். அவர் வரும்போது அவரது செயலாளர் எதிரே சென்று, "இங்கே எனக்கு எந்த வேலையுமில்லை. சும்மாவே இருக்க மிகவும் சிரமமாக இருக்கிறது" என்றார். "என்னது வேலையில்லையா, எத்தனையோ வேலைகள் இருக்கின்றனவே! இப்போதுதான் நான் கழிவறைக்குப் போய்வந்தேன். போ, அதைப் போய் சுத்தம் செய்!" என்று மிகக் கடுமையாகக் கூறினார் காந்தி.

காந்திஜி அந்த அளவுக்கு சமத்துவம் பேணுபவராக இருந்தார். தோட்டி வந்துதான் கழிவறையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்பதில்லை. யார் வேண்டுமானாலும் அதைச் செய்யலாம். அவரே பலமுறை அவ்வாறு கழிப்பிடங்களைச் சுத்தம் செய்திருக்கிறார். பல சேரிப்பகுதிகளுக்குச் சென்று அவ்வேலையை எந்தவித முகச் சுளிப்பும் இல்லாமல் செய்திருக்கிறார். அதனால்தான் அவர் மகாத்மா.



© TamilOnline.com