இதயம் எங்கே?
அடர்ந்த காடு ஒன்றில் குரங்குக் கூட்டம் ஒன்று ஆனந்தமாக வாழ்ந்து வந்தது. அங்கே பலவகைப் பழ மரங்கள் இருந்ததால் உணவுக்கு எந்தப் பஞ்சமும் இல்லை. காட்டில் நதி ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. குரங்குகள் நதியருகே உள்ள மரத்தில் ஏறுவதும் தண்ணீரில் குதிப்பதுமாய்ப் பொழுதைப் போக்கி வந்தன. குரங்குகளின் உல்லாசத்தைக் கண்டு அந்த ஆற்றில் வசித்த முதலைக்குப் பொறாமை ஆகிவிட்டது. 'நாம் உணவுக்காக தினந்தோறும் இந்த ஆற்றில் சுற்றிச் சுற்றி வருகிறோம். ஆனால் இருந்த இடத்திலேயே இந்தக் குரங்குகளுக்கு எல்லாம் கிடைக்கிறதே' என்று பொறாமைப் பட்டது.

ஒருநாள் குரங்கு ஒன்று ஆற்றில் தண்ணீர் பருகிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட முதலை அதனருகே போய், "என்ன குரங்காரே, சௌக்யமா?" என்றது.

"ஓ நலமே!" என்றது குரங்கு.

"நல்லது. ஆனால் பாவம் நீங்கள். சரியான உணவுதான் உங்களுக்குக் கிடைப்பதில்லை" என்றது முதலை.

"இல்லை. இல்லை. இங்கே மா, பலா, அத்தி, புளி என்று நிறைய மரங்கள் இருக்கின்றன. நாங்கள் அந்தப் பழங்களை தின்றுகொண்டு ஆனந்தமாகவே இருக்கிறோம்" என்றது குரங்கு.

"அப்படியா? ஆனால் எதிரே தெரிகிறதல்லாவா கரை. அதை ஒட்டி ஓர் அழகான காடு இருக்கிறது. அங்கே நிறைய வாழை, கொய்யா மரங்கள் உள்ளன. அந்தப் பழங்கள் எவ்வளவு சுவையாக இருக்கும் தெரியுமா?. நீங்கள் தின்று பார்த்ததுண்டா?" என்று கேட்டது முதலை.

"இல்லையே! ஆற்றைத் தாண்டி எப்படி அக்கரைக்குப் போவது? ஆசைப்பட்டு என்ன பயன்?" என்றது குரங்கு.

"அப்படி நினைககாதே நண்பா! நான் எதற்கு இருக்கிறேன். என்மீது ஏறிக்கொள். நான் உன்னை அக்கரைக்கு அழைத்துப் போகிறேன். நீ வேண்டியதைத் தின்றுவிட்டு வா. மறுபடி நான் உன்னை இக்கரைக்குக் கொண்டு வந்துவிடுகிறேன்" என்றது முதலை.

இப்படி வஞ்சகமாகப் பேசி குரங்குகளைக் கொண்டு சென்று நட்டாற்றில் கவிழ்த்துக் கொன்றுவிடத் திட்டமிட்டது முதலை. அதன் பேச்சை நம்பிய குரங்கும் அதன் முதுகில் ஆவலுடன் அமர்ந்து கொண்டது. முதலை நீரில் நீந்த ஆரம்பித்தது.

நட்டாற்றுக்கு வந்ததும் குரங்கைக் கீழே தள்ளிவிடும் நோக்கத்தில் உடம்பை அப்படியும் இப்படியுமாக ஆட்டிக் குலுக்கியது முதலை. பயத்தில் குரங்கு முதலையை இறுகப் பற்றிக்கொண்டது. அப்போது அங்கே மற்றோர் முதலை வந்தது. இந்த முதலை செய்யும் வேலையைப் பார்த்து ஆச்சரியப்பட்ட அந்த முதலை காரணம் கேட்டது.

அதற்கு முதலை, "இந்தக் குரங்குகள் தினமும் கவலையில்லாமல் வாழ்ந்து வருகின்றன. அதைப் பார்க்க எனக்கு மிகவும் எரிச்சலாக இருக்கிறது. அதனால்தான் இந்தக் குரங்கை ஏமாற்றி அழைத்து வந்தேன். இதனை ஆற்றில் அமிழ்த்திக் கொல்லப் போகிறேன்" என்றது.

உடனே அந்த முதலை, "அட முட்டாளே! குரங்குகளின் இதயம் எவ்வளவு சுவையாக இருக்கும் தெரியுமா? அதைச் சுவைக்காமல் ஆற்றில் தள்ளிக் கொல்வதால் என்ன லாபம். வா. இருவரும் சேர்ந்து இதனைக் கொன்று இதன் இதயத்தை உண்போம்" என்றது.

அதனைக் கேட்டுத் திடுக்கிட்டது குரங்கு. தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி வருந்தியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, "அடடா! நீங்கள் பாவம்" என்றது.

"ஏன் அப்படிச் சொல்கிறாய்?" என்று ஒரே நேரத்தில் இரண்டு முதலைகளும் கேட்டன.

"நான் மரத்துக்கு மரம் தாவித் திரிவதால், இதயத்தை முட்கள் கிழித்து விடுமோ என்று அஞ்சி, அதோ அக்கரையில் தெரிகிறதே, அந்தப் பலா மரத்தில் வைத்திருக்கிறேன்" என்றது.

குரங்கின் பேச்சை நம்பிய முதலை, "சரி சரி. அதைக் கொண்டுவந்து எங்களிடத்தில் கொடுத்து விடு. நாங்கள் உன்னைக் கொல்ல மாட்டோம்" என்றது.

"ஓ. தாராளமாக. என்னை அந்தப் பலா மரத்தின் அருகே அழைத்துச் செல்லுங்கள்" என்றது. உடனே முதலை அந்தக் கரையருகே சென்றது.

ஒரே தாவாகத் தாவி ஒரு கிளையில் ஏறிக்கொண்ட குரங்கு, "முட்டாள் முதலைகளே! உங்களுக்கு என் இதயமா வேண்டும்? இதோ பிடியுங்கள்" என்று சொல்லிச் சில முற்றிய பலாப் பழங்களைப் பறித்து வீசியது. மற்றக் குரங்குகளும் சேர்ந்து கொண்டன.
குரங்குகளின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாத முதலைகள் வேகமாக நீந்திப் போய் மறைந்தன.

சுப்புத் தாத்தா

© TamilOnline.com