தென்றல் பேசுகிறது....
அமெரிக்க அரசின் 2012ம் ஆண்டு வரையான செலவுக்கு 1,043 ட்ரில்லியன் டாலர் என்று ஒரு தொகையை குடியரசுக் கட்சி ஆளும் கட்சியோடு ஏற்றுக்கொண்டது. அப்போதே ஆண்டுக்குத் தேவையான செலவினத்தை அனுமதித்திருக்க முடியும். அப்படிச் செய்யாமல், தந்தையிடம் பாக்கெட் மணி கேட்டுக் கையைப் பிசைந்து கொண்டு நிற்கும் மகனைப் போல ஒபாமா அரசைச் சிக்கலில் ஆழ்த்தும் நோக்கத்தோடு மீண்டும் ஒரு நிதி ஒதுக்கீட்டுத் தடைக்கல்லை ஏற்படுத்தியுள்ளது குடியரசுக் கட்சியின் கை ஓங்கியுள்ள காங்கிரஸ். இந்த நிச்சயமற்ற தன்மை நாட்டுக்குப் பெரும் தீங்கு விளைவிப்பதாகும். சூழல் பாதுகாப்பு ஏஜன்சி காற்று மாசுபடுதலைத் தடுக்கச் செலவிடும் பணத்தையும், அடிமட்ட வருவாய் கொண்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டச் சத்துத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டையும் வெகுவாகக் குறைக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சி கூறிவிட்டது. பல அரசுத் துறைகளிலும் பணி செய்யும் ஊழியர்கள் தமது வேலை எப்போது போகுமோ என்று அவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கிறது இத்தகைய போக்கு. போதாக்குறைக்கு, டாலருக்கு எதிராகச் சீனாவின் யுவான் நாணயத்தின் சரிவை நிறுத்தி, மீண்டும் சீனாவின் பொருளாதார வலுவை அதிகரித்துள்ளது. சீனா போன்ற ஆதிக்க மனப்பான்மை கொண்ட நாடு உலக அரங்கில் வலுப்பெறுவது அமெரிக்காவுக்கு எந்த வகையிலும் நன்மை தருவதல்ல. அடுத்த காய் நகர்த்தலின் ஆதாயத்தை மட்டுமே யோசித்து, தேசத்தின் நீண்ட கால நலனைக் கட்சியின் தற்காலிக வெற்றிகளுக்குப் பணயமாக வைக்கும் போக்கு மாறவேண்டும். இல்லாவிட்டால் உலக அரங்கில் அமெரிக்கா தலை குனிவைச் சந்திக்க நேரலாம். அந்த நிலை எல்லாத் தரப்பினருக்கும், ஏன், உலகின் எல்லா ஜனநாயக சக்திகளுக்கும், இழப்பாக முடியும்.

*****


பொழுது விடிந்து பொழுது போனால் ஊழலைப் பற்றிப் படித்து அலுத்துப் போன நமக்கு, சச்சின் டெண்டுல்கர் பற்றிய ஒரு செய்தி அமுதமாக வந்து காதில் விழுந்தது. மும்பையில் அவர் தனக்கென்று ஒரு வீடு கட்டிப் புதுமனை புகுந்திருக்கிறார். ஆனால் நமது மகிழ்ச்சி அதைப்பற்றியதல்ல. முன்னரே விளையாட்டுத்துறை விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் அவருக்கு ஒரு ஃப்ளாட்டைக் கொடுத்திருந்தது. சொந்த வீடு கட்டியதும் அதை விளையாட்டுத் துறைக்குத் திரும்பக் கொடுத்துவிட்டாராம் சச்சின். “வேறொரு தகுதியான விளையாட்டு வீரருக்கு அது கிடைக்கட்டுமே” என்று சொல்லியிருப்பது நமக்கு மகிழ்ச்சி தருகிறது. தோற்றுப் போனாலும் தமது அரசு குவார்ட்டர்ஸைக் காலி செய்யாத எம்.பி.க்கள், திரைமறைவில் வீடுகள்/மனைகள் ஒதுக்கீடு வாங்கிக்கொள்ளும் அதிகாரிகள், மந்திரிகள், அவர்களின் நண்பர்கள் பட்டாளம் என்று படித்துப் படித்து அலுத்துப் போன நமக்கு மாஸ்டர் பிளாஸ்டரின் இந்தப் பெருந்தன்மை அவர்மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, தான் ஒரு புதிய பகுதியில் வீடு கட்டத் தொடங்குவதற்கு முன்னால், அண்டை அயலாருக்குத் தன் கைப்பட, “நான் வீடு கட்டுவதால் உங்கள் பகுதியின் அமைதி சிறிது காலம் பாதிக்கப்படுவதற்கு என்னை மன்னியுங்கள்” என்று கடிதம் எழுதி அனுப்பினாராம். நூறு சதங்கள் அடிப்பதைவிடப் பண்பும் பண்பாடும் போற்றத் தக்கன. செல்வர்க்கே செல்வம் தகைத்து என்று வள்ளுவர் கூறியது இதைத்தானோ!

*****


வெண்கலக் குரலில் செந்தமிழ் இசைக்கும் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம்; குழந்தைகளுக்கு இந்திய மொழிகள், இலக்கியம், கலாசாரம் ஆகியவற்றைச் சின்மயா மிஷன் மூலம் பால விஹார் அமைப்பை நிறுவிக் கற்றுக் கொடுக்கும் உமா ஜெயராசசிங்கம்; தமிழின் பாவகைகளைச் சீர், தளை பிரித்து இனங்காட்டும் மென்பொருளான 'அவலோகிதம்' படைத்துள்ள 23 வயது இளைஞர் வினோத் ராஜன் - இவர்களின் நேர்காணல் இந்த இதழுக்கு அணி சேர்க்கிறது. உங்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கும் குறுநாவல், சிறுகதை, சமையல் குறிப்பு, தொடர்கள் என்று பிற அம்சங்களும் உள்ளன.

*****


சிறுகதைப் போட்டிக்கு அமெரிக்கா, இந்தியா மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கதைகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. பலர் முதல்தடவையாக எழுதுபவர்கள். புலம்பெயர்ந்த தமிழரின் படைப்பூக்கத்தை வளர்ப்பதில் தென்றல் மகிழ்ச்சி அடைகிறது. அவர்களுக்கு ஒரு மேடையாகவும் பாலமாகவும் இருப்பதில் பெருமை கொள்கிறது.

வாசகர்களுக்கு விஜய தசமி, தீபாவளிப் பண்டிகை வாழ்த்துக்கள்.


அக்டோபர் 2011

© TamilOnline.com