இதயநோய்
தெற்காசிய மக்களிடையே மிக அதிகமாகக் காணப்படும் நோய்களில் ஒன்று மாரடைப்பு. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்பட்ட இந்த நோய் தற்போது இளவயதுக்காரர்களை, குறிப்பாக முப்பத்தைந்து வயதுக்கு மேலான ஆண்களை அதிகம் தாக்குகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. மாரடைப்புக்குப் பல புதிய வைத்தியங்கள் கண்டு பிடிக்கப்பட்டாலும் மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்கிறது. இதன் வீரியம் அதிகமானதால் உடனடி சிகிச்சை வழங்காவிட்டால் பின்விளைவுகள் அதிகம். அதனால் மாரடைப்பு வராமல் தவிர்க்கும் முறைகளை அறிந்து கொள்வதே சாலச் சிறந்தது.

யாருக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்
  • புகை பிடிப்பவர்கள்
  • நீரிழிவு நோய் உள்ளவர்கள் (Diabetes Mellitus)
  • உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் (High Blood pressure)
  • கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் (High Cholesterol)
  • ஆண்கள்
  • குடும்ப வரலாறு (50 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கோ அல்லது 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கோ குடும்பத்தில் மாரடைப்பு வந்திருந்தால் அது கவனிக்கத்தக்கது.)


இதில் முதல் நான்கையும் நம்மால் தவிர்க்க அல்லது கட்டுப்படுத்த முடியும். கடைசி இரண்டும் தவிர்க்க முடியாத மரபணு சம்பந்தப்பட்டவை. முதலில் தவிர்க்க முடிந்தவற்றைப் பார்ப்போம்.

புகை பிடித்தல்
இதுவொரு முக்கிய காரணம். இதனால் வரும் பின்விளைவுகள் எண்ணிலடங்கா. புற்றுநோய் முதல் இதயநோய் வரை எல்லாவற்றிற்கும் காரணமான இந்தப் பழக்கத்தை அறவே விடுவது நல்லது. புகையிலை, சிகரெட், பீடி என்று எதிலும் இதன் வீரியம் குறைவதில்லை. இந்தப் பழக்கத்தை விட்டவுடன் பின்விளைவுகளின் சாத்தியக்கூறுகள் குறைவது குறிப்பிடத் தக்கது. இதனால் இன்றே இப்போதே விட்டுத் தள்ளுங்கள்.

நீரிழிவு
வெறும் வயிற்றில் ரத்தத்தில் சர்க்கரையில் அளவு 126க்கு மேல் இருந்தால் அது நீரிழிவு நோய். 105 முதல் 126 வரை இருந்தால் அது சர்க்கரை நோய் வரப்போவதற்கான அறிகுறி. பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் ரத்தச் சர்க்கரை அளவைச் சோதித்துப் பார்ப்பதில்லை. 25 வயதுக்கு மேலானோர் அடிக்கடி பார்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, குடும்ப வரலாறு உள்ளவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் இருப்பவர்கள் சர்க்கரையின் அளவை மருந்துகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம்
ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பது நல்லது. 120/80க்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. 140/90க்கு மேல் இருந்தால் கண்டிப்பாக கவனம் தேவை. உப்பு குறைத்து உண்ண வேண்டும். தவறாமல் மருந்து சாப்பிட வேண்டும். தினம் உடற்பயிற்சி தேவை.

கொலஸ்ட்ரால் மிகுதல்
இதில் நல்ல கொழுப்பு (HDL), கெட்ட கொழுப்பு (LDL) என்று இரண்டு ரகங்கள். இவற்றில் நல்ல கொழுப்பு அதிகமாகவும் கெட்ட கொழுப்பு குறைவாகவும் இருக்க வேண்டும். நல்ல கொழுப்பு 45க்கு மேலாகவும், கெட்ட கொழுப்பு 130க்குக் குறைவாகவும் இருக்க வேண்டும். கொழுப்பு அதிகமாகி அது ரத்த நாளங்களின் உட்பகுதியில் படிந்துவிடும். பின்னர், அவை பிரிந்து இதயத்தின் ரத்த நாளங்களை அடைத்துவிடுவதால் ஏற்படுவதே மாரடைப்பு. ஆகவே கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது மாரடைப்புக்கான சாத்தியக்கூறை அதிகப்படுத்துகிறது.

சமீபத்தில் அமெரிக்க அரசாங்கம் மருத்துவ உலகின் உதவியோடு ஒரு மில்லியன் மாரடைப்பைக் குறைக்க முயற்சி ஒன்றை கொண்டுள்ளது. இதன் மூலம் மாரடைப்பின் எண்ணிக்கை கணிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் விவரங்களுக்கு www.hhs.gov என்ற வலைதளத்தை அணுகவும். மாரடைப்புக்கு இலக்காவோரின் எண்ணிக்கை குறைய அரசாங்கமும் மருத்துவர்களும் உதவலாம். ஆனால் அவரவர்கள் வீட்டுச் சமையலறையில் இது ஆரம்பிக்க வேண்டும். உணவில் உப்பு குறைப்பதும், கொழுப்பு குறைப்பதும், சர்க்கரை அளவாக உண்ணுவதும், உடற்பயிற்சி செய்வதும், புகை பிடிப்பதை நிறுத்துவதும் நம் கையில் உள்ளது. வசதிகள் பெருகும்போது உணவில் கொழுப்பு அதிகரிப்பதும் உடற்பயிற்சி குறைவதும் இயல்பு.

இதயநோயை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முடிந்தவரை தெற்காசிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மாரடைப்புக்கு பலியாவோரின் எண்ணிக்கையைக் குறைப்போம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com