நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும், வளையாத முதுகும், வலிக்காத மூட்டும்!
தடுக்க முடிந்தால் தடுப்போம். முடியாது போனால், முயல்வோம். சென்ற மாதக் கட்டுரையில், பக்கவாதத்தைத் தடுக்கும் முயற்சிகளைக் கண்டோம். பக்கவாதம் ஏற்பட்டு விட்டால், இழந்த செயல்பாட்டை மீட்கவும் இன்றைய மருத்துவம் உதவுகிறது. அதுவே 'தொழில் சார்ந்த சிகிச்சை' (Occupational Therapy). ஏப்ரல் மாதம் Occupational Therapy மாதமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த முறை சிகிச்சையை பல விதமாக பிரிக்கலாம்.

*நோய்வாய்பட்டவரின் இழந்த செயல் பாட்டை மீளச் செய்வது.
*தொழில் ரீதியாக ஏற்படும் நோய்களைத் தடுக்க செய்வது.
*தவிர்க்க முடியாத, வளர்ச்சி குன்றிய அல்லது குறைபட்ட குழந்தைகளைத் தேர்ச்சி அடையச் செய்தல்.

இது போல் பலதரப்பட்ட நிலைகளில் இந்தச் சிகிச்சை முறை உதவுகிறது. இவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

இழந்த செயலை மீளச்செய்தல்

இதில் பல விதமான நோய்கள் அடங்கும். முக்கியமாக, பக்கவாதம் ஏற்பட்டு உடலில் ஒரு பாகம் செயலிழந்தால், அந்த பாகத்துக்கு தகுந்த முறையில் செயலாற்றப் பயிற்சி தருவது இந்தத் துறை வல்லுனர்களின் வேலை. உதாரணமாக, கை, கால் செயல் இழந்தால், இவற்றின் தசைநார்கள் பழுதாகாமல் செயல்படுத்தும் வழிகளை உடலியல் சிகிச்சையாளர் (physical therapist) சொல்லிக் கொடுப்பர். ஆனால், இந்த தொழில்சார் சிகிச்சையாளர் அந்தப் பழுதடைந்த தசை நார்களைக் கொண்டே நமது அன்றாட வேலைகளை எப்படிச் செய்வது என்று சொல்லிக் கொடுப்பர். பார்வைக் கோளாறு ஏற்பட்டாலோ, இரண்டு இரண்டாகத் (Double vision-diplopia) தெரிந்தாலோ, ஒருவரது நடமாட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அப்போது, ஒரு கண்ணில் திரை அணிவித்து, மறு கண் முலம் செயல்படக் கற்றுத் தருவர்.

பேசும் சக்தியை இழந்து விட்டால், எழுத்து மூலமும், சைகை மூலமும் செயல்படக் கற்றுத் தருவர். விரல்நுனி நரம்புகள் பாதிக்கப் பட்டால், Neuropathy ஏற்பட்டால், இவர்களது சிகிச்சை பெரிதும் உதவும். சிந்திக்கும் திறன் பாதிக்கப்பட்டாலோ, அல்லது ஞாபக சக்தி பாதிக்கப்பட்டாலோ, இந்தத்துறை வல்லுனர் களின் உதவியோடு, அன்றாட வாழ்க்கை யைப் பிறருக்கு பாரமின்றி நடத்த முடியும்.
தொழில் மூலம் ஏற்படும் நோய்கள்

நாம் செய்யும் தொழிலின் காரணமாக ஏற்படும் நோய்களையும் வலிகளையும் குறைக்க இவர்கள் உதவுகின்றனர். குறிப்பாக, முதுகு வலி, கழுத்து வலி, கை நரம்புகள் பாதிக்கப்படுதல், உள்ளங்கைக் குடைவு நோய்க்குறிகள் (Carpel Tunnel Syndrome), மன அழுத்தம் அதிகமாதல், தலைவலி, கண்வலி அல்லது பார்வை பாதிக்கப்படுதல் போன்ற நோய்கள் வேலை சார்ந்து ஏற்படுபவை. இவை தவிர, பணியிடத்தில் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கும் இரசாயன அளவையும் இந்த வல்லுனர்கள் ஆராய்கின்றனர். இவர்கள் தொழில்சார் உடல்நலப் (Occupational Health) பிரிவைச் சார்ந்தவர். Ergonomics என்று வழங்கப்படும் துறையைச் சார்ந்த வல்லுனர்கள், இந்த வகை நோய் களைத்தடுக்க உதவுகின்றனர்.

தசைநார் மற்றும் நரம்பு நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்டால் அவற்றை குணப்படுத்தவும், இந்த வல்லுனர்களை நாடவேண்டும். குறிப்பாக, பணியிடத்தில் முதுகுவலி, கழுத்துவலி ஏற்படாமல் இருக்கச் சில அறிவுரைகள்:

1. கூடுமானவரை, ஒரே இடத்தில், ஒரே மாதிரி 2 மணி நேரத்துக்கு மேல் அமராதீர்கள்.
2. முடிந்த வரை உங்கள் தசைகள் இறுகாமல் இருக்க உடற்பயிற்சி செய்த வண்னம் இருங்கள்.
3. குனியும் பொழுது, முட்டி போட்டு அமர்ந்து குனியுங்கள். உங்கள் முதுகை வளைத்துக் குனியாதீர்கள்.
4. கணினியின் மட்டமும், அமரும் நாற்காலி யின் மட்டமும் ஒன்றாக இருக்க வேண்டும்.
5. மணிக்கட்டை மடித்துக் கணினியை உபயோகிப்பதை குறையுங்கள்.
6. கணினி உபயோகிப்பவராக இருந்தால், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்களை ஈரத்துணியால் ஒத்தி எடுங்கள்.
7. நின்றபடி வேலை செய்பவர்கள், ஒரு காலைச் சிறிய முக்காலியில் தூக்கி வைத்து, நின்றபடி செய்யுங்கள்.

இதுபோல் மேலும் பல ஆலோசனைகளைக் காண http://www.aota.org/featured/area6/links/link02ai.aspஎன்ற வலைதளத்தைப் பாருங்கள். இங்கே அவரவருக்கு ஏற்ற சில ஆலோசனைகள் .pdf கோப்புகளாக உள்ளன. அவற்றை நகலெடுத்து, தினமும் காணும் இடத்தில் ஒட்டி வைத்துக்கொள்வது நல்லது. இதனால் நமது posture மற்றும் பழக்கங்களை மாற்ற இயலும்.

இது போன்ற அலோசனைகளும், சிகிச்சை முறையும் பெற OT வல்லுனர்களை அணுக வேண்டும். இவர்கள் evaluate, advice, educate and teach என்ற நான்கு முறைகளிலும் தேர்ச்சி பெற்று, உதவி செய்ய வல்லவர்கள். இதையும் தவிர, மன அழுத்தத்தைக் குறைப்பது மிகவும் அவசியமாகிறது. வேலைப் பளுவினால் மன அழுத்தம் அதிகமாதல் இன்றைய காலகட்டத்தில் எங்கும் காணப்படுகிறது. அழுத்தம் அதிகமாகி, நாளடைவில் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. தலைவலி, வயிற்று வலி, கை கால் குடைச்சல் போன்ற நோய்களையும் அதிகரிக்கிறது. Chronic Fatigue Syndrome என்று சொல்லப்படும் நிரந்தரச் சோர்வு நோயும், Fibromyalgia என்று சொல்லப்படும் நோயும் அழுத்தம் அதிக மாவதால் ஏற்படக்கூடியவை. ஆகையால், இந்த அழுத்தத்தைக் குறைப்பது மிகவும் அவசியமாகிறது. அவ்வப்போது விடுமுறை எடுத்துக் கொள்ளுதல், வீட்டுக்கு வந்த பின்னர் வேலையை மறந்திருத்தல், உடற்பயிற்சி செய்தல், யோகம் அல்லது தியானம் செய்தல் ஆகியவை அழுத்தத்தைக் குறைக்கும். புகை பிடித்தலும், மது அருந்ததுதலும் இதனைக் குறைப்பது போலத் தோன்றுவது ஒரு மாயையே.

குழந்தைகளுக்கு உதவுதல்

பள்ளியிலும், குழந்தைகள் காப்பகத்திலும் OT நிபுணர்கள் செயல் புரிகின்றனர். உடல், மனம் வளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கும், ஊனமுற்ற குழந்தைக ளுக்கும், சிகிச்சை அளிக்கின்றனர். இந்தத் துறையைப் பற்றியும், தொழில் சார்ந்த நோய்கள் பற்றியும் அறிந்து கொள்ள கீழ்க்கண்ட வலை தளங்களைப் பார்க்கவும்:
http://www.aota.org
http://en.wikipedia.org/wiki/Occupational_therapy
http://www.kidshealth.org/parent/system/ill/occupational_therapy.html

மரு வரலட்சுமி

© TamilOnline.com